Thursday, 5 July 2018

கருப்பனார் சுவாமி திருக்கோவில்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஆர்.புதுப்பட்டியில் இருக்கிறது ‘கள்ளவழி கருப்பனார் சுவாமி கோயில்’’. சுற்றிலும் பசுமை பரப்பும் வயல்வெளிகள் விரிந்து கிடக்க, கம்பீரமாக நிற்கிறது ஒரு குன்று. அந்த குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார் கள்ளவழி கருப்பனார் சுவாமி. ஆனால் அடிவாரத்திலும் கோயில் அமைத்து கருப்பனாரை வழிபடுகின்றனர் உள்ளூர் மக்கள் என்பது வியப்பு. ஒரு காலத்தில் இந்த பகுதி அடர்ந்த வனமாக இருந்தது. கொடிய மிருகங்கள் பயிர்களை நாசம் செய்வதும், உயிர்களை பலியாக்குவதும் தொடர்கதையானது. இதனால் செய்வதறியாது திகைத்த மலைகிராம மக்கள், அங்குள்ள குன்றின் மீது ஒன்றாக ஏறி நின்று, காவல் தெய்வமான கருப்பனார் சுவாமியிடம் கண்ணீர் மல்க முறையிட்டனர்.

இதற்கடுத்த நாட்களில் மிருகங்களின் நடமாட்டம் குறைந்தது. பயிர்களோ முன்பிருந்ததை விட செழிப்பாக வளர்ந்தது. இதையடுத்து கருப்பனார் சுவாமியை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அன்று தொடங்கி இன்றுவரை உயிர்களோடு பயிர்களையும் காத்து நிற்கும் ஒப்பற்ற தெய்வம் கள்ளவழி கருப்பனார் சுவாமி என்பது தொடரும் நம்பிக்கை. பாறை இடுக்குகள் வழியாக சென்றால் மட்டுமே குன்றின் மேல் உள்ள கருப்பனார் சுவாமியை வழிபட முடியும். இந்த வழியை ஆரம்ப காலத்தில் கொள்ளையர்கள் பயன்படுத்தியதால் கள்ளவழி என்று அழைக்கப்பட்டது. அங்கு அருள்பாலிக்கும் கருப்பனார் சுவாமியை கள்ளவழி கருப்பனார் சுவாமி என்று மக்கள் அழைக்க ஆரம்பித்ததாக தகவல்கள் கூறுகிறது.

பண்டை காலத்தில் எல்லையில் அமர்ந்து ஊர்காத்து, பயிர்களை பாதுகாக்க வீட்டுக்கு ஒருவர் நேர்ந்து விடப்படுவது வழக்கம். அப்படிச்சென்று மக்களுக்காக உயிர் துறந்த வீரர்களை எல்லைச்சாமியாகவும், காவல் தெய்வமாகவும் வழிபடும் வழக்கம் இருந்தது. இந்த வகையில் ஊர்காக்க உயிர் துறந்த ஒரு மாவீரனின் அம்சம் தான் கள்ளவழி கருப்பனார் சுவாமி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலைகிராம மக்களின் காவல் தெய்வமான கருப்பனார் சுவாமியிடம் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் குறைகளை முறையிட்டு தீர்வு காண்பது சிறப்பு. தங்கள் விளைநிலத்தில் எதை பயிரிட்டாலும், அதை அறுவடை செய்தவுடன் கருப்பனார் முன்பு படையல் இடுகின்றனர். அதன்பிறகே அடுத்தடுத்த பணிகளை தொடங்குகின்றனர். இதேபோல் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் கருப்பனார் சுவாமியிடம் தெரிவித்த பிறகே நடக்கும். தமிழர்களின் பாரம்பரியமான தை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கருப்பனார் சுவாமிக்கு நடக்கும் முப்பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆடு, கோழிகளை பலியிட்டு, அதை சமைத்து, ஊருக்கே வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இதேபோல் ஆட்டு ஈரலை தீயில் சுட்டு சுவாமிக்கு படையலிடும் ‘சுடுவான் பூஜை’ என்ற நூதன வழிபாடும் நடக்கிறது. இதுகுறித்து ஆண்டாண்டு காலமாய் கருப்பனாரை வழிபடும் பக்தர்கள் கூறுகையில், ‘‘நம் முன்னோர்கள் உணவுகளையும், மாமிசங்களையும் நெருப்பில் வாட்டி வேகவைத்து உண்டனர். காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது. இப்படி நெருப்பில் சுடும் போது அதன்சுவை அலாதியானது. அந்த வகையில் எங்கள் மூதாதையரான கருப்பனார் சுவாமிக்கு சுடுவான் பூஜை நடத்துகிறோம். முப்பூஜையில் பலியிடப்படும் ஆட்டின் ஈரலை தனியாக எடுத்து அதை நெருப்பில் சுட்டு கருப்பனாருக்கு படையலிட்டு வழிபடுகிறோம். பின்னர் அதனை பக்தர்களுக்கு பிரித்து கொடுக்கிறோம். இதனை உண்பதால் மனதைரியம் அதிகரிக்கும். தீய சக்திகள் எதுவும் அண்டாது. உடல்நலம் மேலோங்கும் என்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment