ஆன்மிக பூமியான புதுச்சேரியில் சித்தர்கள் பலர் வாழ்ந்து மறைந்துள்ளனர். அந்த வகையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை வாழைக்குளத்தில் உள்ள அருட்குரு அக்காசுவாமிகள் கோயில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தல வரலாறு:
குரு அக்கா சுவாமிகள் கி.பி.19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வார்கோவிடை நகரத்தில் புகழ்மிக்க செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். அவர் இயற்பெயர் மாசிலாமணி (எ) கண்ணையன். குடும்பத்தை துறந்து இலங்கையிலிருந்து இந்தியா வந்த குரு அக்கா சுவாமிகள் புதுச்சேரி மாநிலம் கடற்கரையை ஒட்டியுள்ள கோயிலில் மனோன்மணியம்மனை வழிபட்டு இங்கேயே தங்கி மக்களுக்கு வைத்தியம் செய்து வந்தார். அதனாலேயே இப்பகுதி வைத்தியகுப்பமாகி, காலப்போக்கில் வைத்திக்குப்பமானது. தன்னை வழிபடும் பக்தர்களை எல்லாம் மதிக்கும் நிமித்தமாக பாலினம் பாராமல் அனைவரையும் அக்கா, அக்கா என்று அழைத்ததனால் அவர் அக்கா சுவாமிகள் என அழைக்கப்பட்டார். கி.பி. 1870 ப்ரமோதூத ஆண்டு ஆனித்திங்கள் உத்திர நட்சத்திரத்தன்று தனது முதன்மை சீடரான அருட்சித்தர் நாராயணசுவாமியை அழைத்து தான் ஜீவ சமாதி அடைவதாக கூறி, அவ்விடத்தில் சிவலிங்கம் வைத்து வழிபடுமாறு அறிவித்து இறை நிலையை அடைந்தார்.
மனோன்மணி அம்மன்:
மிகவும் கிடைப்பதற்கு அறிய பாணலிங்கத்தை அவரது ஜீவ சமாதியின் மேல் வைத்து பூஜிக்கப்பட்டு வருவதும், அருட்குரு அக்காசுவாமிகள் வணங்கி வந்த மனோன்மணியம் மனும் இறைவியாக பிரதானமாக காட்சியளிப்பதும் தனி சிறப்பாகும். முதன்மை சீடரான நாராயணசுவாமிகள் கி.பி.1904 குரோதி ஆண்டு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் இறைநிலையை அடைந்தார். அக்கா சுவாமிகள் உருவாக்கிய மகாயந்திரம் தற்போதும் மனோன்மணி அம்மன் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
தெய்வீக அம்சங்கள்:
இக்கோயிலில் மனோன்மணி அம்மன் சன்னதி, நாராயணசுவாமிகள் சித்தர் பீடம் ஆகியவற்றுடன் கமல விஜயகணபதி, பழனியாண்டவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், லட்சுமி, சரஸ்வதி மற்றும் அன்னபூரணி, நவக்கிரகங்கள், நடராஜர், அகத்தியர், நால்வர், நந்தியம் பெருமான், நாகர் ஆகிய சன்னதிகளும் கோயிலை சுற்றி அமைந்துள்ளன. கோயிலின் தென்மேற்கு பகுதியில் அத்திமரமும், வடமேற்கு பகுதியில் வில்வமரமும், கிழக்கு பகுதியில் அரசமரமும், வேப்பமரமும் பின்னி பிணைந்து வளர்ந்து வருவது தெய்வீக அம்சமாகும்.
திருமண தடை நீங்கும்:
திருமண தடை, பித்ரு சாபம், நாக தோஷம் உள்ளிட்டவை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் திரளான பக்தர்கள் இங்கு வந்து பூஜை செய்கின்றனர். ஆண்டுதோறும் ஆனித் திருமஞ்சனத்தன்று குரு அக்கா சுவாமிகளுக்கு மகா குருபூஜையும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று சித்தர் நாராயண சுவாமிகளுக்கு குரு பூஜையும், மனோன்மணி அம்மனுக்கு நவராத்திரி பெருவிழாவும் வெகு விமரிசையாக நடக்கிறது. இதேபோல் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு ஆண்டுதோறும் ஆறுமுறை சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
குறைவற்ற செல்வம் தரும் தலம்:
மேலும், சித்ரா பவுர்ணமியில் விளக்கு பூஜை, மகா சிவராத்திரி, மாசிமகம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் 1008 சங்காபிஷேகம், பங்குனி உத்திரம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை மனோன்மணி அம்மனுக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடக்கிறது. இக்கோயிலுக்கு கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குரு அக்கா சுவாமிகள் எப்போதும் நிறைவற்ற செல்வங்களை தருவார் என்பது ஐதீகம்.
செல்வது எப்படி?
புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள வாழைக்குளம் பகுதியில் அழகுற அமைந்துள்ளது அருட்குரு அக்கா சுவாமிகள் திருக்கோயில். பேருந்து, ஆட்டோ வசதி உண்டு...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment