கீழகோயில்,
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது ராமானுஜம்புதூர். இங்கு செம்பராபுரிகுளம் கரையில் வீற்றிருக்கும் சுடலைமாடசுவாமி, கரையடிசுடலை மாடசாமி என்று அழைக்கப்படுகிறார். கீழகோயில் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இக்கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. அப்போது சாமி அருள் வந்து ஆடும் பெரும்படையான் என்பவர் பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறிவருகிறார். நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலுக்கு கொடிமரம் வெட்ட மூன்று மாட்டுவண்டிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காரையார் மலைக்குச் சென்றனர். மரத்தை வெட்டும் முன் மரம் வெட்ட வந்தவர்களில் ஒருவர் சொரிமுத்தையன் கோயிலில் சுடலைமாட சாமி சந்நதி முன்பு கீழே இருந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூச, மறு நிமிடமே அருள் வந்து ஆடினார்.
அப்போது அருகே இருந்தவர்கள் காரணம் கேட்க, நான் மாயாண்டி சுடலை, இது என்னுடைய காவலுக்கு உட்பட்ட பகுதியாகும். மரத்துடன் நானும் வருவேன். எனக்கு கொடி மரத்தின் அருகே நிலையம் கொடுக்க வேண்டும் என்றார். அதனை உடனிருந்தவர்கள் ஏற்றுக்கொண்டு நிலையம் இட்டுத் தருவதாக உறுதி கொடுத்தனர். அதன்படி நாங்குநேரியில் தேரடி பகுதியில் சுடலைக்கு பீடம் அமைத்து வழிபட்டனர். கொடியேற்றம் முன்பும், தேரோட்டம் முன்பும் அங்கு சிறப்பு பூஜை தற்போதும் செய்யப்படுகிறது. சுமார் ஐந்து தலைமுறைக்கு முன்னால் ராமானுஜம்புதூரில் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்த புலமாடக்கோனார், நாங்குநேரியில் இருந்து உறவினர் இரண்டு பேருடன் ஆடுகளை பத்திக்கொண்டு ராமானுஜம்புதூர் சென்றார்.
செல்லும்போது தேரடி பகுதியில் இருந்த சுடலைமாடன் ஆடுகளுடன் சென்றுவிட்டார். சிங்கநேரி, குசலன்குளம், அம்பலம், கல்லத்தி, மூலக்கரைப்பட்டி, சவநெல்லிக்குளம், இடக்காடு வழியாக ராமானுஜம்புதூர் சிவன்கோயில் அருகே வந்தபோது புலமாடக்கோனார் தன்னிலை மறந்து விழுந்தார். உடன் வந்த இருவரில் ஒருவர், ஓடிச்சென்று உறவினர்களை அழைத்து வந்தார். அவர்களுடன் அக்கம்பக்கத்தினரும் அவ்விடம் வந்தனர். அப்போது மயங்கி இருந்த புலமாடக்கோனார், ‘‘ஏ, நான் நாங்குநேரியிலிருந்து சுடலை வந்திருக்கேன். எனக்கு கோயில் கட்டி பூஜை செய்யுங்க, உங்களுக்கு வேண்டியதை நான் கொடுப்பேன். காவலாக காத்து நிப்பேன்’’ என்றார்.
கூட்டத்தில் நின்றவரில் ஒருவர் ‘‘சரி உனக்கு எங்க கோயில் கட்டணும் நீயே சொல்’’ என்று கூற, ‘‘மூணு சொளவு எடுத்து வா, அதை நான் மூணு திசைய பாத்து வீசுவேன். மூணாவது சொளவு எங்க விழுதோ அங்க எனக்கு கோயில் கட்ட வேண்டும்’’ என்று கூற, ‘‘சரிப்பா நீ வீசு’’ என்றார். சுடலை வந்திறங்கிய கோனார் முதல் சொளவை வீச, அது தற்போது அத்தியடிசாமி கோயிலிருக்கும் முக்கு (முனை) பகுதியில் விழுந்தது. இரண்டாவது சொளவு தற்போதைய குத்துக்கல் பகுதியில் விழுந்தது. மூன்றாவது சொளவு அப்போதைய சுடுகாட்டு பகுதியில் விழுந்தது. ‘‘ம்.ம்… கட்டுங்கப்பா’’ என்ற படி புலமாடக்கோனார் மீண்டும் மயங்கினார்.
மூன்றாவது சொளவு விழுந்த சுடுகாட்டு அருகே, செம்பராபுரிகுளம் கரையில் கோயில் கட்டப்பட்டது. குளத்தின் கரையில் கோயில் அமைந்ததால் கரையடிசுடலை மாடசாமி என்று இக்கோயில் மூலவர் சுடலைமாடன் அழைக்கப்படுகிறார். கரையடி சுடலைமாடசாமிகோயிலில் சுடலைமாடன், முப்புலிமாடன், புலமாடசாமிக்கு ஒரே பீடமாக ஏணி வைத்து மாலை சாத்தும் எட்டாத பீடமாக அமைக்கப்பட்டுள்ளது. அருகில் பிரம்மராக்குசக்தி (பிரம்மராட்சசி) எதிரே முண்டன், பேச்சியம்மன் உள்ளனர். மேலும் பாதாள கண்டியம்மன், பலவேசக்காரன், பலவேசக்காரி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன. இக்கோயிலில் உள்ள சிவனினைந்த பெருமாளுக்கு சைவ படையல் வைக்கப்படுகிறது. முதல் பூஜையும் அவருக்குத்தான்.
கோயில் உருவாகி இரண்டு தலைமுறை கடந்த பின்பு ஒருமுறை கோயில் கொடைவிழா நடந்து கொண்டிருந்தபோது, மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டாணியாரும், அவரது உதவியாளர் மற்றும் அவரது நண்பர் என மூன்று பேர் சாத்தான்குளத்திற்கு வியாபாரம் சம்பந்தமாக வில் வண்டியில் சென்றனர். பட்டாணியார் மந்திர, தந்திர வித்தைகளில் கை தேர்ந்தவர். ஆவிகளுடன் பேசும் திறன் பெற்றவர் என்று நெல்லை சீமையில் பேரு பெற்ற மந்திர
வாதிகளில் ஒருவராக திகழ்ந்தவர். மதியவேளை ராமானுஜம்புதூர் நெருங்கும்போது கரையடிசுடலை மாடசாமி கோயிலில் சுடலைக்கு ஆடுபவர் ஓ.. ஓ… என்று குரல் கொடுத்தவாறு ஆதாளி போட்டுக்கொண்டு ஆடினார்.
அந்த சத்தம் கேட்டு சாத்தான்குளத்திற்கு பயணித்த பட்டாணியார், ‘‘என்னப்பா இந்த சத்தம், நம்ம மையுக்கும், பையுக்கும் வேல வந்திட்டா’’ என்று கிண்டலாக கேக்க, உடனே உதவியாளர் வண்டியை நிறுத்தி சாலையோரம் நின்று கொண்டிருந்த நபரிடம் என்ன என்று விசாரிக்க, அவர் கரையடி மாடசாமி கோயிலில் கொடைவிழா நடக்கிறது என்றும் அங்கு சாமி, நடந்ததை, நடக்கப்போவதை துல்லியமாக எடுத்துக்கூறுவார் என்றும் கூறினார். இதைக்கேட்டு பட்டாணி நண்பர் ‘‘என்ன அண்ணாச்சி அந்த ஆளு இப்படி சொல்லுதான்.’’ என்று கூற, ‘‘நாம அத உண்மையா என்னான்னு பாத்திருவோம்.’’ என்று பட்டாணியார் கூற, வண்டியை கோயிலுக்கு செல்லும் வழியில் நிறுத்திக்கொண்டு, காளைகளை அப்பகுதியிலுள்ள மரத்தில் கட்டிவிட்டு மூனு பேரும் கோயிலுக்கு சென்றனர். செல்லும் வழியில் பட்்டாணியார் ‘‘நான் குழந்தையாக உருமாறுகிறேன்.
எனக்கு உடம்பு சரியில்லை, குணமாக்குங்கன்னு நீங்க ரெண்டு பேரும் அந்த சாமியாடிகிட்ட கேளுங்க என்ன’’ என்று கூறியவர், அடுத்த இரண்டு நிமிடங்களில் பத்து வயது பாலகனாக உருமாறினார். மூணுபேரும் கோயிலுக்கு சென்றனர். செல்லும் வழியில் கோயில் அருகே மயான வேட்டைக்காக சுடலை வந்து இறங்கி ஆடிக் கொண்டிருந்த புலமாடக்கோனார் வேகமாக வருகிறார். அவரை தடுத்தி நிறுத்திய பட்டாணியாரின் நண்பர், ‘‘அய்யா, புள்ள சீக்கோட கிடந்து வேதனைப்படுது, எப்ப உடம்பு சரியாயி கண்ண துறப்பான் என்று கேட்க, மேனியெங்கும் பூ மாலையும், சந்தனமும் அலங்கரிக்க, தலையிலே செவ்வாடை துணியும், இடது கை இடுக்கிலே தீப்பந்தமும், கையில் திருநீறு கொப்பரையும், வலது கையில் அஞ்சு மணி வல்லயமும் கொண்டு, உதிரம் குடித்த உதடுகளின் ஓரம் ஒரு புன் சிரிப்பை சிந்திய புலமாடக்கோனார்.
‘‘மூடிய கண்ணு மூடுனது தான். குளத்து மடைய போய் பார்க்கச்சொல்லு’’ என்றார். குளத்தின் மடையை பார்த்த மறுநிமிடமே உயிரற்ற நிலையானார் பட்டாணியார். இறக்கும் தருவாயில் எந்த மந்திர சக்தியால் தனது உருவத்தை மாற்றினாரோ, அதே மந்திரத்தால் மீண்டும் உருவத்தை மாற்றிய பட்டாணியார், என்னை மன்னித்துவிடு என்றார். அப்போது சுடலை, நான் அழித்துவிட்டால் மீண்டும் ஆக்க எனக்குத்தெரியாது என்றுரைத்தார். அப்போது பேசிய பட்டாணியார். அப்படியானால் என் இறப்புக்கு பின் ‘‘உன் கோயிலில் எனக்கு பீடம் வேண்டும். அதுவும் உனக்கு எதிரில் நிலையம் வேண்டும் என்னை மன்னித்தால் இவையனைத்தும் எனக்கு கொடுத்து அருளவேண்டும்’’ என்று கேட்க, உன்னை நான் மன்னித்ததற்கு அடையாளமாக, நீ கேட்டதை செய்கிறேன் என்ற சுடலை, கொடை நடத்திய பெரும்படையானிடம் உடனே பட்டாணியாருக்கு பீடம் அமைத்து பூஜை கொடுக்க வேண்டும். என்றார்.
அதன்படி சுடலை சந்நதிக்கு எதிரில் பட்டாணியாருக்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அவரை பக்தர்கள் பட்டாணிசாமி என்று அழைத்து வருகின்றனர். சுடலைக்கு வேட்டி கட்டுவது போல், பட்டாணி சாமிக்கு லுங்கி கட்டப்படுகிறது. அவருக்கு ரொட்டி, சுருட்டு, கருவாடு, மதுபானம், சென்ட் உள்ளிட்டவைகள் படைக்கப்படுகிறது. மேலும் அந்த படையலில் சேவலை சுட்டு வைக்கின்றனர். இந்தக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய், கொடைவிழா நடைபெறுகிறது. இக்கோயில் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ராமானுஜம்புதூரில் செம்பராபுரிகுளம் கரையில் அமைந்துள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment