Saturday, 30 June 2018

முன்னோர் சாபம் விலக்கும் வழிபாடு

பல குடும்பங்களில் தடைகளும், தாமதங்களும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவுகள் உருவாகிக் கொண்டேஇருக்கும். யார் கொடுத்த சாபமோ இப்படி வாழ்க்கை இருக்கின்றதே என்று புலம்புவர்.

சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் எந்த சாபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியும். அதனைக் கண்டறிந்து அதற்குரிய பரிகாரங் களைச் செய்தால் ஓரளவேனும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற இயலும்.

பெற்றோர்களால் ஏற்படும் சாபங்கள் விலக பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும். அவர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பவர் என்பதால் அதற்கு முன்னறிவிப்பாக மூன்றுமுறை அவரது சன்னிதியில் மெதுவாகக் கைதட்டி அதன்பிறகு தகவலை எடுத்துரைத்துப் பிறகு அபிஷேகம் செய்வது நல்லது.

சகோதர சாபம் விலக அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக விஸ்வரூப நந்தி மற்றும் திசைமாறிய நந்தியைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் எளிதில் விமோசனம் பெற இயலும்.

சுமங்கலி சாபம் விலக அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். இதுபோன்று மற்ற சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. அவற்றைச் செய்தால் நிச்சயமாக சாப விமோசனத்தை நாம் பெற இயலும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கார்த்திகை தீபம் காணும் விஷ்ணு ஆலயம்

பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்றருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரி அருகில் இருக்கிறது திருக்கடித்தானம் (திருக்கொடித்தானம்). இங்குள்ள மகாவிஷ்ணு கோவிலில் இருக்கும் இறைவனை ஒரு கணப்பொழுது வேண்டினாலே போதுமாம், வெற்றியும், மோட்சமும் கிடைக்கும் என்கின்றனர்.

தல வரலாறு

இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதன். இவனது நந்தவனத்திலிருந்த அழகிய, நறுமணம் மிகுந்த மலர்கள் தினமும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. அதனால் கோபமடைந்த அரசன், நந்தவனத்தில் இருக்கும் மலர்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அரண்மனைக் காவலர்கள் நந்தவனத்தில் மறைந்திருந்தனர். அவ்வேளையில், அங்கு வந்த சிலர் மலர்களை பறிக்கத் தொடங்கினர். அவர்களை மறைந்திருந்த காவலர்கள் கைது செய்து அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினர்.

அரசன் அவர்களைப் பார்த்து, ‘அரசருடைய நந்தவனத்தில் திருட்டுத்தனமாக மலர்களைப் பறித்துச் செல்வது தவறு என்றும், பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.

அதனைக் கேட்ட அவர்கள், “அரசே, நாங்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலரும் மலர்களின் அழகும், நறுமணமும் எங்களுக்குப் பிடித்துப் போனதால், தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து, இங்கிருக்கும் மலர்களைப் பறித்துச் சென்று இறைவனுக்கு அணிவித்து வழிபட்டு வந்தோம். நாங்கள் தெரியாமல் செய்த இத்தவறை மன்னித்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டினர்.

அவர்கள் தேவர்கள் என்பதை அறிந்த அரசன், அனைவரையும் உடனடியாக விடுவித்தான். இருப்பினும் தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள் பூலோகத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழந்திருந்தனர். அதனால் அவர்களால் தேவலோகம் செல்ல முடியவில்லை.

அதனை அறிந்து வருத்தமடைந்த அரசன், ‘நீங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.

உடனே அவர்கள், ‘அரசே! நீங்கள் ஆண்டுதோறும் ஏகாதசி விரதமிருந்த பலன்கள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் மீண்டும் தேவலோகம் சென்று விடுவோம்’ என்றனர்.

அரசனும், தன்னுடைய ஏகாதசி விரதப் பலன்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்ற அவர்கள், மீண்டும் தேவலோகம் சென்றனர்.

இதனை அறிந்த மகாவிஷ்ணு, அரசன் ருக்மாங்கதனுக்குக் காட்சியளித்து அருளினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.

பிற்காலத்தில், இப்பகுதிக்கு மன அமைதி தேடி வந்த பஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மேற்சொன்ன வரலாற்றுக் கதை தெரியவந்தது. அவன் அங்கு, மகாவிஷ்ணுவுக்குச் சிலை நிறுவிக் கோவில் அமைக்க விரும்பினான். ஆனால், அவனுக்குக் கோவிலில் நிறுவ மகாவிஷ்ணு சிலை எதுவும் கிடைக்கவில்லை.

மனம் வருந்திய அவன் அவ்விடத்தில் நெருப்பு மூட்டி, அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தான். அப்போது அந்த இடத்தில் மகாவிஷ்ணு சிலை ஒன்று தோன்றியது. சகாதேவன் அந்தச் சிலையை அவ்விடத்தில் நிறுவிக் கோவில் அமைத்தான். அதனால், இத்தல இறைவனுக்கு ‘அற்புத நாராயணர்’ என்று பெயர் ஏற்பட்டதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோவிலில் வட்டவடிவமான ஒரே கருவறையில் அற்புத நாராயணர் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் இருக்கின்றனர். இங்கிருக்கும் நரசிம்மர் உருவம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல இறைவி ‘கற்பகவல்லி நாச்சியார்’ என்றழைக்கப்படுகிறார்.

கருவறையின் தெற்குப் பகுதியில் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி, கணபதி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சன்னிதிகளுக்கு கதவுகள் எதுவும் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரத் துவாரங்களின் வழியாக அவர்களைப் பார்த்து வணங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, சுப்பிரமணியர், பத்ரா போன்ற துணை தெய்வங்களுடன் நாகதெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலய மேற்புறம் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன.

கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்த நிலையிலான சிலை ஒன்று இருக்கிறது. ‘கையூட்டு, ஊழல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் கழுமரத் தண்டனைக்குரியவை’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தச் சிலை அங்கு இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இந்தச்சிலை அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இப்பகுதியை ஆட்சி செய்த அரசர் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறார். அவர் வந்த வேளையில் கோவில் நடை மூடப்பட்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த வாயிற்காப்பாளன் வந்திருப்பது அரசர் என்று தெரியாமல், அவரிடம் சிறிது பணம் பெற்றுக் கொண்டு, கோவில் நடையைத் திறந்துவிட்டானாம். அதனால் அந்த வாயிற்காப்பாளன் கழுமரத்தில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். அதை நினைவுபடுத்தி எச்சரிக்கும் நோக்கத்தில் இங்கு கழுமரத்தில் மனிதன் படுத்த நிலையிலான சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

வழிபாடுகள்

ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி உள்ளிட்ட விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் திரு வோணம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் ‘சங்கேதம்’ எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும் என்றும், இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் சொல்கின்றனர்.

இத்தலத்தில் தீபத்திருவிழா நடத்தப் பெறுவதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் நெருப்புப் பிழம்பாக தோன்றியிருக்கிறார். அவரிடமிருந்து வரும் வெப்பத்தால் இந்தப் பகுதி அழிந்து போய்விடக் கூடாது என்று நினைத்த பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்றருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.

வழிபாட்டுப் பலன்கள்

இவ்வாலய இறைவனுக்குப் பால்பாயசம், கடும்பாயசம், பானகம், கதலிப்பழம் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்கு சதுர்சத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு நடத்துவோருக்கு, அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு, அவரது கோபத்தைக் குறைப்பதற்காகப் பால்பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மர் வழிபாட்டின் போது, “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. பொதுவாக, இத்தலத்து இறைவனை நினைத்து வேண்டினால், அவர்கள் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியும், மோட்சமும் உறுதியாகக் கிடைக்கும் என்கின்றனர்.

அமைவிடம்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரியில் இருந்து காவியூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு செல்ல சங்கணாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சுக்ரனால் ஏற்படும் நோய்கள்

நவக்கிரகங்களில் குரு பகவானைப் போலவே, சுக்ரனும் சுப கிரகமாக அமைந்தவர். அவர் ஒருவரது ஜாதகத்தில் உண்டாக்கும் யோகங்கள் பல
சுக்ர யோகம் அவ்வளவு எளிதாக யாருக்கும் அமையாது. லட்சத்தில் ஒருவருக்கு தான், சுக்ர யோகம் வாய்க்கும். அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி தவிக்கும் மனிதனைக்கூட, அடுத்த நொடியே கோடீஸ்வரனாக மாற்றிக் காட்டும் வீரியம் மிகுந்தது சுக்ர யோகம். உடல், முகம் எல்லாம் காந்த ஈர்ப்பும், ஜொலிஜொலிப்பும் உண்டாகும். அந்த ஜாதகரை சுற்றி எந்த நேரமும் பெண்கள் கூட்டம் இருக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் குவியும். மக்கள் விரும்பும் கலைகளைக் கற்று மதிக்கப்படுவார்கள். அரசன் போன்ற வாழ்க்கை அமையும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். லாட்டரி, சூதாட்டம் மூலம் பெரும் தொகை வரவு இருக்கும். திருமண யோகம், மனைவி மூலம் வரக்கூடிய வரவுகள் அனைத்தையும் தருவது சுக்ர யோகம் தான். பெண் தொழிலாளர்களைக் கொண்டு தொழிற்சாலை நடத்தும் யோகம், கப்பல் வியாபாரம், பஸ் அதிபதி யோகம், சினிமாத் துறையில் புகழடைந்து பெரும் பணம் சம்பாதிப்பது போன்றவற்றை அளிப்பதும் சுக்ர யோகம் தான். மதம், ஜாதி மாறி திருமணம் செய்வது, முறை தவறி திருமணம் செய்வது, திருட்டுத்தனமான திருமணம் செய்வது போன்றவற்றுக்கு சுக்ரன்தான் காரணம்.

சுக்ரனால் வரக்கூடிய நோய்கள்

நமது உடலில் கெட்ட கொழுப்பிற்கு அதிபதியாக இருப்பவர் சுக்ரன். உடலில் உப்புச் சத்து அதிகமாக இருப்பதற்கும் சுக்ரனே காரணம். ஒற்றைக் கண் அல்லது இடது கண் பாதிப்பு, கண்களில் பூ விழுதல் போன்றவற்றுக்கும் சுக்ரனின் பாதிப்புதான் காரணமாகும். நெஞ்சில் கெட்டியான சளி, மாலைக்கண் நோய், பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் ஒரு ஆணுக்கு வருவதும், ஆண்களுக்கு வரக்கூடிய நோய்கள் ஒரு பெண்ணுக்கு வருவதும் சுக்ரனின் பாதிப்பால் தான். உடலில் சர்க்கரை நோய் அதிகரிப்பு, சிறுநீரகத்தில் கல், கட்டிகள், பிறப்புறுப்புகளில் புண், அரிப்பு, தோல் வெடிப்பு, பால்வினை நோய்களுக்கும் சுக்ரனே காரணம்.

காதல் முத்திப்போய் கிறுக்குப் பிடித்து, கை, கால்களை வெட்டிக்கொள்வது, உடலில் உற்பத்தியாகும் சிறுநீர் உடனடியாக வெளியேறுவது, கணவன்-மனைவி தாம்பத்தியத்தால் உண்டாகும் நோய், தவறான உறவுகளால் வரக்கூடிய நோய், உடலில் சேரும் கெட்டக்கழிவுகளால் உண்டாகும் நோய்கள், மது போன்ற போதை வஸ்துக்களால் ஏற்படும் நோய், ஆண் ஒருவர் பெண்ணாக உருவம் மாறுதல், உடலில் சர்க்கரை அளவு குறைவதால் ஏற்படும் மயக்கம் அல்லது உயிரிழப்பு, வாசனை திரவியத்தால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் மயக்கம் போன்றவற்றுக்கும் காரணமானவர் சுக்ரன்.

சுக்ரன் தரும் பாதிப்புகள்

 சுக்ரன் பகை ராசியான கடகம், சிம்மம் ஆகிய ராசிகளில் நின்று இருந்தால், நெஞ்சு சளி அடிக்கடி தொல்லை கொடுக்கும். மனதிற்கு பிடிக்காத மனைவி அமையக்கூடும்.

 சுக்ரன் நீச்ச ராசியான கன்னிராசியில் இருந்தால், இன உறுப்புகள் பாதிப்பு இருக்கும். விந்து நீர்த்து போக கூடும். விந்து உற்பத்தி தடையாகும். மண வாழ்க்கை வெறுப்பு தட்டும். காமக்களியாட்டத்தில் மனம் ஈடுபடும். உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. மனைவி மீது பற்றும், பரிவும், பாசமும் இருக்காது.

 சுக்ரன் பகை கிரகங்களான சூரியன், சந்திரனோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபரின் மனம் எப்போதும் உடல் உறவு பற்றியே சிந்திக்கும். சர்க்கரை நோய் கட்டாயம் வரும். நரம்புதளர்வு ஏற்படும். பெரும்பாலும் சுய இன்பத்திலேயே நாட்டம் அதிகம் இருக்கும்.

 சுக்ரன் பகை கிரகமான நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், தோல் நோய்கள் வரக்கூடும். சிரங்கு புண்கள், ஆறாத புண்கள் உண்டாகும். உடல் உஷ்ணத்தால் விந்தணுக்கள் உற்பத்தி குறைவாக இருக்கும். மனைவியோடு மன இணக்கம் இருக்காது.

 சுக்ரன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், காம சுகத்திற்கு அலைய வேண்டி வரும். பல பெண்களின் தொடர்புகள் மூலம் நோய்கள் வரக்கூடும். நரம்பு தளர்வு, ரத்தக் கொதிப்பு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரக்கூடும். மனைவியை விட்டுப் பிரியும் சூழ்நிலை உருவாகும். சிலருக்கு இரண்டு தாரம் அமையும்.

 சுக்ரன் 6, 8, 12 ஆகிய இடங்களின் அதிபதியோடு இணைந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகர், கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்களைத் தேடிக் கொள்வார். போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருப்பார். எந்த நேரமும் மனம் காம சுகத்தையே நாடி இருப்பதால், பல நோய்க்கு இவரே காரணமாக இருப்பார். இவரது மனைவியின் குணம் வித்தியாசமாக இருக்கும். பிடிவாதம், திமிர், ஆணவப்போக்கு தென்படும்.

 சுக்ரன் லக்னத்திற்கு பாதகாதிபதியாக சேர்ந்து இருந்தால், விந்து உற்பத்தியை தடை செய்யும். விதைப் பையில் கோளாறு உண்டாகும். சர்க்கரை நோய் நிச்சயம் வரும். உடலில் கெட்ட கொழுப்பு உற்பத்தியாகி உபாதைகளைக் கொடுக்கும். சிறுநீரகத்தில் கற்கள் உற்பத்தியாகும். இவர் தன்னுடைய மனைவி மீது வெறுப்பை உமிழ்வார்.

சுக்ரனே லக்னத்திற்கு பாதகாதிபதியாக இருந்தால், சர்க்கரை நோய் வரக்கூடும். சிறுநீரகத்தில் கற்கள் சேரும். விதைப் பையில் பிரச்சினைகள் இருக்கும். போதை வஸ்துக்கள் மூலம் நோய்கள் வரக்கூடும். உடல் உறவில் நாட்டம் இல்லாமல் இருக்கும். சுய இன்ப பிரியராக இருப்பார்கள். இவரது மனைவி நோயாளியாக இருப்பார். கணவன்- மனைவி இணக்கம் இல்லாமல் இருக்கக்கூடும்.

சுக்ரனை பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதி கிரக பார்வை செய்தால், உடலில் கெட்ட நீர் சேரும். உடல் எப்போதும் கழிவுநீரால் துர்நாற்றம் அடிக்கும். விந்து கெட்டித் தன்மை இருக்காது. சிறுநீர் பிரச்சினைகள் வரக்கூடும். இவர் தனது மனைவியின் நடவடிக்கையால், ‘ஏன் திருமணம் செய்தோம்?’ என்கிற மனநிலைக்கு போய்விடுவார்.

சுக்ரனின் உலக பாதிப்பு

சுக்ரன் பகை அல்லது நீச்ச ராசியில் இருந்தாலோ, பகை கிரகமான சூரியன் சந்திரனுடன் இணைந்து இருந்தாலோ சுக்ரன் பாதிப்பு அடையும். நாடுகளுக்கிடையே குழப்பங்களும், பிரச்சினைகளும் வரக்கூடும். பெண்கள் அரசாளும் நாடுகளில் போர் நடக்கும். பெண்கள், ஆட்சியை வெறுப்பார்கள். நாட்டை ஆட்சி செய்யும் பெண்கள், கொலை செய்ய நேரலாம். பெண்களின் கற்புக்கு களங்கம் வரும். பெண்கள் நிம்மதியாக வாழ முடியாமல் போகும். நீர் நிலைகள், குளங்கள் வற்றிப் போகும். அணைக்கட்டுகள் உடைப்பு ஏற்படும். பருவம் தாண்டிய மழையால் மக்கள் அவதிப்படக் கூடும். திடீர் மழையால், திடீர் வெள்ளப்பெருக்கால் மனித உயிர் இழப்புகள் உண்டாகும். சினிமா, நாடகம் மற்றும் கூத்து கலைகளில் தொய்வு உண்டாகும். நாட்டில் காச நோய்கள் காற்றின் மூலம் பரவும். தண்ணீரில் புது புது நோய்கள் பரவும்..

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்

ஆயுள் குறைவாக உள்ளவர்களை நீண்ட ஆயுளோடு வாழ வைத்ததும், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பித்து வரச் செய்த தலங்களுமாக பல தமிழ் நாட்டில் இருக்கின்றன.

புராணங்களும்,  ஆலய தல வரலாறுகளும் நமக்குச் இந்த ஆலயங்களை  சுட்டிக்காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நம்முடைய ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள், அந்த ஆலயங்களுக்கான திருமுறை திருப்பதிகங்களை தொடர்ந்து படித்து வந்தால் கூட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சரி தமிழகத்தில் உள்ள ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆலயங்கள் சில வற்றைப் பார்க்கலாம்.

திருக்குறுக்கை

யோக தட்சிணா மூர்த்தியின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், மன்மதன் எரிந்து சாம்பலாகி விழுந்த இடம் திருக்குறுக்கை. இங்கு காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மன்மதனின் மனைவி ரதி திருக்குறுக்கையில் வீற்றிருக்கும் இறைவனைப் பூஜித்து, கணவனுக்கு உயிர் கொடுத்தருளுமாறு வேண்டினாள். அதன்படி மன்மதனை, ரதியின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் வகையில் ஈசன் உயிர்ப்பித்து அருளினார். இந்தத் திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.

திருக்கடையூர்

இந்தத் திருத்தலமும் மயிலாடுதுறைக்கு அருகில் தான் இருக்கிறது. இங்கு கால சம்கார வீரட்டேஸ் வரர் கோவில் கொண்டிருக்கிறார். 16 வயதில் இறப்பான் என்று எழுதப்பட்ட, மார்கண்டேயனின் உயிரைப்பறிக்க வந்தான் எமதர்மன். ஆனால் மார்கண்டேயன் தஞ்சமடைந்ததோ, இத்தல ஈசனின் திருவடியை. காலன் வீசிய பாசக்கயிறு மார்கண்டேயனோடு, சிவலிங்கம் மீதும் விழ, வெகுண் டெழுந்த ஈசன், எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் என்கிறது தல வரலாறு.

திருவாரூர்

கன்றை இழந்த தாய்ப்பசு ஒன்று, ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது. நீதி எல்லா உயிர்களுக்கும் பொது என்பதை உணர்ந்த மனுநீதிச்சோழ மன்னன், தவறு செய்த தன் ஒரே மகனை தேர் சக்கரத்தில் இட்டு மரண தண்டனை கொடுக்க உத்தரவிட்டான். ஆனால் அந்தத் தண்டனையை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை. அதனால் சோழ மன்னனே, தன்னுடைய தேரின் காலில் மகனை படுக்கவைத்து அவனை கொன்றான். அப்போது தந்தை, தாய், சேய் என மூவுரு கொண்ட தியாகேசன், அங்கு திருக்காட்சி கொடுத்து இளவரசன், கன்று இருவரையும் உயிர்ப்பித்து அருளினார். இந்த தியாகேசர் அருளும் ஆலயம் திருவாரூர் தியாகேசர் திருக்கோவிலாகும்.

திருமருகல்

இந்தத் தலத்தில் மாணிக்க வண்ணர் திருக்கோவில் உள்ளது. இங்கு இரவும் பகலும் ஈசனையே எண்ணி வாழ்ந்த ஒரு வணிகப் பெண் இருந்தாள். அவளது முறை மாப்பிள்ளை ஒரு முறை பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை இத்தல இறைவனை வேண்டி திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தருளினார். மேலும் அவர்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தார். திருவாரூருக்கு அருகே உள்ளது திருமருகல். இத்தல ஆலயத்தில் ஆயுள் வேண்டியும், திருமணத் தடை விலகவும் வேண்டிக் கொள்ளலாம்.

மயிலாப்பூர்

சென்னை மையப்பகுதியில் உள்ளது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில். இங்கு வசித்த சிவ நேசன் என்பவரின் மகள் பூம்பாவை, பாம்பு தீண்டி இறந்து போனாள். அவளது சாம்பல், எலும்பு ஆகியவற்றை எடுத்து வைத்திருந்தார் சிவநேசன். ஒரு முறை திருஞானசம்பந்தர் கபாலீஸ்வரர் ஆலயம் வந்தபோது, தனது மகளின் நிலையை அவரிடம் சொன்னார், சிவநேசன். உடனே சாம்பலையும், எலும்பையும் ஆலயத்தில் வைத்து, திருப்பதிகம் பாடினார் சம்பந்தர். என்ன ஆச்சரியம் பூம்பாவைப் பெண் உயிர்ப் பெற்று திரும்ப வந்தாள்.

திங்களூர்

அப்பூதி அடிகளது வீட்டுத் தோட்டத்தில், அவரது மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை திருநாவுக்கரசர், திங்களூர் சோமநாதர் ஆலயத்தில் வைத்து பதிகம் பாடி உயிர்ப்பித்து அருளினார். திங்களூர் தலமானது சிவபெருமானை சந்திர பகவான் வழிபட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவனுக்கு சோமநாதர், சந்திரசேகரர், சந்திரமவுலி உள்ளிட்ட பெயர்களும் உண்டு. இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். மேலும் திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தைப் பாடினாலும் பலன் உண்டு.

அவிநாசி

அவிநாசியில் உள்ளது அவிநாசியப்பர் ஆலயம். இந்தப் பகுதியில் வசித்த ஒருவரின் மகன் குளத்தில் நீராடச் சென்றான். அப்போது அந்தக் குளத்தில் இருந்த முதலை அச்சிறுவனை விழுங்கி விட்டது. ஒரு முறை அவிநாசியப்பரை வழிபட வந்த சுந்தரர், இந்த விஷயத்தை அறிந்து, ‘கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ பாடினார். அந்த பதிகத்தை அவர் முடிக்கும் தருவாயில், குளத்தில் இருந்து முதலை வெளிப்பட்ட அந்தச் சிறுவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றதாக தல புராணம் சொல்கிறது. அவிநாசி கோயம்புத்தூருக்கு அருகே உள்ளது. இறந்த பின் மீண்டும் உயிர்ப்பெற்று வாழ்ந்தவர்களில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் ஒருவர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡