தாமிரபரணி நதிக்கரையின் கழிமுகப் பகுதியான தூத்துக்குடி மாவட்டம் மாறமங்கலம் பகுதிகள் கோயில் கொண்டுள்ளார் அகரம் துரையப்ப சாஸ்தா. இவருக்கு ஆதியில் தாலமுத்து சாஸ்தா என்ற திருநாமமும் அதன் பின்னர் துறையப்பர் என்ற திருநாமமும் விளங்கி உள்ளது. இவர் தற்போது துரையப்ப சாஸ்தா என்றே அழைக்கபடுகிறார். இவர் அழகான நீல நிறம் கொண்ட திருமேனியுடன் நெற்றியில் கஸ்தூரி திலகமும், ஒளிவீசும் கிரீடமும், சுருள் சுருளான தலை முடி, காதுகளில் குண்டலங்கள், இரு கரங்கள் கொண்டவராக பிரம்மச்சாரி வடிவத்தில் யோகநிைலயில் காட்சி தருகிறார்.
ஒரு சமயம் தவசீலர்கள் சிலர் ஒன்று கூடி இப்பகுதியில் ஒரு வேள்வியை நடத்தினர். அப்போது அங்கு வந்த முனிவர் ஒருவர், தாலமரத்தடியில் பத்மாசனம் செய்து கொண்டு ஐம்புலன்களையும் அடக்கி உத்தம மந்திரத்தை கூறிக்கொண்டு தவம் இருந்தார். அப்போது ஹரிஹர புத்திரனாகிய சாஸ்தா தனது பரிவாரங்களுடன் அவருக்கு காட்சி தந்தார். இதை கண்ட முனிவர்கள் கண்களில் ஆனந்தம் பொங்கியது. அவர் சாஸ்தாவை பணிந்து வணங்கி தலையில் அஞ்சலி பந்தம் செய்து கொண்டிருந்தார். இதை கண்ட சாஸ்தா சந்தோஷம் அடைந்து “முனிவரே உமக்கு என்ன வரம் வேண்டும் கேளும்” என்று சகலரும் பார்த்திருக்க கம்பீரமாக கூறினார்.
அதை கேட்ட முனிவர் “ஐயனே தாங்கள் சேனை வீரர்கள், பூதகணங்கள் எல்லாவற்றையும் தவிர்த்து ஆயுதம் ஏதும் இல்லாதவராக பிரம்மச்சார்ய ரூபனாக திருக்காட்சி தந்தருள வேண்டும்” என்றார். இதை கேட்ட சாஸ்தா முனிவரை நோக்கி “முறைப்படி நீங்கள் என்னை நோக்கி தவம் செய்தால் தாங்கள் வேண்டிய காட்சியை தந்தருள்வோம்” என்று கூறி மறைந்தார். இதைக் கேட்ட முனிவர்களும் தவசீலர்களும் ஆனந்தத்துடன் பல ஆண்டுகாலம் தவம் செய்து வந்தனர். இதில் மகிழ்ந்த சாஸ்தா, யாக முடிவில் முனிவரின் விருப்பம் அனைத்தும் ஈடேறும் வண்ணம் பிரம்மச்சார்ய ரூபனாக திருக்காட்சி தந்தருளி தடாகத்தின் அருகில் தாளாமரத்தடியில் வாசம் செய்தார்.
எனவே இங்குள்ள இறைவனுக்கு ஆதியில் தாலமுத்து சாஸ்தா என்று திருநாமம் ஏற்பட்டது. இவரை துறைமுகப் பட்டணத்தில் முத்துக்குளிப்போரும், வணிகர்களும், அந்தணர்களும் மற்ற ஏனையோரும் சுதந்திரமாக பயமில்லாமல் வழிபட்டு வந்ததால் இவருக்கு துறையப்ப (துறைமுகம்) சாஸ்தா என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே தற்போது மருவி துரையப்பர் என்றாகியுள்ளது. கொற்கை நகரில் வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தாலமுத்து சாஸ்தாவை வணங்கி பின் தொழில் விஷயமாக கடலில் கட்டுமர பயணம் மேற்கொள்வான். ஒருநாள் திடீரென்று சூறாவளி சுழன்று வீசியது. அவன் பயணம் செய்த கட்டுமரப்படகு சுக்கு நூறாகியது. கடலில் தூக்கி எறியப்பட்ட அவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள சாஸ்தாவை வேண்டி கதறினான்.
ஆனால் சாஸ்தா வரவில்லை. விநாடி நேரத்தில் அவன் அருகில் ஒரு மிதப்பு பலகை மட்டும் மிதந்து வந்தது. அதைப்பிடித்துக்கொண்டு இருந்தவன் மீது கட்டுமரத்தில் இருந்து உடைந்து சிதறிய பாகங்கள் இடித்து தள்ளின. இதைக்கண்டு அவனுக்கு ஆத்திரம் வந்தது. “கடவுளே உன்னை தினந்தோறும் வழிபட்டு வருகிறேன், நான் ஆபத்தில் உள்ள நேரத்தில் கூட எனக்கு உதவி செய்ய நீ நேரில் வரவில்லையே” என்று புலம்பிக் கொண்டே இருந்தான். பின்பு மிதப்பு பலகையை பிடித்துக்கொண்டே மயங்கி விட்டான். மயங்கிய அவனை கட்டுமரத்தில் உடைந்த பாகங்கள் இடித்து தள்ளி ஒரு வழியாக கரை சேர்த்து விட்டன. கண் விழித்துப் பார்த்த அவன் எழுந்து கோபாவேசமாக புறப்பட்டு சாஸ்தா கோயிலுக்கு வந்தான். அங்கு “ஏ கடவுளே! கதறினேன், அலறினேன், நீ வரவில்லை உனக்கு கல் மனதா” என்று கத்தினான்.
அப்போது ஒரு ஆசிரீரி வாக்கு கேட்டது. “வணிகனே! நான் மிதப்பு பலகையாக வந்தேன், உன்னை இடித்து தள்ளிய மரப்பலகையாக வந்தேன், என்னால் தான் நீ உயிர் பிழைத்தாய்” என்று ஒலித்தது. இதைக்கேட்ட வணிகன் ஒரு நிமிடம் யோசித்தான். பதில் கிடைத்தது. பிறகென்ன சாஸ்தாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நித்ய பூஜைகள் தடையில்லாமல் நடக்க வழி செய்தான் என்று சாஸ்தா மகாத்மியத்தில் அகரம் துரையப்ப சாஸ்தாவின் பெருமை பற்றி குறிபிட்டுள்ளது.
ஒரு சமயம் இப்பகுதி கடலுக்கு மிக அருகாமையில் இருந்தது. அச்சமயத்தில் ஒரு ஆங்கிலேய கப்பல் கடுமையான புயல் மழையில் சிக்கி கரையை அடைய போராடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அவர்களுக்கு உதவ முன் வந்த சாஸ்தா இத்திருக்கோயிலில் இருக்கும் பனை மரத்தின் உச்சியிலிருந்து ஒரு ஒளியை அனுப்பி அவர்களுக்கு கரையை காட்டினார். கப்பலும் புயல் வெள்ளத்திலிருந்து மீண்டு கோயிலை ஒட்டிய கரையை அடைந்தது. வெள்ளைக்காரரான கப்பலின் தலைவன் சாஸ்தாவை வணங்கியதால் இவருக்கு துரையப்ப சாஸ்தா என பெயர் வந்தது எனவும் சொல்லப்படுகிறது.
இத்திருக்கோயிலின் தல விருட்சமாக அந்த பனை மரம் விளங்குகிறது. “தபசுராயர்” என்ற பெயரில் தல விருட்சம் போற்றப்படுகிறது. இத்திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் மாரமங்கலம் கிராமம் அகரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்வதற்கு தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் பழையகாயல் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயிலை அடையலாம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment