வீட்டிலிருந்தபடியே நினைத்து வணங்க வேண்டிய கோயிலில் ஒன்றாக இந்த முருகனின் கோயில் திகழ்கிறது. இக்கோயிலை குறித்த மகிமைகளை நாம் அறிந்துகொண்டு ஊரடங்கு நிறைவடைந்ததும் சென்று தரிசிக்கலாம். எல்லாம் வல்ல பரம்பொருளாகிய முருகப்பெருமான் பக்தர்களின் நலனுக்காக அவ்வப்போது, ஆங்காங்கே அநேக விதமான அருளாடல்களைப்புரிந்து அருள்பாலித்து வரும் தொன்மை வாய்ந்த திருத்தலங்கள் பல. அவற்றுள் தொண்டைத் திருநாட்டில் விளங்கும் சென்னை மாநகரில் சான்றோர்களின் சிந்தையில் வைத்து ஆதரித்த, இறைநேசச் செல்வர்கள் பலர் தங்கி இருந்தும், வாழ்ந்தும், வந்து சென்றும் நல்வழிகாட்டிய பேட்டை குறிப்பிடத்தகுந்தது.
அது சிந்தாதிரிப்பேட்டை. ‘முருகவேள்’ என்று பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகளால் சிறப்புப் பெயர் சூட்டப்பெற்று, முருகக்கடவுளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு முன்னாளில் திருப்போரூர் சிதம்பரஸ்வாமிகள், பிற்காலத்தில் பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாஸ சுவாமிகள் ஆகிய மகான்கள், தற்போது அமிர்தகடேஸ்வரர் கோயில் இருக்கும் இடத்தில் நீண்ட காலம் தங்கி இருந்து தவம் செய்து வந்திருக்கிறார்கள். பாம்பன் சுவாமிகளே இங்கு முருக பெருமானுக்கு உரிய கடம்ப மரம் வைத்து ‘தல விருட்சமாக’ வளர்ந்திருப்பதும், அருணகிரிநாதருக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்திருப்பதும் குறிப்பிடத்தகுந்தவை. அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழ் சிலவற்றில் ‘சிந்தை நகர்’ என்று குறிப்பிடுவது இந்த கோயிலைத்தான் என்றும், காலப்போக்கில் வெள்ளையர் ஆட்சி அமைந்து பலவித சூழ்நிலை மாற்றங்களால் அந்த ஆதாரங்களும், சில பாடல்களும் மறைந்துவிட நேர்ந்ததாகவும், இப்பகுதிவாழ் பெரியோர்கள் கூறுவர்.
சொன்னால் பிறப்பொழியும் சூராய கூற்றகலும்
என்னாளும் பேரின்பமெய்தும் நெஞ்சே
முன்னாள் பொருசூரன் வல்லுடம்பு போழ்ந்த வயிலேந்து
‘முருகவேள்’ என்று மொழி -என்று இந்த முருகப்பெருமானை பாம்பன் சுவாமிகள் பாடியிருக்கிறார். காஞ்சி மகா பெரியவர்கள் இங்கு வந்து முருகவேளை வணங்கியிருக்கிறார். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் சிந்தாதிரிப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள் என்பதால் மிக அதிகமாக இந்த முருகனை வணங்கும் பேறு பெற்றதாக அவரே கூறியதும் உண்டு. வள்ளி-தெய்வானை சமேதராக அற்புத அழகுத் திருமேனி கொண்டு விளங்குகிறார் முருகப்பெருமான். பாம்பன் சுவாமிகளால் தனி பீடத்தில் விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஞானசக்திவேல் இந்த முருகப்பெருமான் உடலுடன் ஒன்றி விளங்குவது அபூர்வமான காட்சியாகும். இந்த வேல் பீடத்தில் இருந்து அளிக்கப்படும் விபூதி திருவருள் பிரசாதம், நோய் தீர்க்கும் அருமருந்தாகவும், வினை தீர்க்கும் வல்லமை உள்ளதாகவும், லட்சுமிகடாட்சம் அருளக்கூடியதாகவும் வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளும் வரப்பிரசாதமாகவும் திகழ்கிறது.
இங்கு மூலவர் முருகபெருமானுடன் விநாயகர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், ஐயப்பன், அஷ்டபுஜ கனக துர்க்கை, வெங்கடேசப்பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, காயத்ரிதேவி, கால பைரவர், நவகிரகங்கள், இடும்பன்,கடம்பன், அருணகிரிநாதர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். பாம்பன் சுவாமிகள், ராகவேந்திரர், வாரியார் சுவாமிகள் இவர்களுக்கும் அழகு சந்நதிகள் உண்டு. மஹாஸ்கந்தசஷ்டி 10 நாள் திருவிழாவாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து சமயத்தவர்களும் இங்கு வழிபட வருவது முருகனின் அருளைத்தான் பறைசாற்றுகிறது. சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தும், அண்ணாசாலை எல்.ஐ.சி. கட்டிடத்திலிருந்தும் 5 நிமிட நடைபயண தூரத்தில் உள்ள சித்தாதிரிப்பேட்டையில் தெற்கு ஐயா முதலித் தெருவில் விளங்குகிறது இந்த முருகன் திருக்கோயில்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment