Sunday, 26 April 2020

வழித்துணையாய் வருவார் அழிக்கால் ஆதிசிவன்.!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ளது ஐங்காமம். இங்குள்ள சிற்றூர் குந்நம் விளாகம். இங்கு தான் அடியவர்க்கு அற்புத வாழ்வளிக்கும் அழிக்கால் ஆதிசிவன் கோயில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்தபோது மார்த்தாண்ட மகாராஜா, நூற்றி எட்டு அந்தணர்களை கொண்டு பூஜைகள், யாகங்கள் செய்து ஐங்காமம் பகுதியில் சிவ ஆலயத்தை எழுப்பி பூஜை செய்து வந்தார். அத்தகைய சிறப்பு மிக்க சிவ ஆலயம் இவ்வூரில் அமைந்திருந்த போதும் அப்பகுதியிலுள்ள பெரும்பான்மை மக்கள் கிராம தேவதைகள் வழிபாட்டையே மேற்கொண்டு வந்தனர். கிராம தெய்வங்களுக்கு விளை பொருட்களை படையலிட்டும், ஆடு, கோழி முதலான உயிர்களை பலியிட்டும் வழிபாடு செய்து வந்தனர்.

அப்பகுதியில் நிலபுலன்களுடன் வாழ்ந்து வந்த சுவாமி நாடார் என்பவரது வீட்டில், காவல் தெய்வமான மல்லன் கருங்காளிக்கு பலியிடுவதற்காக நேர்த்தி கடனாக செஞ்சேவலை (சிகப்பு நிற சேவல்) வளர்த்து வந்தனர். அந்த வீட்டிலிருந்த பத்து வயது பாலகன் அப்புகுட்டன், திடீரென சேவலை பலியிட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தான். மகனின் பேச்சுக்கு சரிப்பா, இனி பலி கொடுக்க வேண்டாம் என்று அவனது தாய் பதிலுரைத்தாள். அன்றிரவு வீட்டிலுள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரம் நடு சாமப்பொழுது, கருங்காளிக்கு நேர்ந்து விட்ட சேவல் கூண்டை விட்டு தானே வெளியே வந்து வீட்டிற்குள் புகுந்தது. அங்கே தூங்கிக்கொண்டிருந்தவர்களை தனது சிறகுகளால் அடித்து எழுப்பியது. சேவலின் செயல்கண்டு எழுந்தவர்கள் வியப்புடன் அதை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பின்னர் அப்புகுட்டனின் தாயார், மல்லன் கருங்காளியிடம் வேண்டினாள். நான் குழந்தை சொன்னதுக்காக சொல்லிவிட்டேன். நிச்சயம் உனக்கு நேர்ந்து விட்ட சேவல் உனக்குத்தான் கண்டிப்பாக நேர்த்திக்கடனை நிறைவேற்றுவோம் என்று கூறிய சில விநாடிகளில் அந்த சேவல் அமைதிக்கொண்டு கூண்டுக்குள் திரும்பி சென்று விட்டது. மறுநாள் மல்லன்கருங்காளிக்கு உற்றார், உறவினர் முன்னிலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சேவல் பலியிடப்பட்டது. பூஜையின் போது சாமியாடி அருள்வந்து கூறினார். அப்புகுட்டனை பார்த்து ‘‘நீ, என் கொடி, எனக்கு எதிராக செயல்படுற, எனக்கு பூச கொடுக்க கூடாதுன்னு சொல்லுக, உனக்கு என் சக்தி என்னான்னு காட்டுறேன்.’’ என்று கூறிவிட்டு ஓ, ஓ வென சத்தம் போட்டபடி கையில் இருந்த திருநீற்றை வாரி வீசினார்.
இந்த சம்பவம் நடந்து ஆண்டூகள் சில கடந்த நிலையில் அந்த அப்புகுட்டனுக்கு வயது பதினான்கு ஆன போது, ஒரு நாள் பௌர்ணமி நாளில் அதிகாலை 3 மணி இருக்கும். தூக்கம் வராமல் தவித்தான் அப்புகுட்டன். உடனே தனது பதினாறு வயது நிரம்பிய அண்ணன் ராமையாவுடன் தங்கள் விளைக்கு(தோட்டம்) சென்றனர். மரவள்ளி கம்பு நட வேலையாட்கள் இரண்டு நாட்களாக வராததால் அண்ணன், தம்பி இருவரும் அந்த பணியை செய்தனர். அப்போது பௌர்ணமி நாள் முழுநிலவு ஒளி வீசிக்கொண்டிருக்க, வண்டுகளின் இரச்சல் சத்தம் ஒரு புறம் இருக்க, இரண்டு ஆள் உயரத்திற்கு ஓர் உருவம் அந்த நிலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதை சிறுவன் அப்புகுட்டன் பார்த்துக்கொண்டிருந்தான். சில விநாடிகளில் அந்த உருவம் இவர்களை கடந்து சென்றது.
அதன் பின்னர் தனது அண்ணனை அழைத்த அப்புகுட்டன், ‘‘அண்ணே, வா நாம வீட்டுக்கு போலாம், எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு’’ என்று கூறினான். தம்பியின் சொல்லுக்கு இசைவு தெரிவித்து இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் எதிரே அவர்களது தாய், மகன்களை தேடி, தனது மகளுடன் வந்து கொண்டிருந்தாள். மகன்களை கண்டதும், ‘‘மக்களே, எங்க போயிருந்த, இது என்ன மண்வெட்டி,’’ அப்போது ராமையா கூறினான். ‘‘அம்மா, நம்ம விளைக்கு மரச்சினி நட,  தம்பி தான் மணி மூணாவது போலுக்கு, விளைக்கு போமாண்ணு கேட்டான். அதனால வந்துட்டோம்.’’ ‘‘மணி மூணு இல்ல, ஒண்ணு. நடு சாமத்தலயா காட்டுக்கு வரது, பேய், பிசாசு அடிச்சிரும். அப்போது குறுக்கிட்ட அப்புகுட்டன், ‘‘அம்ம, நாங்க விளையில நின்னமில்லா, அப்ப ஒரு பெரிய பனை மரம் ஒசரத்துக்கு உருவம் ஒண்ணு அந்த வழியா போச்சு’’ என்று அச்சத்தோடும், வியப்போடும் கூறினான்.
பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்றனர். மறுநாள் அப்புகுட்டன் கூறியதை அவனது தாய், ஊரார்களிடம் கூற, ஊர் பெரியவர்கள் ‘‘வெள்ளி, செவ்வாய், பௌர்ணமி, அமாவாச நாட்களில் வேதாளம் வந்து காவு கோயிலில பூச பண்ணிட்டு போகுமுன்னு முன்னோர்கள் சொல்லியிருக்காங்க, உச்ச ராத்திரி அவனுகள யாரு அங்க போகச்சொன்னா’’ என்று கேட்டுள்ளனர். இது நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அப்புகுட்டன் வாலிபனான். உடல்நலம் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டான். பல மருத்துவமனைகளில் சோதித்துப்பார்த்தும் எந்த நோயும் இல்லை என்றே மருத்துவர்கள் கூறினர். உடல் நலம் பாதிப்புக்கு காரணம் தெரியாமல் தவித்தனர் உறவினர்கள். மாந்திரீகவாதியை அழைத்து அப்புகுட்டனுக்கு பார்வை பார்த்தனர். பல வகையான பழங்களும், பூக்களும் வைத்து பூஜை நடந்து கொண்டிருந்தபோது அப்புக்குட்டனின் வலது கை ஐந்து விரல்கள் விரிந்து, அஞ்சு தலை நாகம் படமெடுத்து ஆடுவது போல ஆடியபடியே கையின் செயல்பாடு இருந்தது.
உடனே மாந்திரீகவாதி, வரும் செவ்வாய்கிழமை இவனை மேளதாளம் முழங்க பூஜை பொருட்களுடன் ஐங்காமம் சிவன் கோயிலுக்கு அழைத்து வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி உறவினர்கள் செய்தனர். கோயிலுக்கு சென்றதும். உற்சாகம் கொண்டு முகமலர்ச்சியோடு இருந்த அப்புக்குட்டன் கருவறைக்குள் ஓடிச்சென்று சிவலிங்கத்தை இரு கரங்களால் இறுக பற்றிக்கொண்டான். உடன் வந்த மாந்திரீகவாதி, கோயில் அர்ச்சகர் மற்றும் ஊர் பெரியவர்கள் வியப்புடன் நிற்க, எழுந்திருக்கவே சக்தியின்றி இருந்த அப்புகுட்டன், சிவனருளால் உற்சாகம் அடைந்ததை கண்டு, மற்றவர்கள் பேரானந்தம் கொண்டு சிவ,சிவா,ஓம் நமச்சிவாயா என்று விண்ணை முழங்க கோஷமிட்டனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு ஆண்டுகள் சில கடந்த நிலையில் ஊரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அப்புகுட்டனுக்கு பதவி கிடைத்தது. ஊரிலுள்ள கக்குளத்தில் குளித்துவிட்டு வரும்போது, அருகில் கிடந்த ஒரு சிறிய பாறையில் சூரிய ஒளி சிவலிங்க வடிவில் விழுந்ததைக்கண்ட அப்புக்குட்டன், அவ்வழியாக வந்த கொல்லரை அழைத்து இந்த பாறையில் அந்த சூரிய ஒளி விழும் பகுதியை அப்படியே லிங்கமாக வடித்து விடு என்றார். காலையில் தொடங்கிய பணி மாலையில் நிறைவுற்றது. சிவலிங்கம் தயாரானது. மாலையில் அங்கு வந்த நபர்கள் துணையுடன் அந்த லிங்கத்தை எடுத்துக்கொண்டு சிறு தெய்வங்கள் குடியிருப்பதாக கூறப்படும் காவு பகுதியில் கொண்டு சென்றனர். அங்கு ஈச்சமரம், வேப்பமரம் நின்ற இடத்தில் வைத்தனர். அன்றிலிருந்து அப்பகுதியில் சிறுதெய்வ வழிபாடு மறைந்தது. ஊர் வளர்ச்சியானது. ஊர் மக்கள் நலம் பெற்றனர். சிவலிங்கம் வைக்கப்பட்ட இடம் கோயிலானது.
அழியாத கால்வாய் பகுதியில் ஆலயம் கொண்டதால் அழிக்கால் ஆதிசிவன் என்ற நாமத்துடன் கோயில் உயர்ந்தது. அதன் பின்னர் ஆவி வழிபாடும், உயிர்பலியுடன் கூடிய சிறு தெய்வ வழிபாடும் இப்பகுதியில் முற்றிலும் மறைந்தது. கோயிலில் மூலவர் அழிக்கால் ஆதி சிவன் என்ற நாமத்தில் அருள்பாலிக்கிறார். பிராகாரத்தில் இடது பக்கம் முருகனும், வலது பக்கம் கணபதி வீற்றிருக்கின்றனர். நாகர், ரட்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் 65 அடி உயர நுழைவு வாயிலில் இருபுறமும் யானைகள் இரண்டு வரவேற்பது போலவும், கோபுர வாசலின் கீழ் நந்தி சிலைகள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள களியக்காவிளையிலிருந்து தெற்கே இரண்டு கி.மீட்டர் தொலைவில் இருக்கும் ஐங்காமம் ஊரில் குந்நம் விளாகம் பகுதியில் அமைந்துள்ளது. தன்னை வழிபடும் அடியவர்களுக்கு அற்புத வாழ்வளித்து காத்தருள்கிறார் அழிக்கால் ஆதிசிவன்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment