நாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்றது அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயில் . மூலவர் காயாரோகணேஸ்வரர்.உற்சவர் சந்திரசேகரர். தாயார் நீலாயதாட்சி அம்மன். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 82வது தலம்.
கோயில் வரலாறு: புண்டரீகர் என்னும் முனிவர், கண்ணுவரின் ஆலோசனைப்படி முக்தி வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், முனிவரை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு முக்தி கொடுத்தார். முக்தியடைபவர்களின் ஆன்மாதான், இறைவனிடம் சென்று சேரும். ஆனால்,சிவன் புண்டரீகரின் உடலுடன் தன்னை சேர்த்துக்கொண்டு முக்தி கொடுத்தார். இதனால் சிவன், காயாரோகணேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.நாக அரசன், இங்கு சிவனை வேண்டி ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை, பிறப்பிலேயே மூன்று தனங்களுடன் இருந்தது. இதனால் வருந்திய மன்னன், சிவனிடம் முறையிட்டான். சிவன் மன்னனிடம், சூரிய வம்சத்து மன்னன் ஒருவனால் அவளது தனம் மறையும் என்று அருளினார்.சிலகாலம் கழித்து, சாலிசுகன் என்னும் மன்னன், இத்தலத்திற்கு வந்தான். அவனைக் கண்ட நாக அரசன் மகளின் மூன்றாவது தனம் மறைந்தது. மகிழ்ந்த நாக அரசன், அவனுக்கே தன் மகளை திருமணம் செய்து வைத்தான். அதன்பின்பு, சாலிசுகன் இங்கு சிவனுக்கு பல திருப்பணிகள் செய்தான். நாக அரசன் பூஜித்ததால் இத்தலம், நாகை காரோணம் என்று பெயர் ஏற்பட்டது. இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக மிகுந்த அழகுடன்காட்சியளிக்கிறது.
இத்தலத்தில் அருளும் அம்பிகை, கடல் போல அருளுபவளாக இருக்கிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்மனின் கண்கள் கடல் நிறத்தில், நீல நிறமாக இருக்கிறது. எனவே அம்மன் நீலாயதாட்சி என்றழைக்கப்படுகிறாள். கருந்தடங்கண்ணி என்றும் அம்மனுக்கு பெயருண்டு.அம்மனுக்கு தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக காட்சி தருகிறாள். எனவே ஆடிப்பூர விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது. இவ்விழாவின்போது, முழுதும் பீங்கானில் செய்யப்பட்ட ரதத்தில் அம்பாள், வீதியுலா செல்வது சிறப்பு. அம்மன் சன்னதி, தேர் போல அமைக்கப்பட்டிருக்கிறது. இவள் கன்னியாக இருப்பதால் சிவன், அவளுக்கு பாதுகாப்பாக நந்தி தேவரை அனுப்பினார். அவரோ, தான் எப்போதும் சிவனை தரிசிக்க விரும்புவதாக கூறினார். எனவே, சிவன் அவரிடம் அம்பாளிடம் இருந்து கொண்டு, தன்னையும் தரிசிக்கும்படி கூறினார். இதன் அடிப்படையில், அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன்கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னதியை பார்த்தபடி இருக்கிறது. நந்தியின் இடது கண் சிவனையும், வலக்கண் அம்பிகையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்த நந்தியை இரட்டைப் பார்வை நந்தி என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம்.
பிணத்திற்கு சிவன் மாலை: கோயிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால், நடையைசாத்திவிடுவது வழக்கம். ஆனால், இறந்த பிணத்திற்கு சிவன் அணிந்த மாலை, வஸ்திரத்தை அணிவிக்கும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது. சிவனருளால் முக்தி பெற்ற மீனவ குலத்தைச் சேர்ந்த அதிபத்தருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் மீனவர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு சிவன் சார்பில் மரியாதை செய்யும் வைபவம் நடக்கிறது. இறந்தவரின் உடலை, இங்கு கோயிலுக்கு முன்பாக வைத்து விடுகின்றனர். அப்போது சிவன் சன்னதியை அடைக்காமல், அவருக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை பிணத்திற்கு அணிவித்து, தீர்த்தம் கொடுக்கின்றனர்.
தங்க மீன்: அதிபத்தர், என்னும் சிவபக்தர் இவ்வூரில் வசித்து வந்தார். மீனவரான அவர், இத்தல சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் மீன் பிடிக்கச் செல்லும் அவர், முதலில் கிடைக்கும் மீனை, கடலில் வீசி சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார். ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், கடலில் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி செய்தார்.ஆனாலும், அதிபத்தர் அந்த மீனை, சிவனுக்கே படைத்தார். வறுமையில் வாடினாலும், அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை. ஒருசமயம் மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தருக்கு, கடலில் ஒரு தங்க மீன் கிடைக்கச் செய்தார் சிவன். உடனிருந்த மீனவர்கள் அதனை கடலில் போட வேண்டாமென தடுத்தனர். ஆனால், அதிபத்தர் அதை கடலில் வீசி விட்டார். அவரது பக்தியை மெச்சிய சிவன், அம்பிகையுடன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். இவர் நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தை பெற்றார். அதிபத்தருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. ஆவணி மாத, ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா நடக்கிறது. அப்போது அதிபத்தர், தங்க மீன் படைத்து பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழா: வைகாசியில் திருக்கல்யாண விழா, ஆடிப்பூரம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை விழா நடைபெறுகிறது. பாவம் போக்க, முக்தி கிடைக்க இத்தல இறைவனை தரிசிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment