Wednesday, 29 August 2018

கமலாத்மிகா

அகத்தியர் காசிகாண்டம் எனும் நூலில் திருமகளைப் பற்றி லக்ஷ்மி பஞ்சகம் எனும் ஐந்து அதியற்புதமான துதிகளைப் பாடிப் பணிந்துள்ளார். அதை அதிவீரராமபாண்டியனார் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அந்த துதியை பாராயணம் செய்பவர்களுக்கு செல்வ வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. அதேபோன்று முருகபக்தரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருமகள் அந்தாதி என்ற அழகான நூலை இயற்றியருளியுள்ளார். 100 பாடல்களைக் கொண்டது இந்த அந்தாதி. அதன் நூற்பயனில் செப்பும் அருமைத் திருமகளந்தாதி முற்றும் தப்பு வராமல் துதித்தவர்க்கு  முப்புவனத்து உள்ளவரும் போற்றும் உயர் உண்டாய் ஓருகாலும் எள்ளரிய வீடு எய்துமே என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த அந்தாதியை தவறாமல் சரியாக பாராயணம் செய்தால் மூன்று உலகங்களிலும் உள்ளவர்கள் போற்றும் வண்ணம் உயர்வு உண்டு. அதோடு முக்தியும் கிட்டும் என்று கூறியுள்ளார். 

மேலும் அவர் தன் இரண்டாவது பாடலில் எல்லா தெய்வங்களிடமும் கையில் ஆயுதங்கள் உண்டு. ஆனால் உன் கையில் தாமரைமலர்களே உள்ளன. கருணையே வடிவான உனக்கு படைக்கலம் எதற்கு என்று நினைத்துத்தான் தாமரையைத் தாங்குகிறாயோ அம்மா? என்று குறிப்பிட்டுள்ளார். திருமாலின் தசாவதாரங்களில் பெரும்பாலும் மகாலட்சுமி உடன் இருந்து அருள் புரிந்ததை புராணங்கள் வாயிலாக அறிய முடிகிறது. கூர்மவதாரம் எடுத்து மேருமலையைத் தாங்கிய போது பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு திருமாலை மணந்தாள் லட்சுமி.  வராக அவதாரத்தின் போது அவருடன் இணைந்து வராகரை, லட்சுமி வராகராக்கியவள். நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க அவர் மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தி லட்சுமி நரசிம்மராக்கியவள். வாமன அவதாரத்தில் பெருமாள் பிரம்மச்சாரியாக உருமாறியபோதிலும் அவர் திருமார்பில் ‘அகலகில்லேன்’ என்று உறையும் திருமகளை மறைக்க தன் திருமார்பை மான் தோலால் திருமால் மறைத்ததாகக் கூறுவர். 

பரசுராம அவதாரம் பிரம்மச்சாரி. ராமவதாரத்தில் திருமகளே சீதையானாள். கிருஷ்ணாவதாரத்தில் லட்சுமியே ருக்மிணியானாள். பலராம அவதாரத்தில் திருமகளே ரேவதி எனும் பெயரில் அவரை மணந்தாள். இந்தக் கலியில் திருமால் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்தில் மகாலட்சுமி வித்யா லட்சுமியாகத் தோன்றப்போவதாக பாகவதம் கூறுகிறது. இவளே சக்திகளில் முதல்வி. முக்குணங்களும் கொண்டவள். ஆதாரசக்தியாக பூமியாகவும், ஜல ரூபமாகி நீலா தேவியாகவும், லக்ஷ்மியாய் இருந்து தனம், வாக் ரூபமாகவும் விளங்குகின்றாள். ஒரு முறை விஷ்ணுவும் ருத்திரனும் ஹாலா மற்றும் ஹலர் என்ற இரு அசுரர்களைக் கொன்று விட்டு வந்து தங்களுடைய வீரச் செயல்களைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டனர். எல்லாவற்றிற்கும் ஆதாரமான தங்களை எண்ணாமல், இவர்களே ஏதோபெரிய காரியத்தை சாதித்து விட்டதைப் போல் பேசிக்கொள்வதை நினைத்து திருமகளும், மலைமகளும் சிரித்து விட்டனர். அதைக் கண்டு பொறுக்காத ருத்திரனும் விஷ்ணுவும் அவர்களை பதிலுக்கு கேலி செய்ய அதைப் பொறுக்காத இருவரும் அவ்விருவரை விட்டு நீங்கிவிட்டனர்.  

அதனால் இருவரும் தங்கள் சக்திகளை இழந்து கை இழந்தவர்கள் போலானார்கள். சிவ விஷ்ணுவினரின் சக்தி குறைந்ததும் அசுரர்கள் இதுதான் சமயம் என தேவர்களைத் துன்புறுத்தினர். இதனால் வேதனையுற்ற தேவர்கள் அஸுரர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு போரை நிறுத்திவிட்டு, பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க முற்பட்டனர்.  மந்தார மலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி பாற்கடலைக் கடைந்தனர். திருமால் ஆமை வடிவெடுத்து மந்தார மலையைத் தாங்கிக் கொண்டார். முதலில் ஆலாலம் எனும் விஷம் வெளிப்பட ஈசன் அதை முழுங்கினார். உடனே பராசக்தி அவர் நெஞ்சில் அந்த விஷத்தை நிறுத்தி ஈசனை நீலகண்டனாக்கி அவருடன் சேர்ந்து அவர் இழந்த சக்தியை திரும்பத் தந்தாள்.  ஒரு கட்டத்தில் கடலிலிருந்து வரிசையாக கற்பகவிருட்சம், ஐராவதம், உச்சைஸ்ரவஸ் எனும் குதிரை, அப்ஸர கன்னியர்கள் என வெளிப்பட்டனர். 

பாற்கடல் மேலும் கடையப்பட வளர்பிறையோடு கூடிய த்வாதசி அன்று காலையில் மஹாலக்ஷ்மி ஸ்வர்ணபாத்திரம், மாதுளம்பழம், தங்கத்தாமரைகளோடு பாற்கடலிலிருந்து வெளிப்பட்டாள். தேவர்கள் பூமாரி பொழிய கின்னர, கிம்புருஷர்கள் இன்னிசை முழக்க, தேவ நங்கையர்கள் நடனமாட, வேத கோஷங்கள் ஒலிக்க, அவள் மெல்ல நடந்து சென்று திருமாலின் திருப்பாதங்களைச் சரணடைந்து அவருக்கு மாலை சூட்டினாள். மஹாலக்ஷ்மி மீண்டும் அவருடன் சேர்ந்ததும் திருமால் இழந்த சக்தியைப் பெற்றார். மகாலக்ஷ்மியின் திருவருளால் அமிர்தம் கிடைக்கப்பெற்ற தேவர்கள், மகாவிஷ்ணுவின் திருவிளையாடல் மூலம் அதனை உண்டு சாகா நிலை எய்தினர். லக்ஷ்மியின் வரவால் தேவலோகம் மீண்டும் புதுப்பொலிவு பெற்று அசுரர்களை வெல்லும் ஆற்றலும் தேவர்களுக்குக் கிடைத்தது. 
திருமால் வாசம் செய்யும் வைகுண்டத்தின் மத்தியில் உள்ள இடம் அயோத்தி. 

பல பவனங்களும் ரத்ன கோபுரங்களும் நிறைந்திருக்கும் அந்நகரத்திற்கு நான்கு வாயில்கள். அயோத்தியின் நடுவில் அந்தப்புரம். அதன் நடுவில் ஒரு ரத்ன மண்டபம். அம்மண்டபத்தின் நடுவில் ரத்னமயமான சிம்மாசனத்தில் மகாலக்ஷ்மி திருமாலுடன் அமர்ந்து அருட்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இம்மண்டபங்களைச் சுற்றி எப்போதும் சாமகானம் ஒலித்துக் கொண்டே இருக்கும், இப்பீடத்திற்கு யோக பீடம் என்று பெயர்.  இவ்வுலக இன்பங்கள் யாவையும் அனுபவிக்க செல்வவளம் தேவை. அதைத் தருபவள் மஹாலக்ஷ்மி. அஷ்ட லக்ஷ்மிகளாக எட்டு வடிவங்களில் இவள் வழிபடப்படுகிறாள். ஆதிலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தன லக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, வீரலக்ஷ்மி போன்ற இந்த எட்டு லக்ஷ்மியரும் புத்திரப்பேறு, வளங்கள், தனம், தான்யம், கல்வி, ராஜபோகம், தைரியம், வெற்றி போன்றவற்றை தன் பக்தர்களுக்கு அருள்பவர்கள். கவிஞர்கள் பலர் கவிதையை எழுதத் தொடங்கும் முன் ஸ்ரீ என்று எழுதி விட்டே கவிபுனையத் தொடங்குவது அந்நாளில் வழக்கம். ஸ்ரீ எனில் மகாலக்ஷ்மி என்று பொருள். 

வரலட்சுமி விரதம், வெள்ளிக்கிழமை விரதம், வைபவலட்சுமி விரத, கோபூஜை, அட்சய திருதியை பூஜை, தானேஸ்வரி பூஜை  போன்றவை திருமகளுக்குரிய விரதங்களாகக்கருதப்படுகின்றன. தங்கத்தில் திருமகள் உறைகிறாள். அதனாலேயே மங்களகரமான திருமாங்கல்யம் தங்கத்தில் செய்யப்படுகிறது. திருமகள் உறையும் காரணத்தினாலேயே தங்கத்தாலான ஆபரணங்களைக் காலில் அணியக் கூடாது என்று சொல்லப்படுகிறது. மஞ்சள் மங்கலமான பொருள். சௌபாக்ய லட்சுமி மஞ்சளில் வாசம் செய்வதால் மஞ்சள் பூசிக் குளித்த பெண்கள் லட்சுமிகரமாகத் தோற்றமளிக்கின்றனர் என்கிறோம். சுமங்கலிகளின் வகிட்டில் திருமகள் உறைவதாக ஐதீகம். எனவே சுமங்கலிப் பெண்கள் வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். பூஜைகளின்போது நிவேதிக்கப்படும்தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மேலும், ஸ்வஸ்திக் சின்னம், வெண் சாமரம், பூரணகும்பம், அடுக்கு தீபம், ரிஷபம், வலம்புரிச் சங்கு, ஸ்ரீவத்ஸம், குடை போன்ற எட்டு பொருட்களிலும் திருமகள் உறைவதால் இவை அஷ்டமங்கலப் பொருட்கள் என போற்றப்படுகின்றன.

பால், தேன், தாமரை, தானியக் கதிர்கள், நாணயங்கள் ஆகிய ஐந்திலும் திருமகள் வாசம் செய்வதால் இவற்றை பஞ்சலட்சுமிகள் என்பர். பாலை குழந்தைகளுக்கும் தேனை பெண்களுக்கும் தாமரையை ஆலயங்களில் அர்ச்சனைக்கும் நாணயங்களை ஆடவர்க்கும் தானியக் கதிர்களை பறவைகளுக்கும் தானமாகத் தர திருமகள் திருவருள் சித்திக்கும். வில்வம், தாமரை, வெற்றிலை, நெல்லி, துளசி மாவிலை போன்றவை திருமகள் அருள் பெற்ற தெய்வீக மூலிகைகளாக கருதப்படுகின்றன. பாற்கடலில் இருந்து தோன்றியதால் உப்பும் திருமகள் வடிவமாகவே கருதப்படுகிறது. இன்றும் முதல் தேதியன்று முதன் முதலில் கல் உப்பு வாங்கினால் திருமகள் அருள் கிட்டும் எனும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
 
ஸௌந்தர்யலக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி லக்ஷ்மி, புஷ்டி லக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, ஆரோக்ய லக்ஷ்மி., அன்ன லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி, நாக லக்ஷ்மி, கிருஹ லக்ஷ்மி, மோட்ச லக்ஷ்மி என அனைத்து லக்ஷ்மிகளும் கமலாத்மிகா எனும் மஹாலக்ஷ்மியின் திருவடிவங்களே. 

இன்றும் நகரத்தார் இல்ல பெண்மணிகள், 
‘காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடு கட்டிக் கொண்டிருக்கும் வேள் வணிகர் வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா! இலக்குமியே
என்றைக்கும் நீங்காதிரு’

எனும் துதியால் தினமும் திருமகளை துதிப்பது வழக்கம். பத்மவனத்தில் வசிப்பதால், பத்மத்தில் பிரியம் கொண்ட யானைகளின் நாதத்தினாலே உணரப்படுபவள் இத்தேவி. தன் தாமரை ஆசனத்தில் குல்குலு, தமகன், குரண்டகன், சலன் போன்ற நான்கு யானைகளின் முழக்கத்திலே மகிழ்ந்து கொலுவிருப்பவள். இந்த நான்கு யானைகளும் பக்தர்களுக்கு தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் எனும் நான்கையும் அருள வல்லவை. இந்த தேவி நமக்கு எல்லா செல்வங்களையும் வளரச் செய்யட்டும் என மங்கள ஸம்ஹிதை எனும் நூல் கூறும் இந்தத் தேவியின் திருவுருவை மனதினில் தியானித்து இக, பர, சுகம் பெற்று ஞான பக்தியால் ஆராதிப்போம். லக்ஷ்மி கடாட்சமே அனைத்திற்கும் மூலம். எவ்வளவு நல்லவனாக இருந்தும் அறிஞனாக, நற்குணங்கள் கொண்டவனாக இருந்தும் சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தும் செல்வம் எனும் லட்சுமி கடாட்சம் இல்லையென்றால் உலகம் அவனை மதிப்பதில்லை. இக்கருத்தை ஔவையார் கூட

‘கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின் 
எல்லோரும் சென்றால் எதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்
வேண்டாள்
செல்லா(து) அவன் வாயிற் சொல்’

எனும் பாடலின் மூலம் குறிப்பிட்டுள்ளாள். ‘கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி’ என்றார் கவியரசு கண்ணதாசன். லக்ஷ்மியின் சிறந்த புண்ணிய நாமாக்கள் 40. இதை தினமும் கூறுபவர்கள் எல்லா செல்வங்களும் கிடைக்கப்பெறுவான் என கூறப்பட்டுள்ளது. லக்ஷ்மி, ஸ்ரீ, கமலா, வித்யா, மாதா, விஷ்ணுப்ரியா, ஸதீ, பத்மாலயா, பத்மஹஸ்தா, பத்மாக்ஷீ, லோகஸுந்தரி, பூதானாம் ஈஸ்வரி, நித்யா, ஸத்யா, ஸர்வகதா, சுபா, விஷ்ணுபத்னீ, மஹாதேவி, க்ஷீரோததனயா, ரமா, அனந்தா, லோகமாதா, பூ:, நீலா, ஸர்வஸுகப்ரதா, ருக்மிணீ, ஸீதா, ஸர்வா, வேதவதி, ஸரஸ்வதி, கௌரீ, சாந்தி, ஸ்வாஹா, ஸ்வதா, ரதி, நாராயணி, வராரோஹா, விஷ்ணோ:நித்யானபாலினீ.  

எனவே தனம் எனும் செல்வம் நம் வாழ்விற்கு இன்றியமையாதது. அதை அருளும் கமலாத்மிகாவான மகாலட்சுமியைப் போற்றி பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம். கமலாத்மிகாவான மகாலக்ஷ்மியை தியானிப்பதால் துன்பம், வறுமை போன்றவை நீங்கும். புகழ் உண்டாகும். பசி, தாகம், பாவம் நீங்கும். மனதில் எழும் விருப்பங்கள் நிறைவேறும். வாக்கில் சத்தியம் நிலைக்கும்.ஞானமும் தேஜஸும் கிடைக்கும். கமலாத்மிகா காயத்ரி 
ஓம் பூ:லக்ஷ்மி புவர் லக்ஷ்மி ஸுவர் லக்ஷ்மி காமகர்ணி: தன்னோ மஹாலக்ஷ்மி ப்ரசோதயாத்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment