Friday, 13 July 2018

விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்த கோதண்டராமர்

ராமேஸ்வரம்-தனுஷ்கோடி சாலையில் 11 கிமீ தொலைவில் பழமையான கோதண்டராமர் கோயில் உள்ளது. மூலவராக கோதண்டராமர் என்று அழைக்கப்படும் ராமர் சிலை உள்ளது. ராமர் சன்னதியில் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், விபீஷ்ணர் சிலைகள் உள்ளன. சன்னதியில், ராமர் தனது கையில் கோதண்டத்துடன் (வில்) இருப்பதால் கோதண்டராமர் என்று அழைக்கப்படுகிறார். சிறிய அளவில் உள்ள இந்தக் கோயிலில் கருடாழ்வாரும், முன் மண்டபத்தில் ராமானுஜரும் உள்ளனர். கோயிலில் ரத்னாகர தீர்த்தம் உள்ளது. கோயிலின் 3 திசைகளும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பொதுவாக ராமர் கோயில்களில் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் அருகில் வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் சிலை இருக்கும். ஆனால் இங்கு ராமர் முன்பு வணங்கிய நிலையில் விபீஷ்ணர் காட்சியளிக்கிறார். ராமனின் அருள் பெற்றதால் விபீஷணருக்கு ஆழ்வார் பட்டம் கொடுத்து, அவரை ‘விபீஷ்ணாழ்வார்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

தல வரலாறு

புராண காலத்தில் அயோத்தியிலிருந்து வெளியேறிய ராமர், சீதை மற்றும் லட்சுமணருடன் வனவாசம் சென்றார். வனப்பகுதியில் தனியாக இருந்த சீதையை இலங்கை மன்னன் ராவணன் கவர்ந்து சென்றான். ராவணனின் போக்கை அவரது சகோதரர் விபீஷ்ணர் கண்டித்தார். இதனை ராவணனன் ஏற்கவில்லை. இதனால் இலங்கையை விட்டு வெளியேறிய விபீஷ்ணர், ராமருடன் இணைந்து ராவணனுக்கு எதிராக போரிட்டார். போரில் ராவணனை, ராமர் கொன்றார். தொடர்ந்து தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில் இலங்கை மன்னராக விபீஷ்ணருக்கு ராமர் பட்டாபிஷேகம் செய்தார். இந்த நிகழ்வுக்கு பின்னரே இங்கு கோதண்டராமர் கோயில் கட்டப்பட்டது. இதனால் இப்பகுதி ‘கோதண்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

இங்கு புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று விசேஷ பூஜை நடக்கிறது. ஆனி மாத வளர்பிறையில் நவமி தினத்தில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஆனி மாதம் நடக்கும் ராமலிங்க பிரதிஷ்டையின் போது சீதையை ராவணன் கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை அழித்தல் உள்ளிட்ட வைபவங்கள் நடக்கின்றன. தீயவர்களிடமிருந்து விலகி நிற்க, நல்வழியில் நடக்க, நேர்வழியில் பதவி உயர்வு பெற விரும்பும் பக்தர்கள் கோதண்டராமரை வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.

இங்குள்ள ஆஞ்சநேயரை ‘பரிந்துரைத்த ஆஞ்சநேயர்’ என அழைக்கின்றனர். பக்தர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை அவர் முன் எடுத்து வைத்தால் அவற்றை கோதண்டராமரிடம் பரிந்துரைத்து, ஆஞ்சநேயர் நிவர்த்தி செய்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இவற்றில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயில் நடை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment