பெரம்பலூர் அருகே உள்ளது ஆடுதுறை அபராதரட்சகர் திருத்தலம். நீவா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் சு.ஆடுதுறை என்று அழைக்கப்படுகிறது. இனாம் கிராமமாக இந்தக் கோவியிலுக்கு இந்த ஊர் வழங்கப்பட்டதால், சுரோத்ரியம் (இனாம்) ஆடுதுறை எனவும், சுவேதகேது முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி பாவம் நீங்கப்பெற்றதால் சுவேதகேது ஆடுதுறை எனவும், சுக்ரீவன் ஆடுதுறை எனவும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இவற்றின் சுருக்கமாக சு.ஆடுதுறை எனவும் அழைக்கப்படுவதாக கூறுகிறார்கள். தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், சப்த ரிஷிகளான அகத்தியர், வசிஷ்டர், பரத்வாஜர், பராசரர், கவுதமர், காஸ்யபர், கெளசிகர் ஆகிய முனிவர்கள் ரிஷிபதம் இழந்தனர். அந்தப் பாவம் தீர சப்தரிஷிகளும், நீவா நதியின் கரையில் ஏழு இடங்களில் சிவனை நினைத்து வழிபட்டனர். அந்த சப்த ஸ்தலங்களில் நான்காவதாக நடுவில் அமைந்துள்ளதுதான் ஆடுதுறை.
ஒருமுறை சுவேதகேது முனிவர், இறைவன் அருள்வேண்டி தவம் புரிந்தார். அப்போது அவர் உச்சரித்த, அபாயம் அகற்றும் ‘சிவாய நம’ என்னும் மந்திரம், உச்சரிப்பில் தடுமாறியது. அவரது மனம் தவத்தை மேற்கொள்ள ஒன்றுபடாமல் குரங்குபோல் பல நிகழ்வுகளை எண்ணிக் கொண்டிருந்தது. இந்தநிலை பற்றி சுவேதகேது முனிவர், தனது தந்தையான உத்தாலகரிடம் சென்று விளக்கம் கேட்டார். அவர் தனது தத்துவ உபதேசத்தில், ‘மகனே! உனது தீர்த்த யாத்திரையின்போது தாகத்தால் தவித்த உன்னை, திலோத்தமை மோகத்தால் மயக்கி தன் மாயாவனத்திற்கு கொண்டுசென்றாள். அந்தப் பகுதியில் யாத்திரை மேற்கொண்டிருந்த முனிபுங்கவர்கள் அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டனர். அப்போது நீ திலோத்தமையுடன் காதல் லீலை புரிந்துகொண்டிருந்தாய். அந்தக் குற்ற உணர்வு இப்போது உன்னை மனக்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நீவா நதியில் நீராடி சிவபெருமானிடம் நீ பாவமன்னிப்பு கோரினால் உன் பாவம் தொலையும்’ என்று கூறினார்.
அதனைக்கேட்ட சுவேதகேது பெரிதும் மனம் வருந்தினார். தனது இந்த நிலைக்கு காரணமான திலோத்தமை மேல் தீராத சினம் கொண்டார். தனது மனம் குரங்குபோல் அலைந்து திரிந்ததற்கு காரணமான திலோத்தமையை குரங்காக பிறக்க சபித்தார். பின்னர் தந்தை சொல்படி யாத்திரை சென்று நீவா நதியில் நீராடி ஆடுதுறை ஈசனிடம் வேண்டி வணங்கி நின்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவருக்கு மன்னிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியால் இறைவன் திருநாமம் அபராதரட்சகர் என்றானது. அன்று முதல் இறைவன் குற்றம் நீக்கும் குணக்குன்றாக ஆடுதுறையில் அருள்பாலித்து வருகிறார். இவர், குற்றம் பொறுத்தவர், குற்றம் பொறுத்தருளிய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஏலவார் குழலி அம்மை, எழில்வார் குழலி அம்மை, சுகந்த கூந்தலாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.
வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் கிழக்கு பார்த்து, நெடிதுயர்ந்த கோபுரத்துடன் கம்பீரமாக நிற்கிறது. ராஜகோபுரத்திற்கு வெளியே வட கிழக்கு மூலையில் விமான பிரதிஷ்டையுடன் கோயில் சுவரிலேயே விநாயகர் எழுந்தருளியிருப்பது ஒரு சிறப்பாகும். நீவா நதியில் நீராடி, கோடி விநாயகர் எனப்படும் இவரை வணங்கிவிட்டு கோயிலினுள் நுழையலாம். ஆலயம் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கின்றன கல்வெட்டுக்கள். ராஜகோபுரம், விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுன ராயரால் கி.பி.1450ல் கட்டப்பட்டதாகும். ஏழு அடுக்கு கொண்ட இந்த கோபுரத்தில் உள்ள சுதை வேலைப்பாடுகளும், சிற்ப வேலைப்பாடுகளும் காண்போர் மனதை ஈர்க்கக்கூடியவை.ராஜகோபுரத்தைக் கடந்தால் வலப்புறத்தில் அலங்கார மண்டபத்தையும், இடப்புறத்தில் ஊஞ்சல் மண்டபத்தையும் காணலாம். அடுத்து கல்யாண மண்டபம். உள்மண்டப வாசலின் இருபுறமும் கணபதியும், முருகனும் வீற்றிருக்கின்றனர்.
இரு பிராகாரங்களும், ஒரு வெளிவீதியும் உள்ளன. முதல் பிராகார மண்டபத்தில் லிங்க வடிவில் மூலவர் உள்ளார். உள்மண்டப வடகிழக்கு மூலையில் நவகிரகங்கள். சுற்றில் அம்பாளின் சப்த வடிவங்கள், வலஞ்சுழி விநாயகர், தண்டபாணி, சுப்ரமணியர்வள்ளிதெய்வானை, விசாலாட்சி, விஸ்வநாதர், பெருமாள், கஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு சந்நதிகள் உள்ளன. அம்மன் சந்நதி தனியே தெற்கு நோக்கி முன்மண்டபத்தில் அமைந்துள்ளது. சூரியன் இத்திருக்கோயிலில் பீடாதாரமாக எழுந்தருளியிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 11, 12, 13 தேதிகளில் மூலவர் மேல்பட்டு இறைவனை பூஜிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது வியப்பான ஒன்று. பாவம் செய்த திலோத்தமை, சுவேதகேது இட்ட சாபத்தை நாரதர் மூலம் அறிந்தாள். தனக்கு ஏற்பட்ட சாபம்தீர வழி சொல்லுமாறு பிரகஸ்பதியிடம் வினவினாள்.
தேவகுரு, சுவேதகேதுவையே சந்தித்து கேட்குமாறு அறிவுறுத்தினார். அபராதரட்சகர் தலத்தில் தவம் புரிந்துகொண்டிருந்த சுவேதகேதுவிடம் வந்தாள் திலோத்தமை பிறந்தாள். அபராதரட்சகர் தலத்திற்கு நீலனாக வந்தாள். நீவா நதியில் நீராடி இறைவழிபாடு செய்தாள். ஆடுதுறை பரமனும் நீலனை தனது அருட்பார்வையால் ஆட்கொண்டார்.
பின்னர், ‘நீலனே! தேவர்கள் வானர வடிவில் கிஷ்கிந்தையில் தோன்றியுள்ளனர். நீயும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ராமனுக்கு தொண்டு செய்வாய்’ என்று கூறினார் சுவேதகேது. அதன்படி ராமனுக்காக சேதுசமுத்திரப் பாலம் அமைக்க முக்கிய பங்காற்றினாள். இறுதியில் அங்கதன், சுக்ரீவன், அனுமன், சுஷேணன் ஆகிய வானரர்களுடன் ஒருங்கே ஆடு துறைக்கு வந்து நீவா நதியில் நீராடி இறைவனை வணங்கி சாபம் நீங்க பெற்றாள். வானரங்கள் நீராடியதால் அத்தலம் ‘வானர ஸ்நான தீர்த்தபுரம்’ எனவும் அழைக்கப்படுகிறது. அம்மன் சந்நதிக்கு எதிரில் நீலன், அனுமன் சிற்பங்கள் மண்டப தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. கோபுரத்திலும், மண்டப தூண்களிலும் குரங்கு சிற்பங்கள் அதிக அளவில் உள்ளன. பெரம்பலூர் தாலுகா தொழுதூர்திட்டக்குடி சாலையில் ஆக்கணூருக்கு தெற்கே ஒரு கி.மீ தொலைவிலும், திருச்சிவிழுப்புரம் ரெயில் பாதையில் பெண்ணாடம் ரெயில் நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment