Friday, 18 May 2018

தென்கரை மகாராஜா வரலாறு.!!

சித்த்தூர், வள்ளியூர், நெல்லை.
திருநெல்வேலி மாவட்டம் சித்தூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள தென்கரை மகாராஜா, நம்பி வரும் பக்தர்களுக்கு பொன், பொருள் வழங்கி கஷ்ட நஷ்டங்களை களைந்து வாழ்வை வளமாக்கி வைக்கிறார். பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன் ஒருநாள் உதவியாளர்கள் சிலருடன் வேட்டைக்கு வந்திருந்தார். பம்பாநதி கரையோரமாக வந்தபோது நந்தவன செடிகள் நிறைந்த பகுதி அருகே அவரது குதிரை நின்றது. அதற்குமேல் மன்னன் முயற்சித்தும் குதிரை நகரவே இல்லை. சினம் கொண்டு குதிரையின் மேலிருந்து இறங்கினான், மன்னன். அப்போது சிசுவின் குரல் அவனது செவிகளில் கேட்டது. குரல் கேட்டு அந்த இடத்துக்கு சென்ற மன்னன் வியந்தான். அழகான ஆண்குழந்தை. மகிழ்ந்தான். கையிலெடுத்து முத்தமிட்டான். குழந்தை இல்லாமல் ஏங்கிய தனக்கு தெய்வம் கொடுத்த குழந்தை என்பதை உணர்ந்தான்.
மன்னரின் மனமறிந்து மகிழ்ந்தனர் உடன் வந்த வீரர்கள். குழந்தையுடன் அரண்மனைக்கு விரைந்தான் ராஜசேகரன். பட்டத்து ராணி கோப்பெரும்தேவியிடம் நடந்ததைக் கூறினான். ராணி குழந்தையை எடுத்து வாரி அணைத்துக் கொண்டாள். குழந்தை இல்லாத குறையை போக்க வந்த தெய்வீக குழந்தை என்ற பெருமகிழ்வு கொண்டாள். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இருந்ததால். கண்டத்தில் மணி அணிந்திருந்த குழந்தை என்பதால் மணிகண்டன் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். அனைவரிடமும் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்டான், மணிகண்டன். மகன் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தாள் ராணி கோப்பெரும்தேவி. மணிகண்டனுக்கு வயது பதிமூன்று தொடங்கியது. கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்க குருகுலத்திற்குச் சென்றான்.
ஒரு குழந்தையை வளர்த்ததன் பலன் ராணிகோப்பெரும்தேவிக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்யம் கிட்டியது. தான் கருவுற்றிருந்ததை மன்னனிடம் கூற, இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராஜராஜன் என பெயரிட்டனர். தம்பி மீது மணிகண்டன் பிரியமாக இருந்தான். ராஜராஜனும் அண்ணன் மணிகண்டனை உயிருக்கு உயிராக மதித்தான். மணிகண்டனுக்கு முடிசூட்ட எண்ணினார் பந்தளராஜா. இதற்கு எதிராக ராணியின் உறவினரான ஒரு அமைச்சர் சதி செய்தார். தனது எண்ணோட்டத்தை ராணியிடம் கூறினார். காட்டில் கண்டெடுத்த பிள்ளை அரசாள வேண்டுமா?, உன் வயிற்றில் பிறந்த பிள்ளை அரசாள வேண்டுமா என கேள்வி எழுப்பியவர், மணிகண்டன் இருக்கும் வரை இந்த பிரச்சனைக்கு முடிவு இல்லை. ஆகவே அவனை விரட்ட வேண்டும். இல்லையேல் தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்து, அரண்மனை வைத்தியரின் மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.
அந்த நாடகத்தின்படி ராணி கோப்பெரும்தேவி வயிற்று வலியால் துடிக்க, அரண்மனை வைத்தியரின் ஆலோசனைப்படி புலிப்பால் இருந்தால்தான் வலியை குணமாக்க முடியும் என்ற நிலை உருவானது. தாயின் மீதிருந்த பாசத்தாலும், தான் அவதரித்த நோக்கத்திற்காகவும், தந்தை பந்தள மன்னன் தடுத்தும் புலிப்பால் கொண்டு வர காட்டிற்கு விரைந்தார். புலி கூட்டத்துடன் அரண்மனைக்கு வந்தார். தான் யார் என்பதை உணர்த்தினார். தெய்வீகத்தன்மையுடன் ஹரிஹரன் தனது மகனாக தன் மடியில் தவழ்ந்தானா! அமைச்சரின் பேச்சைக்கேட்டு தவறு இழைத்துவிட்டேனே என்று தப்பை உணர்ந்த ராணி, ஓடிவந்து மணிகண்டனிடம் மன்னிப்பு கோரினாள்.
மணிகண்டன் ‘‘அம்மா, நீங்கள் என்னைப் பெறாவிட்டாலும், வளர்த்தெடுத்த தாயல்லவா, மகனிடத்தில் மன்னிப்பு கேட்கலாமா? என்று கூறினார். மன்னன் ராஜசேகரனோ, ‘‘நடந்தது நடந்தாகட்டும். மணிகண்டா, நீ, இனி எங்களோடு இருந்து இந்த நாட்டை ஆள வேண்டும்’’ என்று கூறினார். அதற்கு மணிகண்டன், தான் வந்த நோக்கம் முடிந்தது. தந்தையே எனக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உங்கள் ராஜ்யத்துக்குட்பட்ட எல்லையில் ஓர் இடம் கொடுங்கள். என்று கேட்க, உனக்கு எந்த இடம் வேண்டுமோ அதை நீ விரும்பியபடியே எடுத்துக்கொள். இந்த ராஜ்யமே உனக்குச் சொந்தம் என்றார், மன்னர். அப்போது மணிகண்டன் நான் இங்கிருந்து அம்பு எய்கிறேன். அது எங்கு போய் விழுகிறதோ அங்கே எனக்குக் கோயில் எழுப்புங்கள் என்று கூறிய மணிகண்டன், அம்பு எய்தார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அது தான் சபரிமலை.
வளர்த்த மைந்தன் மணிகண்டன் ஜோதியாகி தெய்வமானான். பிறந்த மகன் ராஜராஜன் இந்த நாட்டை ஆளட்டும் என்று மன்னன் ராஜசேகரனும், ராணி கோப்பெரும்தேவியும் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் தாய், தந்தையே என்னை ஆசிர்வதியுங்கள் என்று கூறியபடி அவர்களின் பாதங்களை தொட்டான் ராஜராஜன். ‘‘என்னதப்பா இந்தக் கோலம் முடிசூடி சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டிய நீ, ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டு எங்கே செல்கிறாய்’’ என்று தாய் கேட்க, ‘‘தந்தையே, அண்ணன் மணிகண்டன் இல்லாத இந்த அரண்மனை வாழ்வு எனக்கு வேண்டாம். நான் நாடாள வேண்டும் என்பதற்காக தாயே நீங்கள் நடத்திய நாடகத்தால்தான் அண்ணன் நம்மை விட்டு விலகி சென்றான். அந்த நாடாளும் பாக்யம் எனக்கு வேண்டாம். நான் போகிறேன். கால் போன போக்கில் பயணம் எனக்கென்று ஓர் இடம். சிறு வயதிலிருந்தே பயன்படுத்திய இந்த குதிரையுடன் செல்கிறேன்.’’
பெற்றவர்கள் தடுத்தும் நிற்காமல் அண்ணன் மணிகண்டன் நாமத்தை உரைத்தபடி அவ்விடத்திலிருந்து குதிரையில் பயணமானார் ராஜராஜன். பல ஊர்கள் கடந்து பந்தள நாட்டு எல்லை விட்டு நாஞ்சில் நாடு கடந்து, பாண்டிய நாட்டிற்கு வந்தார் ராஜராஜன். நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலையில் உருவாகி ஓடும் நம்பி ஆறு பாய்ந்தோடும் வள்ளியூர் அருகேயுள்ள ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட கண்ணநல்லூர் கிராமத்தில் சித்தூரில் நம்பி ஆற்றின் தென்கரையில் மணல்திட்டில் வந்தமர்ந்தார் ராஜராஜன். எல்லாம் வேண்டாம் என்று வந்த போதும் அவரது உடையில் ராஜ தோற்றம் மாறவில்லை. ஆற்றில் சிறதளவே வெள்ளம் வர அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தாள் இடைக்குல பெண்ணொருத்தி.
கன்று தென்கரைக்கு நிற்க, பசுவோடு மற்ற மாடுகளும் வடகரையில் நின்றது. அப்போது ஆற்றில் பெருவெள்ளம் வந்தது. இக்கரையில் நின்ற பசு கத்தியது. அக்கரையில் நிற்கும் கன்று தாயிடம் வரமுடியாமல் தவித்தது. அப்போது அந்த இடைக்குல பெண் ஆற்றுக்கு தென்கரையில் இருக்கும் மகாராசா கண்ணுக்குட்டியும், பசுவும் சேர வழி செய் ஐயா என்றுரைத்தாள். ராஜராஜன் அண்ணன் மணிகண்டனை நினைத்து தன் வலக்கரம் நீட்ட, ஆற்றின் நடுவே பாதை கூட, அவ்வழியே கன்று ஓடி தாயிடம் சேர்ந்தது. மீண்டும் ஆற்றில் சீராய் வெள்ளம் ஓடியது. வியப்பை கண்ட அந்த பெண் தென்கரை மகாராசா என்று குரல் எழுப்பி அழைக்க, தென் கரையில் இருந்தபடி ராஜராஜன் புன்னகைத்தார்.

கோயில் உருவானது எப்படி, சாஸ்தா கையில் வேல் இருப்பது ஏன்?

திருநெல்வேலி மாவட்டம் சித்தூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள மகாராஜேஸ்வரர், தன்னை கை தொழும் பக்தர்களுக்கு மகத்தான வாழ்வு அருள்கிறார்.
பந்தள ராஜாவின் மகன் ராஜராஜன், அண்ணன் மணிகண்டன் என்னை விட்டு பிரியக் காரணமான, நாடாளும் அரியனை எனக்கு வேண்டாம். அரண்மனை வாழ்க்கையும் வேண்டாம். மனம்போன போக்கில் பயணிக்கப் போகிறேன். எனக்கென்று ஓர் இடம் அமையும் அவ்விடம் தேடிச் செல்கிறேன் என்று கூறிக்கொண்டு பெற்றோர் தடுத்தும், செவிமடுக்காமல் புறப்பட்டார். பாண்டிய நாடான நெல்லைச் சீமையில் வள்ளியூர் அருகேயுள்ள ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட கண்ணநல்லூர் கிராமத்தில் சித்தூரில் நம்பி ஆற்றின் தென்கரையில் மணல்திட்டில் வந்தமர்ந்தார். நம்பி ஆறு மகேந்திரகிரி மலையின் வடமேற்குப் பகுதியிலுள்ள பஞ்சவடி பகுதியில் உற்பத்தியாகி, திருக்குறுங்குடி மலையிலுள்ள நம்பிக் கோயில் முன்பாக நீரோடையாக பாய்ந்து திருக்குறுங்குடி, ஏர்வாடி, சிறுமளஞ்சி வழியாக சித்தூர் வந்து ஆற்றாங்கரைபள்ளி வாசல் பகுதியில் கடலில் சேர்கிறது.
இந்த நம்பி ஆற்றின் தென்கரையில் வந்து அமர்ந்த ராஜராஜன், தனது அண்ணன் மணிகண்டனை நினைத்து தியானம் செய்தார். அரிஹரசுதன் அய்யப்பன் அவரிடத்தில் உன்னுள் நான் கலந்தேன். உன்னை தரிசிப்பவர்கள் உன்னில் என்னைப் பார்க்கலாம் என்றுரைத்தார், அசரீரியாக. வெட்டவெளிப் பகுதியான கானகத்தில் ஆற்றின் கரையோரம் மணல் குவிந்திருந்த சற்று உயர்ந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தார் ராஜராஜன். ராஜராஜன் தான் இங்கே அமர்ந்திருப்பதை ஊரறிய, உலகறியச் செய்ய வேண்டும் என்று எண்ணினார். அந்த நேரம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தேரோட்டம் நடத்த வேண்டும் அதற்கு கொடிமரம் வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள். கொடிமரம் வெட்ட மூன்று குழுவாக பிரிந்து மூன்று மலைகளில் மரம் வெட்ட செல்கிறார்கள். ஒரு குழுவினர் காக்காச்சி மலைக்கு மரம் வெட்ட செல்கின்றனர். ஒரு குழுவினர் சொரிமுத்தய்யன் கோயிலுக்கு மேற்கே காரையார் பகுதிக்குட்பட்ட கன்னடியான் சோலைக்கு செல்கின்றனர். இன்னொரு குழுவினர் திருக்குறுங்குடி மலைக்கு மேற்பரப்பில் வெட்ட செல்கின்றனர்.
திருக்குறுங்குடி மலைப்பகுதியில் கொடிமரத்திற்காக வெட்டப்பட்ட மரத்தை நம்பி ஆற்றில் விடுகின்றனர். அம்மரம் தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. சித்தூர் வந்ததும், ராஜராஜன் சிலையாக நிலையம் கொண்டிருக்கும் பகுதி அருகே ஆலமரம் வேர் தட்டி நிற்க, மரத்தின் பின் தொடர்ந்த வந்தவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது. மரம் நகரவே இல்லை. இதுகுறித்து திருச்செந்தூர் சென்று கோயில் நிர்வாகிகளிடம் எடுத்து கூறுகின்றனர். அவர்கள் கேரள நம்பூதிரிகளை வரவழைத்து பிரசன்னம் பார்க்கின்றனர். அப்போது சித்தூரில் நிலையம் கொண்டிருப்பது அந்த அய்யப்பனின் தம்பி ராஜராஜர் என்றனர். அவருக்கு உரிய பூஜை செய்தபின் முயற்சியுங்கள் காரியம் வெற்றியாகும் என்றனர். பூஜை செய்யும் விதம்பற்றிக் கூறியவர்கள், ராஜராஜர் என்பதை தெய்வாம்சம் கொண்டவர் என்பதால் ராஜராஜ ஈஸ்வரர் என்றும் மகாராஜஈஸ்வரர் என்றும் அழைத்து வழிபடுமாறு கூறினார்.
அதுவே மகாராஜேஸ்வரர் என அழைக்கப்படலாயிற்று. நம்பூதிரிகள் சொன்னபடி பூஜை செய்தும் மரம் நகரவில்லை. அன்றிரவு திருச்செந்தூர் கோயில் நிர்வாகிகளின் கனவில் வந்த சண்முகர் இங்கிருக்கும் வேல் ஒன்றை கொண்டு சென்று ராஜேஸ்வரர் சந்நதியில் வைத்துவிட்டு, உனக்கு கோயிலுண்டு, விழா உண்டு, தேரும் உண்டு என்று கூறிவிட்டு மரத்தை தட்டு, மரம் தானே வந்து சேரும் என்று கூற, அதன்படியே அவர்கள் சித்தூர் வந்து மகாராஜேஸ்வரர் சிலையின் வலது கையில் வேல் கொடுத்தனர். பின்னர் நடந்த பூஜையின்போது ஐயா, உனக்கு கோயில் உண்டு, நித்திய பூஜை உண்டு, விழா உண்டு அத்தாந்தர காடானாலும் உத்திரத்தில் ஊர் கூடும். அப்போது தேர் ஓடும் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளனர். அதன் பின்னரே மரம் தங்கு தடையின்றி சென்றது.
இதன் காரணமாகத்தான் திருச்செந்தூர் மாசித்திருவிழா கொடியேற்றம் அன்று சித்தூர் மகாராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டத்திற்கு கால் நாட்டப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்னால் கொடியேற்றம் நடைபெற வேண்டிய விதிகளுக்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்னாடியே சித்தூர் கோயிலில் கால் நாட்டக்காரணம். திருச்செந்தூரில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற மகா ராஜேஸ்வரர் சாந்தமாகி துணையிருக்க வேண்டும் என்பதற்குத்தான் என்று கூறப்படுகிறது. வள்ளியூரிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்திலுள்ள சித்தூர் கோயில் கேரள மரபுப்படி கட்டப்பட்டிருக்கிறது. கோயிலைச்சுற்றி 22 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் உள்ளது. கோயிலின் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. வடக்கு வாசல் நம்பி ஆற்றைப் பார்த்து உள்ளது. மகாராஜேஸ்வரர், கேரளாவைச் சேர்ந்த அதிகமானோர்களுக்கு குல தெய்வமாக திகழ்கிறார். குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை போன்ற பல ஊர்களில் பரவலாக இந்தக் கோயிலுக்கு பாத்தியப்பட்டவர்கள் உள்ளனர். இக்கோயிலின் தல விருட்சமாக மருதாணி மரம் உள்ளது. அதன் கீழ் பேச்சியம்மன் சந்நதி உள்ளது. மூலவர் மகாராஜேஸ்வரரை அடுத்து பிரசித்து பெற்றவராக தளவாய்மாடசாமி உள்ளார்.

கோயிலில் களவு செய்ய வந்தவர்கள் காவல் தெய்வங்களானதை பார்ப்போம் ?

வன்னியராஜா.!!

திருநெல்வேலி மாவட்டம் வன்னிக்களந்தை ஊரில் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்த ஜமீன் மனைவி அம்மையடியாளுக்கு ஒரே கவலை. திருமணமாகி ஆண்டுகள் ஐந்து ஆன பின்னும் பிள்ளை இல்லையே என்பதுதான். போகாத தலங்கள் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை. இருந்தும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை என்று ஏங்கினாள். ஒருநாள் அவ்வழியாக வந்த குடுகுடுப்பைக்காரன் “ஆத்தா, நாச்சியாரே, சங்கரன்கோவில் தலம் சென்று ஆவுடையம்மன் சந்நதியிலே தவசு இருந்தால் நிச்சயம் நடக்கும். நினைத்தது கிடைக்கும்” என்றுரைத்தான். அதன் படி அம்மையடியாள் சங்கரன்கோவில் புறப்படுகிறாள். அவரது கணவன் “இத்தனை நாள் வரம் கொடுக்காத சாமியா இப்ப வந்து கொடுக்கப்போகுது. வேலையத்து திரியாத,” என்று கூறியும், அம்மையடியாள் போனாள். சங்கரநயினார் கோயில் வந்த அம்மையடியாள் ஆவுடையம்மன் சந்நதியில் குழந்தை வரம் வேண்டி தபசு இருந்தாள்.
அந்த நேரம் தளவாய் மாடன், நம்ம ஸ்தலத்துக்கு ராக்காவலுக்கு ஆள் வேண்டி நெல்லை சீமை வடமதிக்கு சென்று வருவோம் என கூறிக்கொண்டு மகாராஜேஸ்வரரின் உத்தரவைப் பெற்று புறப்படுகிறார். சங்கரன்கோவில் தலத்துக்கு ஆண்டிப் பண்டாரம் ரூபம் கொண்டு தளவாய் மாடன் வருகிறார். ஆவுடையம்மன் சந்நதியில் தபசு இருந்த அம்மையடியாளை அழைத்து நீ நம்பி ஆற்றின் தென்கரையில் கோயில் கொண்டு மகாராஜேஸ்வரர் ஆலயம் சென்று ஆத்தியடி மூடத்திலே நின்றருளும் பேச்சியம்மன் சந்நதி முன்பு குழந்தை வரம் வேண்டி தபசு இருந்தால். நிச்சயம் கிடைக்கும் என்று கூற, அம்மையடியாள் சித்தூர் சென்று நம்பி ஆற்றில் தீர்த்தம் ஆடி, மாத்துத்துணி உடுத்தி தபசு இருக்கும் வேளையிலே, தளவாய் மாடன் பண்டாரம் ரூபத்தில் வந்து உனக்கு பிறக்கும் மூத்த பிள்ளை வாலிபனாகும்போது அவனை கோயிலுக்கு காவலுக்கு தரவேண்டும் என்று கூற, அம்மையடியாள் ஆனந்தத்தில் “ஒரு பிள்ளை என்ன, பிறக்கும் பிள்ளைகள் அனைத்தும் சாஸ்தா காவலுக்கு தருகிறேன்” என்று உணர்ச்சி பொங்க கூறினாள்.
அப்படியானால் சத்தியம் செய் என்று கூறி தனது வலக்கரத்தை தளவாய்மாடன் நீட்ட, தன் கரத்தால் செய்தாளே சத்தியம் அம்மையடியாள். அன்றிலிருந்து மறு வருடம் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தாள் அம்மையடியாள். ஆண்டுக்கு ஒரு குழந்தை என ஆறு ஆண் குழந்தைகளையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். மூத்த மகன் சின்னதம்பி வன்னியன், 2. சிதம்பர வன்னியன், 3. ஆண்டு கொண்ட வன்னியன், 4. அழகு விலங்கடி வன்னியன், 5. தென்கரை வன்னியன், 6. வடகரை வன்னியன் என பெயரிட்டவள். ஏழாவதாக பிறந்த மகளுக்கு வன்னிச்சி என்றும் பெயரிட்டாள். வன்னியன், வன்னிச்சி என பெயரிட காரணம், சங்கரன்கோவில் இறைவன் சங்கரநயினார், வன்னி மரத்தடியில் இருப்பதால் இந்த இறைவன் வன்னியபெருமாள் என்றும் வன்னியடியான் என்றும் வன்னியடி சங்கரநயினார் என்றும் அழைக்கப்படலானார்.
அந்த இறைவனின் தலத்துக்கு சென்ற பின்னர் தான் தளவாய்மாடனை கண்டு அதன்பால் சித்தூர் வந்து குழந்தை பாக்கியம் பெற்றமையால் அம்மையடியாள், சங்கரன்கோவில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தனது குழந்தைகளுக்கு பெயருடன் வன்னியன் என சேர்த்து பெயர் இட்டு வளர்த்து வந்தாள். மூத்தமகன் சின்னதம்பி வன்னியனை, வன்னியராஜா என்று செல்லமாக அழைத்து வந்தாள். மூத்தவன் சின்னதம்பி வன்னியன்(வன்னியராஜா) பதினாறு வயதில் பாளையத்துக்கு துரை ஆனான். மகன் மூத்தவனுக்கு மணமுடிக்க எண்ணிய அம்மையடியாள், தனது அண்ணன் ஏழாயிரம் பண்ணை என்ற ஊரில் இருக்கும் உடையாரிடம் சென்று பெண் கேட்டாள். அப்போது அவர், “தாயி, நீ என் உடன்பொறந்தவா தான். உன் மவனுக்கு என் மவ உரிமைப்பட்டவதேம். உன் வீட்டுல எவ்வளவு செல்வம் இருந்தாலும் நம்ம குல வழக்கப்படி உம்மகன் கன்னிக்களவு செஞ்சு காட்டட்டும். அப்புறமா என் மவள கட்டட்டும். என்ன ஆத்தா, நான் சொல்றது சரிதான..” என்று கூறினார்.
உடனே அங்கிருந்து புறப்படலானாள் அம்மையடியாள், “ஏ, மதனி ஒரு வாய் சோறு திண்ணுட்டு போங்க” என்ற அண்ணன் மனைவியின் குரலுக்கு செவி மடுக்காமல் போயிட்டு வாரேன் என்ற வார்த்தையோடு விரைந்தாள் தனது வீட்டுக்கு. வந்த வேகத்தில் அண்ணன் வீட்டில் நடந்ததை மகன்களிடம் எடுத்துக்கூறினாள். தாயின் கட்டளையை ஏற்று அமாவாசை இரவு அண்ணன் தம்பிகள் 6 பேரும் களவு செய்ய செல்கின்றனர். பொத்தையடி பொட்டலில் கிளியாந்தட்டு என்ற விளையாட்டை விளையாடினர். இரண்டு மணி நேரம் விளையாடியவர்கள் களைப்பில் ஓய்ந்து இருந்தனர். அப்போது தள்ளாடி வயது முதிர்ந்த கிழவனாக அவ்விடம் வந்த தளவாய்மாடன், “தம்பிங்களா, நான் சோசியக்காரன் உங்கள பார்த்த களவு செய்ய வந்ததுபோல இருக்க” என்று கூற, “ஆமா தாத்தா என்றுரைத்தான்” சின்னதம்பி வன்னியன். “நீங்க களவு செய்ய வேறு எங்கும் போக வேண்டாம், சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு போங்க, வேண்டிய மட்டும் பொன்னும் பொருளும் கிடைக்கும்” என்றார்.
அதன்படி அண்ணன் தம்பிகள் ஆறு பேரும் களவு செய்ய சித்தூர் தென்கரை மகாராஜா கோயிலுக்கு செல்கின்றனர். இருபத்தியோரு பழுது கொண்ட ஏணியை சுவற்றில் சாத்தி அதன் மூலம் ஏறி கோயில் உள் பிராகாரம் செல்கின்றனர். மூத்தவன் கருவறையை திறந்து திரவியத்தை களவாட முற்படும் போது, மகாராஜா கோயிலை நிர்வகித்து வந்த உதயமார்த்தாண்டன் கனவில் தளவாய்மாடன் சென்று மகாராஜா கோயிலில் நெல்லைச்சீமை வடமதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் ஆறுபேர் களவாட வந்திருக்கிறார்கள். நான் அவர்களை மதி மயங்க வைத்து வந்திருக்கிறேன். நீ உடனே போ என்று கூறினார். மார்த்தாண்டம் பிள்ளை உடனே கண்ணூரு, வில்லம்பூரூ தலைவர்மார்களுக்கு ஆள் அனுப்பினார். தகவலாளி வந்து சொன்னதும் தலைவர்மார்கள் இரண்டு பேரும் குதிரை மீதேறி தீப்பந்தங்களுடன் சித்தூர் கோயிலுக்கு விரைந்து வந்தனர். நடை திறந்து அண்ணன் தம்பி ஆறு பேரையும் பிடிக்கின்றனர். அவர்களை சங்கிலியால் பிணைத்து கட்டி கண்ணுபுளி மூடு அருகே கொண்டு நிறுத்துகின்றனர்.
இந்த நேரத்தில் அம்மையடியாள் கனவில் ஆண்டி ரூபம் கொண்டு சென்ற தளவாய்மாடன் உன் புள்ளங்க களவு செய்யப் போன இடத்தில மாட்டிக்கிட்டாங்க, அவங்க எடைக்கு எடை பொன் கொடுத்து மீட்டு வா என்று கூறுகிறார். உடனே, மனம் பதறிய அம்மையடியாள் ஆறு சுமடு திரவியத்தை எடுத்து முடிச்சு கட்டி தலைச்சுமடாக எடுத்து வருகிறாள். அவளது மகள் வன்னிச்சி அண்ணன் மார்கள் பசியோடு இருப்பார்களே என்று எண்ணி ஆறுவகை கூட்டு வச்சு அப்பளம் பாயாசத்தோடு சாப்பாடு செய்து தலைச்சுமடாக சுமந்து தாயுடன் வருகிறாள். அந்த நேரம் சித்தூரில் கண்ணுபுளி மூடில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு பேரையும் கண்ணூரு, வில்லம்பூரு தலைவர்மார்கள் நல்லெண்ணெய் தேய்த்து நீராட்டி, எருக்கலை மாலை சூட்டி ஆறுபேரின் தலையையும் அறுத்துப்போட்டு விட்டு சென்றனர். ஆறுபேரின் உடலும் துடிதுடித்து அடங்கும் வேளை அங்கே வந்தாள் அம்மையடியாள்.
முண்டமாக கிடந்த மகன்களின் உடல்களை கண்டு கதறி துடித்தாள். இனி நான் வாழக் கூடாது என்று நாக்கை பிடுங்கி உயிரை மாய்த்தாள். அண்ணன் மார்களுக்காக தலை சுமடாக கொண்டு வந்த சாப்பாட்டை தரையிலே கொட்டினாள். அண்ணன் மார்கள் ஒவ்வொருத்தரின் பெயரைக்கூறி அழைத்து ஒப்பாரி வைத்தாள் வன்னிச்சி அழுது முடிந்தவள். தனியே நின்று குழி வெட்டி அண்ணன்மார்கள் உடல்களை அடுக்கி தீ மூட்டினாள். தானும் நாக்கை பிடுங்கி உயிரை மாய்த்தாள். மகாராஜேஸ்வரர் உதயமார்த்தாண்டம் பிள்ளையின் கனவில் சென்று, ‘‘மாண்டுபோனவர்கள், என் தலத்தில் காவல் தெய்வமாக நிற்பார்கள். அவர்களுக்கு பீடம் கொடு. அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் வரும் பக்தர்களிடம் பெற்றுக்கொள்வார்கள்’’ என்று கூறினார். அதன் பேரில் மகாராஜேஸ்வரரின் ஆலயத்தில் காவல் தெய்வங்களாக வன்னிராஜாவும் அவரது தம்பிகளும், தாய், தங்கையரும் அருள்பாலிக்கின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

4 comments:

  1. ஐயா
    இந்த வரலாறு சிரப்பை பகிர்ந்தமைக்கு
    நான் தங்களுக்கு
    மனம்உருக நன்றி தெரிவித்து கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நம் பதிவுகளை தொடர்ந்து பார்க்கவும்

      Delete
  2. அருமையான ஆன்மீக வரலாற்று பதிவு.இதை நீங்கள் சித்தூர் கோவில் தலபுராணமாக வெளியிட்டு சித்தூர் தென்கரை மகாராஜேஷ்வரர் அருள் பெற வேணடுகிறேன்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete