வடக்கு கர்நாடகா, பிதார் மாவட்டம், பிதார் நகரில் மால்காபூர் சாலையில் உள்ள நரசிம்ஹஜாரி கோயிலை தரிசிப்பது உள்ளமும், உடலும் சிலிர்க்கவைக்கும் அற்புத பக்தி அனுபவமாகும். காரணம், ஒரு குகைக்குள் இந்தக் கோயில் அமைந்திருப்பதுதான். அதுமட்டுமல்ல, குகையில் நிறைந்திருக்கும் நீரில் நடந்துசென்று நரசிம்மரை தரிசிக்கவேண்டும். மொத்தம் சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு இந்த ‘நீர்ப் பயணம்’ அமைந்துள்ளது. இங்கு நரசிம்மர் எப்படி வந்தார்? பிரஹலாதனின் பக்தியால் தோன்றியவர் நரசிம்மர். தன் பக்தனுக்குத் தந்தையாக இருந்தும் அவனைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்திய இரண்யகசிபுவை நரசிம்மர் வதம் செய்தார். பொதுவாகவே நரசிம்ம அவதாரம், பிரஹலாதனின் பக்தி மேன்மையை உலகுக்குத் தெரியப்படுத்துவதும், கொடூரம் மிகுந்த இரண்யகசிபுவை வதைப்பதும்தான் என்று நமக்குத் தெரியும். ஆனால், இரண்யகசிபு மட்டுமல்லாமல் இன்னொரு அசுரனையும் அவர் வதம் செய்திருக்கிறார். அவன் ஜலாசுரன்.
மேலே குறிப்பிட்ட பிதார் பகுதியில் வாழ்ந்துவந்தவன் ஜலாசுரன். தன் இயல்புப்படி அனைத்து மக்களையும் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். யாருமே எளிதில் நெருங்க முடியாத மனிசோலா குன்றுகள் நிறைந்த பகுதியில் ஒரு குகைக்குள் தங்கியிருந்தான். இந்த குகை பக்கம் யாரேனும் போனாலும் சரி, இவன் குகையைவிட்டு வெளியே வந்தாலும் சரி, பாதிப்பு என்னவோ அந்தப் பகுதி மக்களுக்குதான். அடங்கி, ஒடுங்கி, வதைபட்டு எத்தனை நாட்கள்தான் மக்கள் அவதிப்படுவார்கள்! தங்களுடைய சொந்த முயற்சிகள் எதுவும் பலிக்காத இயலாமையில், பகவான் நரசிம்மரை சரணடைந்து வேண்டிக்கொண்டார்கள். பகவானுக்கு அந்த மக்கள் எல்லோருமே பிரஹலாதனாகவே தெரிந்தார்கள் போலிருக்கிறது! உடனே குகைக்குள் புகுந்த ஜலாசுரனை அழித்து ஒழித்தார்.
இறக்கும் தறுவாயில் தன் தவறை உணர்ந்த ஜலாசுரன், நரசிம்மரிடம், அவர் அந்த குகையிலேயே அர்ச்சாவதாரம் கொண்டு நிரந்தரமாகத் தங்கி பக்தர்கள் மனசிலிருந்து எல்லா அரக்க எண்ணங்களையும் வதைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதோடு, தான் அதுவரை பூஜித்து வந்த சிவலிங்கத்தையும் அவருக்கு சமர்ப்பித்தான். ‘தினமும் நியதிப்படி இந்த சிவலிங்கத்தை நீரால் அபிஷேகம் செய்து நான் வழிபட்டு வந்தேன். தங்களால் நான் வதம் செய்யப்பட்டாலும், நீர் வடிவாக இந்த குகையிலேயே நான் நிலைத்திருக்கவும் தாங்கள் அருளவேண்டும். சிவனுக்கு அபிஷேகமாக மட்டுமல்லாமல், தங்கள் திருப்பாதங்களை நான் நிரந்தரமாக நீராட்டவும் விரும்புகிறேன்,’ என்று வேண்டுகோள் விடுத்தான்.
கோயிலின் வரவேற்பு வளைவை கடந்து, சுமார் 300 அடி நடந்து கோயில் வாசலை அடையலாம். வாசலின் மேலே, மாடத்திலிருந்தபடி நரசிம்மரும், லட்சுமித் தாயாரும் நம்மை ஆசியளித்து, வரவேற்கிறார்கள். உள்ளே நுழைந்து ஐந்து படி இறங்கினால் குகை ஆரம்பிக்கிறது. அங்கிருந்து நான்கு அடி ஆழத்துக்கு நீர் நிரம்பியிருக்கிறது. சுமார் 250 மீட்டர் தூரம் அந்தத் தண்ணீரிலேயே நடந்து செல்லவேண்டும். எட்டு அடி உயரம் கொண்ட இந்த குகையில் குறுக்காக கம்பித் தடுப்புடனும் போவோருக்கும், வருவோருக்குமாக இரண்டு பாதைகளாக அமைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்த குகை குளிர்பதன (ஏ.சி.) வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஒளி வழங்க, மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீர் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதால் அது ஓரளவு அசுத்தமில்லாமல் இருக்கிறது என்று சொல்லலாம். குகை முடிவில் ஐந்து படிகள் ஏறினால், மேட்டில் அமைந்திருக்கும் கர்ப்பகிரகத்தை அடையலாம்.
நரசிம்மர், இடுப்புக்குக் கீழே நீரில் அமிழ்ந்தபடி அரிய தரிசனம் அருள்கிறார். முழு உருவத்தையும் பார்க்க இயலாதது கொஞ்சம் ஏக்கம்தான். ஜலாசுரன் அவர் பாதங்களை நனைப்பதாகச் சொல்லி, இடுப்புவரை அவரை ஆலிங்கனம் செய்துவிட்டான் என்றே தோன்றுகிறது. அவருக்குச் சற்றுகீழே இருபுறமும் பிரகலாதனும், நாராயணியும் இவர்களையும் இடுப்புக்குமேல்தான் தரிசிக்க முடிகிறது! ஒரே சமயத்தில், கர்ப்ப கிரகத்தில் எட்டு பேர் மட்டுமே ஏறி தரிசிக்க இயலும். அவர்கள் இறங்கிய பிறகு அடுத்த எட்டு பேர். நரசிம்மருக்கு அருகிலேயே லிங்க ரூபமாக சிவன் அருளாசி வழங்குகிறார். குகைக்குள் நுழைய தரிசன கட்டணமாக 11 ரூபாய் வசூலிக்கிறார்கள். அர்ச்சனை செய்து பிரசாதம் பெறவேண்டுமானால், 101 ரூபாய் செலுத்தவேண்டும்.
ஆண்கள் மேல் சட்டை அணியாமல் உள்ளே செல்லவேண்டும். தோள்களில் குழந்தைகளை சுமந்துகொண்டு அவர்களுக்கும் நரசிம்ம தரிசனம் செய்துவைக்கும் பக்தர்களையும் காணமுடிகிறது. அனைவருமே மாற்று உடை எடுத்து வருகிறார்கள். ஆடை மாற்றிக்கொள்ள, வெளியே, ஆண்/பெண்களுக்கு தனி அறை வசதிகள் உள்ளன. குகைக்குள் எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. காலை 7 முதல் மாலை 5 மணிவரை கோயில் திறந்திருக்கிறது. குழந்தை பாக்கியம் கோரி இந்த நரசிம்மரிடம் ஏராளமான இளம் ஜோடிகள் வேண்டிக்கொள்கிறார்கள். ஹைதராபாத்திலிருந்தும், பெங்களூரிலிருந்தும் பிதார் செல்லலாம். பிதார் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இந்த கோயில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு. பெங்களூர் பஸவந்தூர் ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிதார் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. ஆலயத் தொடர்புக்கு: +918861544278...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment