Monday, 1 July 2019

மெச்சி நின்றாரை அருளும் கச்சி வரதன்.!!

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற நூற்றி எட்டு திவ்யதேசங்களுள் குறிப்பிடத்தக்கது திருக்கச்சி வரதராசப் பெருமாள் கோயில். ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசங்களில் இது மூன்றாவதாகக் கருதப்படுகிறது. முதலிடத்தில் திருவரங்கம் திருக்கோயிலும், இரண்டாவது இடத்தில் திருமலை- திருப்பதியும் இடம்பெற்றுள்ளன.


இத்திருத்தலம் கச்சியில்  உள்ள வைணவத் தலங்களுள் எல்லாம்  சிறப்புடையதாகவும் பல்லவர்களால் ஆளப்பெற்ற  தொண்டை நாட்டின் வைணவத்  திருத்தலங்களுக்கு எல்லாம்  தலைமைத் தன்மை உடையதாகவும் திகழ்கிறது. தடம் சூழ்ந்து,  அழகாய்க்கச்சி ஒளி மாடங்கள் சூழ்ந்து, அழகிய கச்சி மணிமாடங்கள் சூழ்ந்து,  அழகாய்க்  கல்லுயர்ந்த நெடுமதில்சூழ் கச்சி என்று ஆழ்வார்களால் சிறப்பிக்கப்பெற்ற இத்தலம் விஷ்ணு காஞ்சி
யென்றும், அத்திகிரியென்றும், திருக்கச்சி என்றும் அழைக்கப்படுகின்றது.

“உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் 
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் 
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் 
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே”

என்று  நம்மாழ்வாரால்  திருவாய் மொழியில் பாடப்பெற்ற பாசுரத்தில் ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று சிறப்பிக்கப்படுபவர் இத்திருத்தலத்தில் அருட்பாலிக்கும் வரதன்தான் என்று வைணவச் சான்றோர்கள் குறிப்பிட்டுரைப்பர். அவர்கள்தம் கூற்றினை மெய்ப்பிப்பதுபோல் இத்தலத்து நம்மாழ்வார்  தன் இதயத்தில் கை குவித்தவாறு அருட்பாலிக்கின்றார். இத்திருக்காட்சி வேறு திவ்ய தேசங்களில் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி யாகும். மேலும் இத்திவ்யதேசம் திருமங்கையாழ்வாரால் நான்கு பாசுரங்களிலும் பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களிலும் பேயாழ்வாரால் ஒரு பாசுரத்திலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. 

பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதிப் பாசுரம் பெருமானின் அழகிய திருக்கோலத்தினை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது. இங்கு எழுந்தருளி ஆட்கொள்ளும் எம்பெருமான் பெரிய திருவடியாகிய கருடாழ்வாரைத் தன் வாகனமாகக் கொண்டு ஊர்ந்து வருபவர். ஆதிசேடனைத் தன் அணையாகக் கொண்டு அறிதுயில் கொள்பவர்.மூன்று வகை அக்னியாய்த் தோற்றம் கொண்டவர். வேதங்களாய் நிற்பவர். 

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது துயரம் தாளாது வாசுகி என்னும் பாம்பால் உமிழப்பட்ட  ஆலகால விடத்தினை உண்ட சிவனுக்கும் இறையானவர். இத்தகைய சிறப்புடையவரே இவ் அத்தியூரான். எங்கள் பிரானும் அவனேதான்  என்றெல்லாம்  பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதிப் பாசுரம் 
காட்சிப்படுத்தி நிற்கின்றது. இதனை,
“அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் - மூத்தீ
 மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்”
என்ற பாசுரத்தால் அறியலாம். 
“என்னெஞ்சம் மேயான் என் 
சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன் 
முன்னம்சேய் ஊழியான் 
ஊழிபெயர்த்தான் உலகேத்தும்
ஆழியான் அத்தியூரான் 
என்பதும் பூதத்தாழ்வாரின் திருவாக்காம். 

இத்திவ்யதேசத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே திருவேங்கடத்திலும் எழுந்தருளி அருள்செய்கிறார் எனக் குறிப்பார் பேயாழ்வார். திருக்கச்சி, திருவேங்கடம் என்பனவற்றை ஒன்றுசேர உரைக்கும் பொழுது திருக்கச்சிக்கு முதலிடம் தந்துரைக்கும் இப்பாசுரம். இதனால் திருக்கச்சி வரதராஜப்
பெருமானின் சிறப்பினை உய்த்துணர முடியும். 

அப்பாசுரம்,
சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் 
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் 
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே 
தாம் கடவார் தண் துழாயார்”
 - என்பதாம்

திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இத்திருத்தல இறைவனை மனத்துள் கொண்டு துதிப்பவர்களே இவ் உலகத்தில் துன்பங்களில் இருந்து உய்தி பெறுவர். பிறர் இத்தகைய சிறப்பினைப் பெறார் என்று குறிப்பிடுகிறது. இத்தகைய செய்தியினை,  உளுத்து அளம் பற்றிய சுவர்போலே பொடி உதிர்கின்ற மண்டையோட்டினைக் கையில் ஏந்தி பிறரின் மனையின்கண் பலி தேர்ந்து உண்டவர் சிவபெருமான். 

திரிபுரம் எரித்த சிவபெருமானின் கையில் ஒட்டியிருந்த மண்டையோடு நீங்கும்படி சிவனின் சாபத்தை நீக்கிய பெருமான்  திருக்கண்டியூர், திருமெய்யம், திகுக்கச்சி, திருப்பேர், திருக்கடல் மல்லை என்னும் தலங்களில் எழுந்தருளி அருள் செய்கின்றார். இத்தகைய திருப்பதிகளில் உறையும் பெருமானாகிய வரதனை மனதில் நினைத்தவர்களே உய்வர், பிறர் உய்யார் என்பதனால் அறியலாம். 

இதனை,“பிண்டி ஆர் மண்டை ஏந்தி  பிறர் மனை திரிதந்து உண்ணும் 
முண்டியான் சாபம் தீர்த்த  ஒருவன் ஊர் உலகம் ஏத்தும் 
கண்டியூர் அரங்கம் மெய்யம்  கச்சி பேர் மல்லை என்று 
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே?”
என்ற பாசுரம் விளக்கி நிற்கும்.
திருமங்கை ஆழ்வாரின் பிறிதோர் 
பாசுரம்,“வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் 
மல்லையாய்! மதிள் கச்சியூராய! பேராய் 
கொங்கத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் 
குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் 
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்! 
பனி வரையின் உச்சியாய்! பவள வண்ணா! 
எங்கு உற்றாய்? எம் பெருமான்! உன்னை நாடி 
ஏழையேன் இங்ஙனமே உழிதருகேனே”
 - என்பதாகும். 

இப்பாடலுக்கு உரை எழுதியதும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார், பரவாசுதேவனாகிய ஒரு சிறந்த விலை உயர்ந்த ரத்தினத்தை அவனது வாத்ஸல்யமென்ற கப்பலானது திருக்கடல் மல்லை என்கிற ஒரு தீவிலே கொண்டு வந்து தள்ளிற்றாம். கானத்தின்  கடல் மல்லை என்றபடி காட்டு நிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்தினத்தைப் பேணுவார் இல்லாமையாலும் ரத்தினம் விலை போவது மாநகரங்களில் ஆகையாலும் அந்தக் கப்பலானது அந்த ரத்தினத்தை அங்கிருந்து கொணர்ந்து காஞ்சிபுரத்திலே திருவெஃகாத்துறையில் தள்ளிற்றாம். 

என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது. ஆழ்வார் தாமும் இந்த அர்த்தத்தை திருவுள்ளம் பற்றியே பெரிய திருமொழியில் ‘கச்சி கிடந்தவனூர் கடன் மல்லைத் தலசயனம்’ என்றருளிச் செய்தது எனக் குறிப்பார். இதன் மூலம் வரதராசர் என்னும் ரத்தினத்தை ஏத்திப் போற்றிய  சிறப்பினைக் கச்சி மாநகரம் பெற்றது என்பது தெரிய வருகிறது. இவ்வாறு அன்பர்களால் போற்றப் பெற்ற பரந்தாமனே கச்சியில் எழுந்தருளி அருட் பாலிக்கும் வரதன் ஆவான் என்பதும் தெரியவருகிறது. இத்தகைய சிறப்புடைய பாசுரம்.

“கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய 
களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் 
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி 
அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் 
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி 
தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு 
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே 
மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே” 
- என்பதாகும்.

இத்தலம் பற்றிய செய்திகள் பத்ம புராணத்திலும் கூர்ம புராணத்திலும் காணப்படுகின்றன. ஒரு முறை மும்மூர்த்திகள் தம் தேவியர்களின் துணையில்லாமல் தனித்து வேள்வி  செய்து வெற்றிபெற  இயலாது என்ற  விவாதம் தேவலோகத்தில் ஏற்பட்டது. அதனைக் கேள்வியுற்ற பிரம்மன் தான் செய்து வென்று காட்டுவதாய்ச் சூளுரைத்து  உலக நன்மைக்காக ஒரு வேள்வியைத் தொடங்கினான். 

அதனை அறிந்த கலைமகள் அந்த வேள்வியைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டாள். பிரம்மனின் வேள்வியை அழிக்க  அக்னி வடிவத்தில் அரக்கர்களை அனுப்பினாள். பிரம்மனுக்காக அந்த அக்னியை தன் கரங்களில் தீபமாய் ஏந்திப் பெருமான் காத்து நின்றார். இதனால் வெகுண்டெழுந்த கலைமகள்  கொடூரமான யானைகளைப் படைத்து அனுப்பினாள். பெருமான் நரசிம்ம வடிவம் கொண்டு யானைகளை வென்றார். 

பின் அரக்கர்களை அனுப்ப, பெருமான் அவ்அரக்கர்களை கொன்றொழித்து நின்றார். அந்நிலையில் வேள்வியைக் களைத்தொழிக்க எட்டுக் கரங்களைக்  கொண்ட காளியை அனுப்பினாள். பெருமான்  எட்டுக் கரங்களைக் கொண்ட அட்டபுயக்கரத்தானாகத் தோன்றி காளியின் சீற்றத்தை அடக்கினார். இவ்வாறு தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியுறுவதனைக்  கண்ட கலைமகள்  தானே ஒரு  நதியாகி வேகவதி எனும் பெயரில் பிரளயம் போல் பொங்கி வந்தாள். பிரம்மன் அவ்வெள்ளப் பெருக்கினைத் தடுக்க வேண்டிப் பெருமானை நோக்கித் தவம் செய்ய, பெருமான் அந்த நதிக்கு எதிரே அணையாகப் படுத்துத் தடுத்தார். 

மேலும் அக்னி வடிவமாய் பிரம்மனுக்கு அருள்புரிந்தார். தன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுறுவதனைக் கண்ட கலைமகளும் தன் முயற்சியினை தொடராது நிறுத்தினாள். பிரம்மன் வேள்வியைத் தொடர்ந்தான். வேள்வியில் கிடைக்கும் அவிர்பாகம் தமக்குரியது என தேவர்கள் வேண்ட, பிரம்மனோ அவர்களிடம் வீடுபேறு  முதலான பலனைக் கோரி செய்யப்பெறும் வேள்விகளில்தான்  அவிர்பாகம் உங்களுக்குரியது. 

அதில்தான் உங்களுக்கும் பங்குண்டு. இது உலக நன்மைக்காகச் செய்யும் வேள்வி. எனவே உலகத்தின் அனைத்து  உயிர்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் திருமாலுக்கே அவிர்பாகம் உரியது. அவரே இதனை ஏற்றுக்கொள்வார் என்று கூறி வேள்வியைத் தொடர்ந்தார். 
வேள்வி முடியும் தருவாயில் பெருமான் தோன்றி அவிர்பாகத்தை ஏற்றுக் கொள்ள வேள்வி  நிறைவு பெற்றது. பின் வேள்வியில் பங்குபெற்ற தேவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேண்டிய வரங்களை எல்லாம் பெருமான் வழங்கினார். வரங்களை வழங்கிய  இப்பெருமான்  ‘வரதர்’ என்று 
அழைக்கப்பட்டார். 

இவ்வாறு பெருமான் எழுந்தருளி அருள்புரிந்த நாள் சித்திரை மாதத் திருவோண திருநாளே ஆகும்.தேவர்களுக்காய் எழுந்தருளிய பெருமான் இத்திவ்யதேசத்தில் எழுந்தருளி உலக மக்களுக்கும் அருள்புரிய வேண்டும் என அனைவரும் வேண்ட பெருமானும் அதற்கிசைந்தார். உடன் தேவலோகத்தில் உள்ள ஐராவதம்  என்ற யானையே மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றது. 

அதனால் இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவதம் எனப்பெறும் யானை வெள்ளைநிறம்  என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு அதுவே  வேதகிரி என மருவியது. க என்பது பிரம்மனையும் அஞ்சிரம் என்பது வழிபடல் என்னும் பொருளையும் தரும். இதுவே காஞ்சிபுரம் எனப்பெயர் பெற்று பின் கஞ்சிதபுரியாகி காலவளர்ச்சியில் காஞ்சிபுரம் ஆயிற்று. இத்தலத்தை கிரேதா யுகத்தில் பிரம்மனும் திரேதாயுகத்தில் கஜேந்திரனும் துவாபரயுகத்தில் பிருஹஸ்பதியும் கலியுகத்தில் அனந்தனும்  வழிபட்டு  உய்திபெற்றனர். 

சிருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்னும் இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் கொங்கண நாட்டில் இருந்த  கௌதம முனிவரிடம் கல்வி  பயின்றனர். இவ்விருவரும் திருமால் வழிபாட்டிற்குப்  பழம், பூ, தீர்த்தம் கொடுக்கும் தொண்டினை  மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் தீர்த்தத்தை  மூடாமல் வைக்க அதில் ஒரு பல்லி விழுந்துவிட்டது. அதனை அறியாது  அப்படியே கொணர்ந்து குருவிடம் கொடுக்க அதிலிருந்து பல்லி தாவியோடியது. அதனைக்கண்டு வெகுண்ட முனிவர் அவ்விருவரையும் பல்லிகளாகும்படிச் சபித்தார். 

தமது தவறுணர்ந்தவர்கள் மன்னிப்பு வேண்டினர். இந்திரன் கஜேந்திரன் என்னும்  யானையின் வடிவமாகி  வரதனை வழிபட வரும் நாளில்   சாபம் நீங்கும் என்று அருளினார். இருவரும் திருக்கச்சியின் பிராகாரத்தில் பல்லிகளாக வந்தமர்ந்தனர். பின்பு இந்திரன் இத்தலத்தில் நுழைந்த பொழுது  இவர்கள் சாபம் நீங்கித்  தங்கள் பழைய வடிவினைப் பெற்றனர். 

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் தற்போது இத்தலத்தின் பிராகாரத்தில் இருபத்து நான்காவது  படிக்கெதிரில் தங்கத்தினாலும், வெள்ளியினாலுமான இரண்டு பல்லிகள் செய்து அமைக்கப்பட்டுள்ளன.  நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பல்லிகளைத் தொட்டு வரதனைப் பணிந்தால்   நோயினின்று நீங்குகின்றனர். 

வாரணகிரி, அத்திகிரி என்ற ஒரு சிறிய மாடி போன்ற மலைகளால் ஆனது இத்திவ்யதேசம். வாரணகிரி என்கிற  முதல்  தளத்தில்  நரசிம்மப்பெருமான் சந்நதி உள்ளது. இரண்டாவது தளம் வரதராஜப் பெருமாள் சந்நதியான அத்திகிரியாகும். ஒரு முறை  தேவலோகத்தில்  முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கிடையே இல்லறம் உயர்ந்ததா? துறவறம் உயர்ந்ததா? என்கிற விவாதம்   ஏற்பட்டது. அவர்கள் தமக்குள் வாதிட்டு  இறுதியில் தமது குலகுருவான வியாழபகவானை அணுகினர்.

வியாழன் துறவறமே சிறந்ததென்று தீர்ப்பளித்தார். இல்லறமே சிறந்ததென்ற கருத்தினைக் கொண்டிருந்த இந்திரன் வியாழனின் தீர்ப்பைக் கேட்டு வெகுண்டு பசி, ஏழ்மை, இல்லறம் என்பதை என்னவென்று அறியாத  வியாழன்  ஓர் ஏழை அந்தணனாகப் பிறக்கக் கடவது என்று சபிக்க பல குழந்தைகட்குத் தந்தையாய் ஓர் ஏழை அந்தணனாகப் பிறந்து வாழ்ந்தார்.  

ஒரு நாள் குழந்தைகளோடு உணவு உட்கொள்ளும் வேளையில் நாய் ஒன்று உள்ளே புகுந்தது. அதைக்கண்ட வியாழன் அதனை அடித்து விரட்டுமாறு தெரிவிக்க, நாய், நான் போன பிறவியில் என்னைச் சரணடைந்தவளைக் காக்கத் தவறியதால் நாயாக அலைகின்றேன். இன்று நான்  உன்னைச் சரணடைய  நீயும் காக்க தவறினாய். நீயும் நாயாவாய் என்று சபித்தது. 

வியாழன்  பரிகாரம் தேடிப் பரத்வாஜரை அணுகினார். அவர் திருக்கச்சி  சென்று வரதனைச் சேவித்தால் சாபம் நீங்கும் என்றார்.குரு இல்லாமல் துயருற்ற  தேவர்கள் இந்திரனிடம் முறையிட இந்திரன் பிரம்மனிடம் சென்றார்.  பிரம்மன், தான் சித்ரா பௌர்ணமியன்று வரதனை வழிபடச் செல்லும்போது நீயும் வந்து வரதனை வழிபடு  என்று தெரிவிக்க மூவரும் ஒன்று சேர்ந்து திருக்கச்சி சென்றனர். முதிய அந்தணர் வடிவில் வந்த குரு ( வியாழன் ) வரதனை வழிபட வரதன் அருள்செய்தார். வியாழன் தன் சாபம் நீங்கப் பெற்றார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அத்திவரதர் நிகழ்த்திய அற்புதங்கள்.!!

தேடிச் சென்று காட்சி தரும் வரதன்.


‘‘ஹா வரதா! இந்த மனித வாழ்க்கை எவ்வளவு நிலையற்றதாக இருக்கிறது. சில வருடங்கள் முன் என் உடலில் இருந்த வலு இப்பொழுது இல்லை. ஆஹா… அந்த நாட்கள்தான் எவ்வளவுஇனிமையான நாட்கள். உனது கருட சேவை உற்சவம் நடைபெறும் நாளுக்கு மூன்று நாளுக்கு முன்பே இங்கிருந்து கிளம்பி விடுவேன். வழி நெடுகிலும் உனது திருநாமத்தை உரைத்த படியே செல்வேன். அதன் பயனாக காஞ்சி வரதனே நீ கருட வாகனம் ஏறி பவனி வரும் அற்புதக் காட்சியை காண்பேன். சென்ற வருடம் வரை இடைவிடாது உனது கருட சேவை அனைத்தையும் கண்ட என் கண்கள் இந்த வருடமும் அதைக் காண துடிக்கிறது. ஆனால், என் முதுமை என்னை கட்டிப் போட்டு விட்டது. இந்தத் தள்ளாடும் வயதில் நான் எப்படி சோழிங்கபுரம் என்னும் இத்தலத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் காஞ்சிபுரத்திற்கு வருவேன்.?மாதவா மதுசூதனா உன் கருட சேவையைக் காணாத இந்த உடலில் ஜீவன் இருந்தென்ன பயன்’’ என்று சோழிங்கபுரத்தில் இருக்கும் குளக்கரையில் இருந்த படியே காஞ்சி வரதனைப் பிரார்த்தித்தபடி இருந்தார் தொட்டாச்சாரியார் என்ற, மகான். 

பிறந்தது முதல் வரதனின் ஒரு கருட சேவையையும் அவர் பார்க்கத் தவறியதில்லை. இந்த வருடம் அவரது முதுமை அவரை சோழிங்கபுரத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லவிடவில்லை. அந்தக் கவலையில் தான் அவர் சோழிங்கபுரத்தில் இருக்கும் குளக்கரையில் அமர்ந்தபடியே புலம்பிக் கொண்டிருந்தார்.  அப்போது ‘‘அன்பனே தொட்டாச்சாரியா’’ என்ற மனதை மயக்கும் குரல் ஒன்று கேட்டது. சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தார் அந்த மகான். அவர் பார்த்ததை அவராலேயே நம்ப முடியவில்லை. அங்கு கோடி சூரிய பிரகாசத்தோடு வேத வடிவான கருட வாகனத்தில் காட்சி தந்தான் வரதன். வேதங்கள் தேடியும் காணாத மெய் பொருளைக் கண்ட களிப்பில் தொட்டாச்சாரியர் மெழுகாக உருகினார். எந்த கருட சேவையைக் காணமுடியாமல் வருந்தினாரோ அந்த கருடசேவையை இப்போது அவர் இருந்த இடத்திலிருந்தே கண்டு களிக்கிறார் அந்த மகான். ஆனந்த பரவசத்தில் அவரது வாயிலிருந்து வார்த்தை கூட வரவில்லை. கண்கள் அருவியைப் போல ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி இருந்தது. தேடி வந்து காட்சி தந்த பரம்பொருளை மீண்டும் மீண்டும் வணங்கி மகிழ்ந்தார் அந்த அடியவர். 

அவரை மேலும் களிப்பில் ஆழ்த்த எண்ணம் கொண்டான் மாதவன். ‘‘மகனே உன்னைப் போன்ற சிறந்த அடியவர்கள் என்னைக் காண்பதற்காகத்தானே இந்த உற்சவங்கள் விழா அனைத்தும். உண்மையில் அனைத்திலும் பூரணமாக இருக்கும் எனக்கு இந்த உற்சவங்களால் என்ன மகிழ்ச்சி வந்து விடப் போகிறது. உன்னைப் போன்ற சிறந்த அடியவர்கள் இப்படி ஆனந்தக் கடலில் மூழ்கித்திளைப்பதைக் காண்பதே எனக்கு பரம சந்தோஷம். உன்னைப் போன்ற அடியவர்கள் காணாமல் நடக்கும் கருட சேவை எனக்கு ஒருபோதும் இன்பம் தராது. ஆகவே, நான் இங்கு உன்னைக் காண வந்துவிட்டேன் என்ன சந்தோஷம்தானே?’’ என்ற மாதவனின் வார்த்தைகள் அந்த அடியவருக்கு தேனை விட தித்தித்தது. 

‘‘அழைத்து வாழ வைத்த தெய்வமே கருணாகரா’’ என்று உருகினார், அந்த அடியவர். ‘‘அன்பனே! உன் நினைவாக இனி என்னுடைய அனைத்து கருட சேவை உற்சவத்தின் போதும், குடையை முன்புறமாக தாழ்த்தி இரண்டொரு நிமிடங்கள் பிடிக்குமாறு கோவில் பட்டர்களுக்கு ஆணையிட்டிருக்கிறேன். அந்த இரண்டொரு நிமிடங்களில் உன்னைப் போன்ற அடியவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு தரிசனம் தந்துவிட்டு வரப் போகிறேன். என்ன சந்தோஷம் தானே?’’ என்றபடி வரதன் ஒரு மோகனப் புன்னகைப் பூத்தான். அப்பப்பா புன்னகையா? அது ஆளை மயக்கும் அஸ்திரமாக அல்லவா செயல்படுகிறது. மாதவனின் இந்த மொழியைக் கேட்டு தொட்டாச்சாரியார் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 

இன்றும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கருட சேவை நடக்கும்போது பட்டர்கள் பெருமானுக்கு முன்புறமாக குடையை தாழ்த்திப் பிடித்து அவனை ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மறைத்து விடுவார்கள். அப்போது வரதன் தொட்டாச்சாரியார் போன்ற அடியவர்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு வருவதாக ஐதீகம். இப்படி தேடிச் சென்று காட்சி தரும் வரதனின் கருணைக்கு இணை உண்டா?

அம்மா என்றழைத்த வரதன்! 

வரதனின் கோவில் இன்று போல் அன்றும் அருளை வாரி வழங்கியபடி இருந்தது. வரதனுக்கு இரவு அர்த்த ஜாம பூஜை நடந்து கொண்டிருந்தது. நிவேதனத்திற்காக சூடான பால் கொண்டு வரப்பட்டது. அதில் ஆவி பறந்துக் கொண்டிருந்தது. அடுப்பிலிருந்து இறங்கியவுடன் கொண்டு வந்து விட்டார்கள் போலும். அதில் ஏலக்காயும் குங்குமப் பூவும் மணத்தது. சுடச் சுட அந்தப் பாலை வரதனுக்கு நிவேதனம் செய்ய ஆரம்பித்தார் பட்டர். அப்போது நில்லுங்கள் என்று ஒரு குரல் அங்கு ஒலித்தது. அனைவரும் அந்த சப்தம் வந்த திசை நோக்கித் திரும்பினார்கள். அங்கு நாடாதூர் அம்மாள் என்ற அடியவர் நின்றுக் கொண்டிருந்தார். ராமானுஜர் தனது கொள்கைகளை பரப்ப எழுபத்திரண்டு சிஷ்யர்களை நியமித்திருந்தார். அந்த சீட பரம்பரையில் வந்தவர் தான் இந்த மகான். 

‘‘என்ன சுவாமி வரதருக்கு நிவேதனம் நடக்கும் போது இப்படி தடுக்கலாமா?” என்று சுற்றி நின்றவர்கள் கேட்டார்கள். நாடாதூர் அம்மாள் என்ற அந்த மகான் சற்றும் மனம் தளரவில்லை. ‘‘இவ்வளவு சூடாக வரதன் பால் அருந்தினால் அவனுக்கு வாய் வெந்து விடாது.? என்ன பூஜை செய்கிறீர்கள் நீங்களெல்லாம்?’’ என்று கொக்கரித்தார் அவர். ‘‘ஒரு சிலைக்கு எப்படி நாக்கு வேகும்’’ என்ற அலட்சியம் தான் இந்த அபசாரத்திற்குக் காரணம் என்பதை யாரும் சொல்லாமலே அந்த அடியவர் புரிந்து கொண்டார். 

‘‘ ஓ ’’ என்று அழ ஆரம்பித்து விட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவரிடத்தில் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்கள். ‘‘நீங்கள் என் வரதனை சிலை என்று நினைத்து, இதுபோல் எத்தனை அபசாரம் செய்தீர்களோ? அவனுக்கு எப்படி எல்லாம் வலித்ததோ? என்று அழுகிறேன்’’ என்றார் அந்தப் பெரியவர். அப்போது, ‘‘அன்பனே உனது பக்தியைக் கண்டு மெச்சினோம். எனது தாயில்லாத குறையை நீக்க வந்த அரும் பக்தன் நீ். இனி நான் உன்னை அம்மா என்றே அழைப்பேன்’’ என்று அசரீரியாக பேசினான், வரதன். அந்தக் குரலைக் கேட்டு அனைவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார்கள். தன்னலம் பாராத பக்தியால் தெய்வத்திற்கே தாயாகிவிட்ட நாடாதூர் அம்மாள் என்னும் ஆண் மகனை அனைவரும் விழுந்து வணங்கினார்கள். 

ஆண்டவனின் சந்நதியில் நமது புத்தி நமக்குத் தீங்கைத்தான் செய்கிறது. சிலைக்கு வலிக்குமா என்று அனைவரும் தங்களது புத்தியை பிரயோகித்தார்கள். ஆனால், நாடாதூர் அம்மாள் பக்தியால் தனது புத்தியை மறைத்து விட்டார். அதனால், பகவானுக்கே தாயாகி விட்டார். 

 பிரம்மா செய்யும் பூஜை.

இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தில் இரவு பிரம்மா வந்து வரதனை பூஜித்து விட்டுச் செல்கிறார். சித்ரா பௌர்ணமி அன்று இரவு பட்டர்கள் பலவிதமான நிவேதனங்கள் செய்து அதை வரதன் சந்நதியில் வைத்து விட்டுச் சென்று விடுவார்கள். மறுநாள் வந்து பார்க்கையில் வரதனுக்குச் சாற்றாத புஷ்பங்கள் அவன் மீது இருக்கும். முதல் நாள் வைத்து விட்டுச் சென்ற நிவேதனங்களில் ஒரு தெய்வீக மணம் கமழும். இதுவே பிரம்மன் வந்து பூஜித்து விட்டுச் சென்றதற்கு ஆதாரம். இந்த அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல... சித்ரா பௌர்ணமி முடிந்து பதினைந்து தினங்களுக்கு சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் தனது கதிர்களால் வரதனை இன்றும் பூஜிக்கிறான். (அதாவது சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் வரதன் மீது சூரியஒளி படுகிறது.) இப்படி அதிசயம் அநேகமுற்ற காஞ்சி அத்தி கிரிக்குச் சென்று பேரருளாளனை சேவிப்போம் வாருங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தவம் பெரியதா? தானம் பெரியதா?

இறைவனை நினைத்துக் கொண்டே இருந்தால் இறைவன் மகிழ்ச்சி அடைவான் என்பது உண்மைதான். ஆனால் அதை விட இறைவனுக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது பிறருக்கு செய்யும் தானமே. இதை உணர்த்தும் கதை ஒன்றைப் பார்ப்போம்.
முனிவர்கள் பார்க்க சாதுவாக இருக்கக்கூடியவர்கள். இவர்கள் அவ்வப்போது சினம் கொண்டு சாபம் அளித்துவிடுவார்கள். அறியாமல் செய்த தவ றாயினும் கொடுத்த சாபத்தைத் திரும்ப பெற முடியாது அல்லவா.அப்படிதான் முனிவர் ஒருவர் தவம் செய்யும் போது அவரிடம் வழிகேட்ட வயோதிகர் ஒருவரை, என் தவத்தைக் கலைத்துவிட்ட நீங்கள் பறவையாய் மாறிவிடுவீர்கள் என்று சபித்து விட்டார்.

பறவையாய் மாறிய வயோதிகனைத் தேடி அவனது வயோதிக மனைவி தள்ளாடியபடி வந்தாள். முனிவரிடம் வந்து தன் கணவரை பார்த்தீர்களா என்று கேட்டாள். இப்போதுதான் அந்த முதியவர் என் தவத்தைக் கலைத்தார் என்று பறவையாக மாற்றினேன் பின்னாடியே நீயும் வந்து என்னை கேள்வி கேட்கிறாயே நீயும் பறவையாக மாறிபோ என்றார்.
ஒரு நிமிடம் என்றாள் அந்தக் கிழவி. உன் தவத்தால் உனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டாள். இறைவனை என்னுள் காண்பேன் என்றார் முனி வர். மற்றவர்களைத் துன்புறுத்தி  உன் மனதில் அமைதியை நிரப்பி இறைவனை எப்படி காண்பாய். இதுபோல் எத்தனை பேருக்கு சாபம் கொடுத் தாயோ. இறைவனே உன்னை விரும்ப மாட்டார் . வேண்டுமானால் உனக்கு குரு இருந்தால் அவரிடம் போய் கேள் என்று சொல்லி பறவையாக மாறிவிட்டாள்.

முனிவருக்கு குழப்பமானது. குருவை சந்தித்து நடந்ததைக் கூறினார். ஆமாம் அவர் சொல்வது சரிதான்.  தவத்தின் வலிமையெல்லாம் நீ சாபம் கொடுக்க கொடுக்க கரைந்துவிடும். அவசரப்பட்டு யாரையும் சபிப்பது முனிவருக்கு அழகல்ல. நீ கொடுத்த சாபத்தால் பல ஆண்டுகள் நீ செய்த தவத்தின் பலனை இழந்துவிட்டாய் என்றார்.
முனிவருக்கு வருத்தமானது. அதை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். குரு யோசித்தார். தவத்தை விட தானம் பெரியது. இந்த ஊரில் தனஞ்சயன் என்னும் மனிதன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் சென்று உன் புண்ணியத்தைக் கொஞ்சம் கொடு என்று கேள். இழந்த உன் தவ வலிமை கிட்டும் என்றார். முனிவரும் ஊருக்குள் நுழைந்தார்.

வழியில் மீன் விற்கும் பெண் ஒருத்தி அறியாமல் இவரை தீண்டிவிட்டாள். அபத்தமான உன் செயலால் என்னை அழுக்காக்கி விட்டாயே நீயும் மீனாக கிட என்று சபித்தார். அக்கணமே அவளும் மீனாக மாறினாள்.இப்படியே வழி நெடுக இவருக்கு தொல்லை கொடுத்தவர்களையெல்லாம்  சபித்தப்படி தனஞ்செயன் வீட்டுக்கு சென்றார். இவரை உபசரித்து வணங்கினான். அப்பனே எனக்கு உன் புண்ணியத்திலிருந்து சிறிது தானம் கொடுக்கிறாயா என்று கேட்டார். அதனாலென்ன  தாரளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்தான்.
மகிழ்ச்சியாக அதைப் பெற்று மீண்டும் குருவிடம் சென்றார். எனக்கு புண்ணியம் கிடைத்துவிட்டது. இதனால் அவனது புண்ணியக்கணக்கு குறைந்துவிடுமா என்று கேட்டார். இல்லை மாறாக அவனது கணக்கு பன்மடங்கு அதிகரிக்கும். அவன் இறைவனைத் தேடி சென்று வணங்குவ தில்லை. மாறாக அதர்ம வழியில் செல்ல மாட்டான். யார் வந்து கேட்டாலும் கையிலிருப்பதைக் கொடுத்து தானம் செய்து மகிழ்வான் என்றார்.

முனிவருக்கு புரிந்தது. எனக்கு கொடுத்த புண்ணியத்தால் நான் சாபம் கொடுத்தவர்கள் விமோசனம் பெறட்டும். இனி யாரையும் சபிக்காமல் என் தவத்தால் நான் நற்பயனை மேற்கொள்கிறேன் என்று தவம் புரிந்து நற்கதியை அடைந்தார்.
தானம் புண்ணியமிக்கது. அதனால் இயன்றவரை இல்லாதவர்களுக்கு செய்து இறைவனை மகிழ்விப்போம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தகுதியான வேலை கிடைக்க விரதம்.!!

அம்மன்


சிறந்த முறையில் கல்வி கற்றிருந்தாலும் தகுதியான வேலை கிடைக்காமல் வேதனைப்படுபவர்களுக்கான விரத பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க பல ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் தற்போது உருவாகி வருகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு சிறப்பான கல்வி அமையவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும் நமது முன்னோர்களின் புண்ணிய பலனும் தெய்வ அருட்கடாட்சம் அவசியமாகிறது.

அம்மன் அல்லது அம்பாள் விரத வழிபாடு நமது கோரிக்கைகள் விருப்பங்கள், அனைத்தையும் நிறைவேற்ற வல்லதாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தினத்தில் விரதம் இருந்து அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபாடு செய்வது நல்லது. மேலும் அம்மனுக்கு ஏதேனும் ஆபரணம் செய்து அணிவிப்பதும் அற்புதமான பலன்களை கொடுக்கும். 

மேற்கண்ட முறையில் அம்மனுக்கு புடவை மற்றும் ஆபரணம் சாற்றி வழிபடுபவர்களின் வம்சத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று, சிறப்பான வகையில் தேர்ச்சி பெறுவார்கள். மேலும் நீண்ட நெடுங்காலமாக தகுதியான வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு கூடிய விரைவில் நல்லவேளை அம்பாளின் அனுக்கிரகத்தால் கிடைக்கப் பெறுவார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தங்க பல்லி, வெள்ளி பல்லியின் சிறப்பு.!!

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தங்க பல்லி


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது. 

அதாவது, கொங்கண தேசத்தில் சிருங்கி பேரர் என்பவருக்கு ஹேமன் மற்றும் சுக்லன் என்று 2 மகன்கள் இருந்தனர். இருவரும் கவுதம முனிவரிடம் வேதம் கற்று வந்தனர். இவர்களின் அன்றாட வேலை என்னவென்றால், முனிவர் பூஜைக்கு தேவையான நீரும், யாகம் செய்ய குச்சிகளும் கொண்டு வந்து தருவது ஆகும்.

ஒருமுறை அவர்கள் இருவரும் கொண்டு வந்த நீரில் 2 பல்லிகள் இருந்ததை முனிவர் கண்டார். கோபமடைந்த முனிவர் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சாபமிட்டார். சீடர்களும் தங்களது தவறினை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். முனிவரும் மனம் இறங்கி, ‘நீங்கள் இருவரும் அத்திகிரி மலையில் உள்ள வரதராஜரை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களை காப்பாற்றுவார். 

சாப விமோசனமும் கொடுப்பார்’ என்று கூறினார். சீடர்களும் அவ்வாறே செய்து சாப விமோசனம் பெற்றனர். அவர்கள் நினைவாக இந்த கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட 2 பல்லிகள் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சரஸ்வதி காயத்ரி மந்திரம்.!!

சரஸ்வதி


பல சிறப்புக்கள் மிக்க சரஸ்வதி தேவியை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் கூறுவதன் பயனாக அவரின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே 
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி 
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

பொது பொருள்: மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡