Saturday, 1 September 2018

தமிழில் வேங்கடேச சுப்ரபாதம்

1. வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

2. எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

3. போர்புரிந்து மதுகைடபர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் (2)

4. திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருளி புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் 

5. தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு நின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்

6. ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய் 

7. நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

8. நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்.

9. எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து(உ)ம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்

10. வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய் 

11. தனதனங்கள் நிமிர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழ்ந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்

12. பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய் 

13. வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

14. மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோலேறி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய் 

15. திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர்காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்

16. அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன், அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும் நின்
திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்

17. திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பு(உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்

18. சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய் 

19. நின் முக்தி விழையாமல் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய் 

20. எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்திபெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்

21. மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்

22. பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்

23. திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய் 

25. ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்

26. அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்

27. நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய் 

28. திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியனே வேங்கடவா எழுந்தருள்வாய் (2)

29. விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய் (2)...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தெய்வத்துக்கு பாகற்காய் மாலை!

சனி என்ற சொல்லைக் கேட்டாலே, பாகற்காயை பச்சையாக சாப்பிட்ட மாதிரி முகம் சுளிப்பர், பலர். உண்மையில், அவர் நடுநிலையானவர்; தவறு செய்வோருக்கும், சோம்பேறிகளுக்கும் மட்டும் தண்டனை கொடுப்பவர். உலகில், தவறு செய்யாத மனிதர்களே இல்லை. அதனால், அவரவர் பாவச் செயல்களுக்கு ஏற்ப, துன்பத்தை அனுபவிப்பர். அதேநேரம், தவறை உணர்ந்து, திருந்தி வாழ நினைப்போர், வேலுார் மாவட்டம், வன்னிவேடு அகஸ்தீஸ்வரர் கோவிலில் அருளும் பாகற்காய் சனீஸ்வரரை தரிசித்து வரலாம்.

ஒரு சமயம், வன்னி மரங்கள் நிறைந்த ஓர் இடத்தில் தங்கிய அகத்தியர், மணலால் லிங்கம் அமைத்து, சிவ பூஜை செய்தார். இதனால், இத்தலத்து சிவனுக்கு, அகஸ்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், இவ்விடத்தில் கோவில் கட்டப்பட்டது. குள்ளமான அகத்தியர் ஸ்தாபித்த இந்த சிவலிங்கம், சிறிய அளவில் இருக்கிறது. லிங்கத்தின் பாணத்தில், கைரேகைகள் தெரிகின்றன. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டோர், திங்கட் கிழமைகளில், சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்வர். சிவன் சன்னிதி எதிரில், அகத்தியர் சிலை உள்ளது. சதயம் நட்சத்திர நாட்களிலும், ஆவணி வளர்பிறை பஞ்சமியன்றும், இவருக்கு ரிஷி பூஜை நடத்தப்படுகிறது. ஆவுடையார் (பீடம்) மீது நின்று, தவக்கோலத்தில் காட்சி தருகிறாள், அம்பாள் புவனேஸ்வரி. பவுர்ணமியன்று, சப்த ரிஷிகளும் இவளை பூஜிப்பதாக ஐதீகம். அன்றிரவில், அம்பாள் சன்னிதி முன், லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர்.

பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் (எட்டு திசை காவலர்கள்) தங்களுக்குரிய திசையில், தனித்தனி சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். செல்வ விருத்திக்காக, வெள்ளிக்கிழமைகளில், வடதிசை காவலரான குபேரருக்கு, நெய் தீபம் ஏற்றியும், திருமணத் தடை நீங்க, தென் கிழக்கு திசைக்குரிய அக்னி பகவானுக்கு, சிவப்பு வஸ்திரம் சாத்தி, தக்காளி சாதம் படைத்தும், விபத்தைத் தவிர்க்க, தென் திசை காவலரான எமனுக்கு, பாலாபிஷேகம் செய்தும் வேண்டிக் கொள்கின்றனர். ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர் மற்றும் சனீஸ்வரர் அடுத்தடுத்த சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். வீடு மற்றும் கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர், அது தடங்கலின்றி நடக்க, சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு, 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து, எள் தீபமேற்றி வழிபடுவது விசேஷம். தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், கசப்பான அனுபவங்களை சனி பகவானிடமே அர்ப்பணித்து விடுவதாகவும், இனி, அவ்வாறு நடக்கக்கூடாது என்றும் இந்த வேண்டுதலைச் செய்கின்றனர். செவ்வாய்தோஷ நிவர்த்திக்கு, இங்குள்ள முருகனுக்கு, பீட்ரூட் சாதம் படைக்கின்றனர். வேலுாரிலிருந்து, 35 கி.மீ., துாரத்திலுள்ள வாலாஜாபேட்டை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில், 5 கி.மீ., கடந்தால், கோவிலை அடையலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

வள்ளல் முருகன் கோவில்

மணக்கால் கிராமத்தில் ஊர்நடுவே அமைந்துள்ளது, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் முகப்பில் இடது புறம் பிள்ளையார் அருட்பாலிக்க, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் சுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் வரமருளுகிறார். மகா மண்டபத்தின் வலதுபுறம் உற்சவத் திருமேனி உள்ளது. தினசரி மூன்று கால பூஜை நடக்கும். இந்த ஆலயம் காலை 8½ முதல் 11½ மணி வரையிலும், மாலை 5 முதல் 6½ மணி வரையிலும் திறந்திருக்கும்.

சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் அன்று இந்த ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். அன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகன் திருவடிகளில் தங்களது பிராத்தனைகளை நிறைவு செய்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 

இந்த திருவிழாவைக் காண ஆலயத்தில் கூடிநின்று, முருகனை ஆராதிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும். ஊரின் மத்தியிள் உள்ளது வரதராஜ பெருமான் ஆலயம். ஆவணி மாதம் நடைபெறும் அந்த ஆலய திருவிழாவின்போது பெருமாள், இந்த முருகன் ஆலயத்துக்கு வந்து ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் தங்கி சேவை சாதிப்பது உண்டு. பின்னர்புறப்படும் பெருமாளும், தாயாரும் இந்த ஆலயத்தில் நடைபெறும் உறியடி உற்சவத்தில் கலந்து கொண்டு, தங்கள் ஆலயம் திரும்புவது வழக்கம்.

இந்த ஆலயத்தின் வளாகத்திலேயே யஜுர்வேத பாடசாலை அமைந்திருப்பது ஆலயத்திற்கு பெருமை சேர்க்கிறது. இந்த பாடசாலையில் பயின்ற பலர்நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் தலைசிறந்த வேதவிற்பன்னார்களாகத் திகழ்வது பெருமைக்குரிய தகவலாகும். தன்னை ஆராதிக்கும் அனைவருக்கும் இந்த மணக்கால் முருகன் கணக்கில்லாமல் வாரி வழங்கும் வள்ளல் என்று பக்தர்கள் அனுபவபூர்வமாக, மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கிறார்கள். திருச்சி மாவட்டம், லால்குடிக்கு கிழக்கே ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மணக்கால்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

சித்தர்கள் நடமாடும் கந்தர்மலை கோயில்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து அகரம் செல்லும் வழியில் இருக்கிறது சுண்டகாப்பட்டி கந்தர்மலை வேல்முருகன் கோயில். 750 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் 206 படிகளை கடந்து சென்று, இங்கு அருள்பாலிக்கும் வேல்முருகனை தரிசிக்கின்றனர் பக்தர்கள். கிருபானந்த வாரியாரும், காஞ்சி ஜெயேந்திரரும் இங்கு வந்து முருகனை வழிபட்டு பிரசங்கம் செய்தார்கள் என்பது சிறப்பு. ‘‘கந்தர்மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் சூரியன், சந்திரன் ஒளிபடாத குளம் உள்ளது. வள்ளிக்கு விக்கல் எடுத்தபோது சூரியன், சந்திரன் ஒளிபடாத இடத்தில் இருக்கும்  தண்ணீரை அருந்தினால் விக்கல் நின்று விடும் என்று முருகன் கூறினார். இதைக்கேட்ட வள்ளியின் தோழிகள் கானகத்தில் இருந்த இந்த குளத்திற்கு வந்து தண்ணீர் எடுத்துச்சென்று வள்ளிக்கு கொடுத் துள்ளனர். 

அதன்பிறகே அவருக்கு விக்கல் நின்றுள்ளது. காலப்போக்கில் குன்றுகள் நிறைந்த இந்த பகுதியை சீரமைத்து முருகனுக்கு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர் பக்தர்கள்’’  என்பது தலவரலாறு. இந்த குகைக்குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும் என்பதும், கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் தூரஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் ‘கந்தர்மலை வேல்முருகன்’ என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.  

வள்ளியின் தாகம் தீர்த்த மலைக்குகையில் அற்புத சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்தார்கள். வயது முதிர்ந்த அரிய வகை பாம்புகளும் இங்கு அதிகமாக உள்ளது. சித்தர்களும், பாம்புகளும் தற்போதும் அரூபமாக இந்த மலையில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த கணேஷ்பைரவர் சுவாமிகள், இந்த மலைக்கு வந்து பூஜைகள் செய்து, தொடர்ச்சியாக பல நாட்கள் தவமிருந்தார்.  தர்மபுரி ஆத்மஜோ சுவாமிகள் இந்த குகையில் 27 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இளநீர் மட்டும் குடித்து தவம் இருந்துள்ளார் என்று வியக்க வைக்கும் தகவல்களை கூறுகின்றனர் பக்தர்கள்.

பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் என்று அனைத்து விழாக்களும் இங்கு களை கட்டுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது நடக்கும் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண விழா மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை வேல்முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூர், பாண்டிச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மங்கள வாழ்வருளும் மங்களாம்பிகை

கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற சிவாலயம். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தலத்தில் மகாமகம் சிறப்பாக நடைபெறுகிறது. பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுத கலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றது.கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோயிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர். பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் உருவானது. 

அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருட்களான மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல் முதலிய பொருட்கள் காற்றினால் சிதறடிக்கப்பட்டு, தாம் விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாகவும் விளங்குகின்றன. இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாக அருட்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறது. 

இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கோயிலின் பிராகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. நவராத்திரி மண்டபத்தில் ஒரு சிங்க வாகனம் தனது தலையில் நீண்ட படுக்கை கற்களை தாங்கியபடி அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். 

கோயிலின் முன்பு பொற்றாமரைக்குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக்குளத்திலும் நீராடுவர். நவகன்னியரான நதிகள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். வெளிப்பிராகாரத்தில் கும்பமுனிசித்தர் அருட்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும். இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேஸ்வரி, மந்திரபீட நலத்தாள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறாள். 

தம்மை அன்போடு வணங்குவார்க்கு திவ்ய மங்களத்தை அருளும் மாட்சிமையால் மங்களநாயகி என்றும், 51 சக்திபீடங்களுள் ஒன்றான விஷ்ணுசக்தி பீடம் எனும் மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேஸ்வரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தாள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்ற பெயரிலும் இந்த அம்பிகை வணங்கப்படுகிறாள். திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். 

இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருட்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. 

அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருட்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்திப் பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனிதர்கள் தங்களது பாபங்களைப் புண்ணிய நதிகளில் தலைமூழ்கி விட்டுச் சென்றதால் பாபத்தின் சுமை தாங்க முடியவில்லை என கங்கா, பிரம்மபுத்ரா, யமுனா, குபேர, கோதாவரி, நர்மதை, காவேரி, சரயூ, கன்யா ஆகிய நதிகள் மங்களாம்பிகையிடம் முறையிட்டன.

அவை மகாமகக் குளத்தில் கலந்தால், பாவங்கள் தொலையும் என மங்களாம்பிகை திருவாய் மலர்ந்தருளினாள். காசியில் புரியும் பாவம், ராமேஸ்வரத்திலும், ராமேஸ்வரத்தில் புரியும் பாவம் காசி கங்கையிலும் தீரும். கும்பகோணத்தில் புரியும் பாவம் மகாமக குளத்தில் மூழ்கினாலே தீரும் என்கிறது புராணம். சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் மங்களாம்பிகை அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோயிலிலிருந்து ரோஜா, அரளி, மல்லிகை, மரிக்கொழுந்து, கதிர்பச்சை, செண்பகப்பூ, தாழம்பூ, செவ்வந்தி, விருட்சிப்பூ போன்ற மலர்களை கூடைகளில் எடுத்துக்கொண்டு யானை முன்னே செல்ல ஊர்வலமாக செல்வர். கோயில் பிராகாரத்தை வலம் வந்து, கொடிமரம் அருகே சென்று பூக்களை வைப்பர்.அதன் பிறகு மங்களாம்பிகைக்கு சிறப்பு புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து ஆராதனையும், தீபாராதனையும் நடைபெறும். மந்த்ரபீடேஸ்வரியாய் மங்களங்கள் அருளும் மங்களாம்பிகையை  சரணடைவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தீயசக்திகளை நெருங்காது காக்கும் பாலியம்மன்

ஒருமுறை ஜமதக்னி முனிவரின் பத்தினியான ரேணுகாதேவி, மாரியம்மன் எனும் பெயருடன் லோக சஞ்சாரம் செய்தபோது, வில்வ மரங்கள் நிறைந்திருந்த இந்த இடத்தின் இனிய சூழலால் குழந்தையைப் போல குதூகலமடைந்து சிறு பெண்ணாக மாறி ஓடியாடினாள். அப்பகுதியைச் சேர்ந்த வில்லியர்கள் எனும் வேடுவர்கள், “நீ யாரம்மா? உன் பெயர் என்ன?” என கேட்டனர். “என்னை அருகிலிருக்கும் தீர்த்தத்தினால் நீராட்டி, என்ன பெயரிட்டாலும் ஏற்றுக் கொள்வேன்” என்றாள் தேவி. அதன்படியே, தேவி சிறுமியாகக் காட்சியளித்ததால் பாலா என பெயரிட்டனர். தொடர்ந்து அன்னையின் உத்தரவுப்படி கேட்டை நட்சத்திரத்தன்று அன்னையின் திருவுருவை மண்ணினால் செய்து வழிபட ஆரம்பித்தனர். பாலா எனும் பெயர் மறுவி பாலியம்மன் என ஆயிற்று. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் வேம்பும் அரசும் இணைந்த பிரமாண்டமான தல விருட்சத்தின் கீழ் நாகர்களும், லட்சுமி கணபதியும் தரிசனமளிக்கிறார்கள். 

அரச மரத்தில் பாலியம்மனின் சுயம்பு உருவம் தோன்றியுள்ளது, அற்புதம். விநாயகரை தரிசித்து மண்டபத்தினுள் நுழைந்தால், அம்பிகையின் கருவறை. எதிரே சூலம், பலிபீடம், சிம்ம வாகனம். கருவறையின் வலதுபுறம் சுதையினாலான அம்மனின் விக்ரகம் அருள்கிறது. கருவறையில் எலுமிச்சை, வேப்பிலை, அரளிப்பூ மாலைகளோடு, நெய்தீபமும், சாம்பிராணியும் மணக்க, அன்னை அருளாட்சி புரிகிறாள். அம்மனின் திருவுருவின் இருபுறங்களிலும் பாலியம்மன் மற்றும் இளங்காளியம்மனின் உற்சவ விக்ரகங்கள் உள்ளன. கோஷ்டங்களில் மகாலட்சுமி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர். விஷ்ணு துர்க்கைக்கு ராகுகால பூஜை விசேஷமாக நடக்கிறது. தனி சந்நதியில், ஐயப்பன். அவர் கருவறையின் இரு புறங்களிலும் பாலகணபதி, பாலமுருகன். எதிரே நவகிரக நாயகர்கள்.

ஆடி மாதம் நான்காம் அல்லது ஐந்தாம் வெள்ளிக்கிழமை, ஆலயத்தில் திருவிழா களைகட்டுகிறது. விழாவுக்கு முந்தைய வெள்ளியன்று காப்புக் கட்டி தவக் கோலத்தில் அருள்கிறாள் பாலியம்மன். அடுத்த வெள்ளியன்று விழா தொடங்குகிறது. பிரமாண்டமான அக்னி குண்டத்தில் தீமிதிப்பது குறிப்பிடத் தகுந்த அம்சம். தீமிதி விழா முடிந்ததும் கட்டாயம் மழை பொழிவது இத்தலத்தில் நடந்து வரும் அதிசயம். அந்த தீமிதி விழாவில் எஞ்சிய கரித்துண்டுகளை வீட்டு வாசலில் கட்டி வைத்தால் தீயசக்திகள் நெருங்காது என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது! ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அன்னையை பிரார்த்தனை செய்து அரசமரத்தில் தொட்டில் கட்டிச் சென்றால் பிள்ளை பாக்கியம் தட்டாமல் கிட்டுகிறது. மாங்கல்ய வரமும், மாங்கல்ய பலமும் பாலியம்மனை வழிபட கிட்டுகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். சென்னை வில்லிவாக்கத்தில் அருள்பொழிகிறாள் இந்த அன்னை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡