Sunday, 1 July 2018

செல்லாண்டியம்மன் திருக்கோவில்

நாமக்கல் மாவட்டத்தில் பழம்பெருமை பெற்ற ராசிபுரம் நகரத்தில் இருக்கிறது  செல்லாண்டியம்மன் கோயில். இந்த கோயிலில் ஒரு புறத்தில் காக்கும் செல்லாண்டியாக விளங்கும் அம்மன், மறுபுறத்தில் மங்கள வாழ்வருளும் நித்யசுமங்கலி மாரியம்மனாக அருள் பாலிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. இதில் ஊரின் நுழைவு வாயிலில் இருக்கும் செல்லாண்டியம்மன் தான், ஒட்டுமொத்த மக்களுக்கும் காவல் தெய்வம். கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னர்களால் கட்டப்பட்டு, வழிபட்ட இந்த கோயிலை சுற்றிலும் கோட்டை போன்ற நீண்ட மதில்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அழகு மிளிரும் சிற்பங்களுடன் காட்சியளிக்கும் கோயில், எப்போதும் புதுப்பொலிவுடன் இருப்பது வியப்பு. செல்லாண்டியம்மன் வழிபாடு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளது.

செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அம்மனை வழிபடுகின்றனர். இதில் கொங்கு மண்டலமான நாமக்கல், கரூர் போன்ற இடங்களில் செல்லாண்டியம்மனுக்கு அதிகளவில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் காவல் தெய்வமாக  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் செல்லாண்டியம்மன் ஒப்பற்ற தெய்வமாக போற்றப்படுகிறது. ஒரு காலத்தில் காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட கிராமத்து மக்கள், ஊரைவிட்டு வெளியேற ஆரம்பித்தனர். அப்போது திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. காப்பு கட்டி, கம்பம் நட்ட பிறகு, ஊரை விட்டு வெளியேறக் கூடாது எனக் கூறி பலர் அங்கேயே இருந்தனர். இதையடுத்து திருவிழா முடிந்து கம்பத்தை அருகில் உள்ள குளத்தில் போட்டு விட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே, குளத்தில் வீசப்பட்ட கம்பம், கோயில் வளாகத்தில் இருந்தது.

இதனால் மெய்சிலிர்த்த ஊர்மக்கள், செய்வதறியாமல் திகைத்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள் அம்மன் அருள்வந்து சாமியாடினர். அவர்கள், இந்த கம்பம் எனது அம்சம். அதை நிரந்தரமாக கோயிலுக்குள் வைத்து நீங்கள் வழிபட வேண்டும் என்று கூறினர். இதையடுத்து ஊர்மக்கள், அந்த கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனாக நினைத்து அங்கேயே வைத்து வழிபட ஆரம்பித்தனர். இதற்கடுத்த சிலநாட்களில் ஊர்மக்களை பிடித்திருந்த நோய், நொடிகள் அகன்றது. மாதம் மும்மாரி பொழிந்து வளம் கொழிக்கும் பகுதியாக ராசிபுரம் மாறியது. இதர கோயில்களில் திருவிழா நாட்களில் மட்டுமே கம்பம் நடப்படும். ஆனால் அம்மனின் அம்சமான கம்பம், இந்த கோயிலில் நிரந்தரமாக இருப்பதும், அதை வழிபட்ட பின்னர், அம்மனை பக்தர்கள் வழிபடுவதும் சிறப்பு.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் பழைய கம்பத்தை கிணற்றில் போட்டுவிட்டு, புதிய கம்பத்தை கோயில் நிர்வாகிகள் நடுகின்றனர். அது ஆண்டு முழுவதும் அப்படியே இருக்கிறது. இங்கு ஐப்பசி மாதத்தில் 15 நாட்கள் நடக்கும் திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போதும் சக்தி அழைத்து, அக்னிகுண்டம் இறங்கி, உருளுதண்டம் போட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் அனைத்து விசேஷநாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கொடிய நோய்களின் பிடியில் இருந்து நம்மை காப்பவள் செல்லாண்டியம்மன். நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி, மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர், இங்கு வந்து அம்மனை வழிபட்டு நிவர்த்தியடைகின்றனர் என்கின்றனர் ஆண்டாண்டு காலமாய் செல்லாண்டியம்மனை வழிபடும் பக்தர்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஸ்ரீசங்கரலிங்கம் திருக்கோவில்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பாடல்பெற்ற ஆன்மீக தலங்கள், ஜைனமதக்கோயில், தர்கா, பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் அதிகம் உள்ளது. அந்த வகையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு சித்தர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் சென்று வழிபடும் இடமாக உள்ளது ஸ்ரீசங்கரலிங்கம் சித்தர் ஆசிரமம்.

சிற்றுண்டி பிரசாதம்:

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள இந்த சித்தர் ஆலயம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. தினந்தோறும் சித்தர் ஆசிரமத்தில் டீ, காபி, பன் உள்ளிட்டவைகளை வைத்து வழிபடும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கு வழங்கப்படும் கஞ்சி, பொங்கல் என எந்த பிரசாதம் கொடுத்தாலும் அதனை தேவாமிர்தமாக வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இந்த சித்தர் ஆசிரமத்தில் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளில் சிக்கி உடல்நிலை பாதிக்கபட்டவர்கள் என ஏராளமானவர்கள் ஆசிரமத்திலேயே தங்கி தினந்தோறும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு ஓம் சங்கரலிங்காய நமஹ என வணங்கி வருகின்றனர்.

குருபூஜை:

ஒவ்வொரு ஆண்டு சித்தர் ஜீவசமாதி அடைந்த நாளில் குருபூஜை பெருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகாலமாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவின் போது விளக்கு பூஜைகள், சிறப்பு மகா யாகம் உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். இதில் கலந்துகொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் திருமாங்கல்ய பொருட்கள் பிரசாதமாக வழங்கப்படும். கடந்த 20 ஆண்டுகாலமாக அணையாத விளக்காக சித்தர் ஆசிரமத்தை தேடி வரும் அனைவருக்கும் உணவு (அன்னதானம்) வழங்கப்பட்டு வருகிறது.

அமாவாசை பவுர்ணமி பூஜை: 

உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், குடும்ப பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற தினங்களில் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்று வரும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு விடிய, விடிய சிவபுராண பாடல்களை பாடி மனம் உருகி வழிபட்டு வருகின்றனர். இந்த சித்தர் ஆசிரமத்திற்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வருடந்தோறும் நடைபெறும் குருபூஜை விழா மற்றும் அவர் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் இந்த சித்தர் ஆசிரமத்திற்கு வந்து வழிபட்டு அன்னதானம் வழங்கிவிட்டு செல்வார். இதே போல் இப்போது உள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இந்த ஆசிரமத்திற்கு வந்து செல்வது வழக்கம். அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு வந்து எடுக்கும் முடிவு தங்களுக்கு வெற்றியை தரும் என்று நம்புகிறார்கள். அந்த வகையில் இந்த ஆசிரமம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறைகள் நீங்கும்:

ஓம் சங்கரலிங்காய நமஹ... என்று கூறி மனமுருக வழிபட்டால் பக்தர்களின் குறைகள் அனைத்தும் நீங்குவதாக நம்புகிறார்கள். திருமண தடை, குழந்தையின்மை, தொழில்முடக்கம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும், சங்கடங்களையும் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இதனால் தினந்தோறும் ஏராளமானவர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அரிசி மூட்டைகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி வந்து தங்களது காணிக்கையாக செலுத்திவிட்டு செல்கின்றனர்.

செல்வது எப்படி?

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் ஸ்ரீசங்கரலிங்கம் சித்தர் ஆலயம் உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஸ்ரீ சாய்நாதரை நினைத்து விரதம் இருந்தால் நற்பலன் கிட்டும்

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயிவிரத கதையைப் படிக்கவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும். இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும்.

முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம். 9வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம். 9வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஆயுள் கூட்டி ஆரோக்யமருளும் காலகாலேஸ்வரர்!

மனிதப்பிறவி என்பது இறைவனின் படைப்புகளிலேயே மிக உயர்ந்த படைப்பென்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நாகரீகம், அறிவு, பணம், புகழ் என்ற மாயைகள் நம்மைச்சுற்றி வளரவளர நமது பிறவிக்கான உயர் தத்துவத்தை மறந்து கீழான விலங்கு நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பது நிதர்சனம். உடலில் வலு இருக்கும் போதும், பணம், பதவி இருக்கும்போதும் நமக்குள் உண்டாகும் தலைமைப்பண்பு நம்மை இறை சிந்தனையினை தவிர்த்து நான்,  தனது என்ற ஆணவப்பண்பை  மேலோங்கச்செய்து நம்மை இறைநிலையிலிருந்து விலகச்செய்கிறது.  இதன் விளைவாக நமக்குள் இருக்கும் அன்பு,   இரக்கம், கருணை என்ற மனிதம் சார்ந்த நல்ல குணங்கள் மறைந்து சுயநலம் மிகுந்து சிலநேரங்களில் நமது வாழ்கைப் பாதை தடுமாறுவதை காண்கிறோம். ஆனால், இதற்கு நேரெதிராக வயது ஏறஏற அனுபவம் என்ற மெய் நம்மை நல்வழிக்கு இட்டுச் செல்கிறது.  அந்தக் கட்டத்தில் நமது உடல் தளர்ந்து ரத்தத்தின் வேகமும் வெப்பமும் குறைந்து காணப்படும் பொழுது நாம் காணும் அனைத்தின்மீதும் அன்பு, கருணை, பாசம், பரிவு  மிகுதியாகிறது. 

அதுவரை நமக்குள் நிகழ்ந்த இரை தேடல் குறைந்து இறை தேடலில் மனம் லயிக்கின்றது. அந்தத் தேடலில் நமக்குள்ளான கோரிக்கை என்னவென்றால் உடல் ஆரோக்கியம், மன அமைதி, நீண்ட ஆயுள். காரணம் நமது உடல் தளர்வடையும்போது அதுவரை பயம் அறியாத  காளையாக  வலம் வந்த நமக்கு மரண பயம் என்பது தலைதூக்கும். அந்த பயம் நமது உடலில் மேலும் தளர்வை உண்டாக்கி  மன அமைதியினை பின்னுக்கு தள்ளுகின்றது. அந்த மரண பயத்தின் ஞானத்தால் ஒரு ரமணர் நமக்கு கிடைத்தார். அவருக்கு ஞானம் கிடைத்ததின்  காரணம் அவரது ஆத்ம விசாரம்  மற்றும் அவருள்ளான இறை தேடலே. ஆனால். நம் பயம் நமக்கு  ஞானத்தை தராமல் ஒருவித விரக்தியினைத்தான் தருகிறது.  காரணம் நமது வாழ்கைப் பயணத்தில் இதுவரை நமது தேடலாக பணம், பதவி, பொருள், குடும்ப உறவுகள் என ஒரு சிக்கலான வெளிவரமுடியாத சிலந்தி வலைக்குள்  சிக்குண்டதனால்தான். இருந்தாலும் நமது அந்திமகாலத்தில் ஏற்படும் குறைந்த பட்ச ஞானம் என்பது இன்னும் இந்த உலக மாயைகளை அனுபவிக்கவேண்டி ஆயுளை அதிகப்படுத்த இறைவனை வேண்டுகிறது.

எனவே, மரண பயம் தரும் தேடல் ஆயுள் நீடிப்பில் தொடங்குகிறது. அந்த ஆயுள் நீடிப்பினை வழங்கும் அதிகாரம் படைத்த ஒரே முதல்வன் அந்த ஈசன் என்பதை உணர்ந்து,  ஈசன் அடி  போற்றி!, எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! என நம்மை படைத்து  காத்து  ரட்சித்து வரும் நமசிவாய என்ற மூல மந்திரத்தை உணர்த்துவதோடு இந்த பிரபஞ்சத்தில் வாழும்  உலக ஜீவராசிகள் அனைத்திற்குமான தலைவனை தேடுகிறது. அந்த தேடலில், எப்படி உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு சிறப்பு மருத்துவம் இருக்கின்றதோ அதுபோல நமது உயிர் தேடலுக்கு நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள சிறப்பு அவதார கடவுளை வழிபடுவது சிறப்பானது அன்றோ. அந்த வகையில் நமது ஆயுளை நீடித்து ஆரோக்கியத்தை தரும் முழுமுதற் கடவுளாக கோவை நகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அன்னூர்  செல்லும் பாதையில் கோவில்பாளையம் என்ற பகுதியில் அமைந்துள்ள காலகாலேஸ்வரர் பற்றிய வரலாற்றைக் காண்போம்.

கொங்குநாட்டு திருக்கடையூர் என்ற பெயர் பெற்ற இந்த கோயில் சுமார் 1700 ஆண்டுகள் பழமையானது என்று கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன.  சோழர் காலத்து கட்டிட வேலைப்பாடுடன் இந்த கோயில் அமைந்துள்ளது அதன் பழமையை பறைசாற்றுகின்றது.  எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் கௌசிக நதிக்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பு. அனைத்து  உயிர்களையும் அதன் ஆயுள் முடியும்போது கவர்ந்து செல்வதற்கான முழு அதிகாரம் படைத்தவர் எமதர்மராஜன் என்பது நாம் அறிந்ததே. அந்த எமதர்மராஜனே சிவனின் கோபத்திற்குள்ளாகி அந்தச் சாபம் போக்க இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் என்பதால் எமபயம் உள்ளவர்கள், இக்கோயிலில் அருள் புரியும் காலன் வழிபட்ட ஈஸ்வரனான காலகாலேஸ்வரனை வணங்கினால் தமது பாவங்கள் நீங்கி ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம். எமனுக்கு சிவன் தந்த சாபம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வரலாற்றை புரட்டுவோம்.

ஒரு காலத்தில் மிருகண்டு முனிவருக்கும் அவரது தர்மபத்தினி மருதவல்லிக்கும் நெடுநாட்களாக குழந்தைப்பேறு இல்லாததால் சிவனை வேண்டி தவம் இயற்றினார் முனிவர். அவரது தவ வலிமையால் சிவன் முன்னே தோன்றி அவரது வேண்டுதலை ஏற்று குழந்தை வரம் நல்கினார். சிவனருளால் மருதவல்லிக்கு தெய்வக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டு வளர்த்து வந்தார்கள் அந்த தம்பதியினர். அறிவும் திருவும் வாய்க்கப்பெற்ற குழந்தை பிறக்கும். ஆனால், அந்தக் குழந்தைக்கு ஆயுள் பதினாறு வயதுவரை மட்டுமே என்ற சிவனின் கட்டளையினை ஏற்று   மார்க்கண்டேயனை வளர்த்து வந்தனர். அறிவும் ஞானமும் நிறைந்த தெய்வக் குழந்தையாதலால் தமது பதினாறு வயதில் தனது ஆயுள் முடியப்போவதை உணர்ந்த மார்க்கண்டேயன் திருக்கடையூரில் வீற்றிருக்கும் அமிர்தகடேஸ்வரரை வணங்கி வந்தார். 

காலம் முடிவுற்றதை அறிந்து தனது கடமையைச் செய்ய எமன் வர, தன்னை கவர்வதற்கு எமன் வருவதை உணர்ந்த பதினாறு வயது பாலகன் சிவனை ஆலிங்கனம் செய்து தன்னுயிரைக் கவர வரும் எமனிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு வேண்டினான்.  ஆனால், கடமை தவறாத எமன் பாசக் கயிற்றை வீச, அது மார்க்கண்டேயனுடன் அவன் ஆலிங்கனம் செய்திருந்த சிவனின் மீது படர, கோபம் கொண்ட சிவன் தன் பக்தனையும் தன்னையும் பாசக்கயிற்றால் தீண்டிய எமனை சபித்து எட்டி உதைக்க, எமன் பூலோகத்தில் சாதாரண மனிதனாக வந்து சேர்ந்தார். அதனால் உலகில் இறப்பு தடைபட்டு பூமாதேவி பாரம் சுமக்க முடியாமல் வருந்தினாள். இந்த நிலையில்  பூலோகம் வந்த எமன் கௌசிக நதிக்கரை வந்து தனது இழந்த சக்தியினை மீண்டும் பெற்று தனது கடமையினைச் செய்ய வேண்டி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய கற்பாறையினை தேடினார்.

கிடைக்காமல் போகவே,  தனது கையில் உள்ள குச்சியினால் நதிக்கரையிலுள்ள மணலைத் தோண்ட,  நதியிலிருந்து நுரை பொங்கி வர அந்த நுரையிலேயே லிங்கத் திருமேனியை அமைத்து வணங்க அருகில் தவமியற்றி வந்த விஸ்வாமித்ர முனிவர் அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்துதர, அதன்படி எமன் வழிபட்டதனால் தான் பெற்ற சாபம் நீங்கி விண்ணுலகம் சென்றார் என்கிறது இத்தல வரலாறு. இவ்வளவு சிறப்புகள் பெற்ற இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த பழமையான கோயிலில் இன்றளவும் உடல் ஆரோக்கியம் வேண்டியும், ஆயுள் வேண்டியும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் மற்றும் கனகாபிஷேகம் போன்ற நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருவது கண்கூடு. கோயிலுக்குள் நுழையும்முன் தீபஸ்தம்பம் நம்மை வரவேற்கின்றது. அதனைத் தாண்டி உள்ளே நுழைந்தால் சிறு மண்டபத்தில் நந்தியம் பெருமான் எழுந்தருளியிருக்கின்றார். அவரையும் வணங்கி உள்ளே மைய மண்டபத்தில் முக்கண்ணனாகிய காலகாலேஸ்வரர் லிங்க ரூபத்தில் நம்மை எதிர்கொள்கிறார். இந்த லிங்கம் நுரையினால் உருவாக்கப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.

கோயில் பிராகாரத்தைச் சுற்றி வலம் வரும்போது கன்னிமூலை கணபதி,  மற்றும் கோஷ்டமூர்த்தியாக லிங்கோத்பவர் வீற்றிருக்கின்றனர். சுற்றி வரும்போது குரு தட்சிணாமூர்த்தி சந்நதி நம்மை பக்தியின் உச்சத்திற்கு அழைத்துச்செல்கிறது.  காரணம் இந்த குருதட்சிணாமூர்த்தி தனது தலையில் லிங்கத்தை உடையவராக திகழ்கிறார். மேலும், ஆசியாவிலேயே பெரிய சிலாரூபம் என்ற சிறப்பு இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு உண்டு.  குருப்பெயர்ச்சி காலங்களின் கூடும் பக்தர்களின் கூட்டத்தினை வைத்தே எவ்வளவு சக்திவாய்ந்த குரு என உணர முடிகின்றது. மேலும் குருப்பெயர்ச்சி காலங்களில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு இங்கு நடைபெறும் குரு பரிகார ஹோமங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவரை வணங்கி கடிகாரச் சுற்றில் வலம் வரும்போது தனிச் சந்நதியில் அம்மன் கருணாகரவல்லியை தரிசிக்கலாம். பெயருக்கேற்ப கண்களில் கருணை ததும்ப தன்னை நாடிவந்த பக்தர்களை அரவணைக்கின்றாள்.

பக்தர்களின் வேண்டுதல்களை கருணையுடன் கேட்டு அவர்களின் துயர்துடைக்க ஈசனைப் பணிக்கும் கருணாமூர்த்தியாக அவளது வடிவம் அன்பின் ஊற்றாக
அமைதியின் வடிவமாக பாசத்தின் பிரதிபலிப்பாக வடித்த சிற்பிக்கு அன்னையின் அருள் முழுமையாக கிடைத்திருப்பதை இந்த சிலாரூபம் உறுதிப்படுத்துகிறது. 
சிவன் சந்நதிக்கும் அம்மன் சந்நதிக்கும் இடையில் சுப்பிரமணியர் சந்நதி நம்மை வசீகரிக்கிறது. காரணம் அழகன் முருகனின் புன்னகை தவழும் உதடு நம்மை வாழ்த்துவது போலவே உள்ளது.  இந்த முருகன் காலசுப்ரமணியர் என்ற பெயருடன் சோமாஸ்கந்தராக வீற்றிருக்கிறார். தீபாவளி முடிந்த வாரத்தில் இவருக்கு எடுக்கப்படும் சூரசமஹாரா விழாவினை காணக் கண்கோடி வேண்டும். அவ்வளவு சிறப்பு. அதுமட்டுமில்லாமல் இங்கு தனிச் சந்நதியில் நஞ்சுண்டேஸ்வரர் வீற்றிருக்கிறார். பக்தர்கள் தமக்கு நிகழும் விஷக் கடி போன்ற பிரச்னைகளுக்கு இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து பலன் பெறுகிறார்கள். மேலும், இங்கு நவகிரகங்களுக்கு சந்நதியும், சூரிய, சந்திரர்களுக்கு தனிச் சந்நதியும் அமைந்திருக்கிறது. கோவையில் இருந்து அன்னூர் செல்லும் நகர பேருந்தில் சென்றால் கோவில்பாளையம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே கோயில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡